நடிகை ட்விஷா சர்மா உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசம், நொய்டாவை சேர்ந்த நடிகை ட்விஷாவுக்கும் மத்திய பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங்குக்கும் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ட்விஷாவை ஆரம்பம் முதலே கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த 11-ம் தேதி போபாலில் உள்ள வீட்டில் ட்விஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை நவ்நீதி சர்மா, தாய் ரேகா சர்மா குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக ட்விஷாவின் தாய் ரேகா சர்மா கூறும்போது, “மாமியார் வீட்டில் நடந்த கொடுமைகளை எனது மகள் மொபைல்போனில் விரிவாக கூறியிருக்கிறார். எப்படியாவது தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சினார்’’ என்றார்.
இந்த சூழலில் ட்விஷாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அவரது கை, காது, முகம், தோள் பட்டைகளில் காயங்கள் இருந்தன. இந்த காயங்கள் அவர் உயிரிழப்பதற்கு முன்பாக ஏற்பட்டவை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகை ட்விஷா சர்மாவின் கடைசி நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் போபாலில் உள்ள கணவர் வீட்டில் ட்விஷா படியேறி மாடிக்கு செல்கிறார்.
பின்னர் அவரது உடலை கணவர் சமர்த் சிங் உள்ளிட்ட 3 பேர் மாடிப் படியில் இருந்து கீழே தூக்கி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ட்விஷாவின் உறவினர்கள் கூறும்போது, “தூக்கில் தொங்கி ட்விஷா உயிரிழந்ததாக கணவர் குடும்பத்தினர் கூறுகின்றனர். அப்படியென்றால் போலீஸார் வரும் வரை உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கக் கூடாது.
ஆனால் ட்விஷாவின் உடல் மாடியில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டிருப்பது வீடியோவில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு தடயங்களை கணவர் வீட்டார் மறைத்துள்ளனர். மாமியார் கொடுமை தாங்காமல் மூத்த மருமகள் ஏற்கெனவே வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். எங்கள் பிள்ளையை கொலை செய்து விட்டனர்’’ என்று குற்றம் சாட்டினர். ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவரது ஜாமீன் மனுவை போபால் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
மாமியார் விளக்கம்
ட்விஷாவின் மாமியார் கிரிபாலா ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு ட்விஷா எங்கள் வீட்டுக்கு வந்தார். எனது மகன் சமர்த் சிங்கை காதலிப்பதாகக் கூறினார். அப்போது ஒழுக்கமான பெண் போன்று அவர் நடந்து கொண்டார். ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. திரைப்படத் துறையில் இருந்ததால் அதே வாழ்க்கை முறையை வீட்டிலும் பின்பற்றினார். கர்ப்பமான நிலையில் கஞ்சாவை புகைத்து வந்தார்.
எனது கணவர் ராணுவத்தில் பணியாற்றினார். நாட்டுக்காக அவர் உயிரை தியாகம் செய்தார். எனது மூத்த மகன் விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். 2-வது மகன் சமர்த் சிங், கிரிமினல் வழக்கறிஞர் ஆவார். நாங்கள் பெயர், புகழோடு வாழும் குடும்பம். எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். எந்த வழக்கு, விசாரணையையும் சந்திக்கத்தயார். இவ்வாறு கிரிபாலா தெரிவித்தார்.



