யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பை இன்னும் சரியாக கணிப்பிடவில்லையென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் பல நூறு கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அழிந்திருக்கலாமென கருதப்படுகிறது.
எனினும், பல தரப்பினரின் துணிச்சலான நடவடிக்கையால், மருந்துக்களஞ்சியத்திலிருந்து சுமார் 40 வீதமான மருந்துக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திடீர் தீபத்திற்கு மின் ஒழுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதேவேளை, யாழ் மாவட்டத்தில் முறையான தீயணைப்பு வசதி இல்லாத குறையையும் இந்த சம்பவம் வெளிச்சமிட்டுள்ளது.
திடீர் தீ விபத்து
இன்று (9) அதிகாலை 1.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக்களஞசியப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே தீ கட்டுக்கடங்காமல் பரவ ஆரம்பித்தது. மருந்துகள், மருத்துவப் பொருட்களில் தீ பரவி பற்றியெரிய ஆரம்பித்தது.
வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சில நோயாளிகள் துணிச்சலாக செயற்பட்டு, மருந்துக்களஞ்சிப் பகுதிக்குள் நுழைந்து தீயை அணைக்க முயன்றதுடன், மருந்துப் பொருட்களை பாதுகாப்பாக வெளியேற்றத் தொடங்கினார்கள்.
அருகிலிருந்த விடுதியொன்றிலிருந்த நோயாளியொருவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர். அவர் தனது உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க, பொதுமக்களும் மீட்பு பணியில் களமிறங்கினர். மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு குளிர்பானங்களும் வழங்கினர்.
எளிதில் தீப்பற்றக்கூடிய ஸ்பிரிட் 400 லீற்றர் கொள்கலன் ஒன்றும் மருந்துக் களஞ்சியத்திற்குள் இருந்தது. மீட்புப் பணியாளர்கள் அதை பாதுகாப்பாக வெளியே உருட்டுக் கொண்டு வந்து விட்டனர். அதை அப்புறப்படுத்தாமல் விட்டிருந்தால் இன்னும் பெரிய அனர்த்தம் நிகழ்ந்திருக்கக்கூடும்.
தீ விபத்து ஏற்பட்டதும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் துரிதமாக செயற்பட்டு, யாழ் மாநகரசபை தீயணைப்பு பிரிவு, பொலிசார், முப்படையினருக்கும் தகவலளித்து மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.
வைத்தியசாலை பணிப்பாளர், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் மீட்பு பணி ஒருங்கிணைப்பை அங்கிருந்தவர்கள் பாராட்டிக் குறிப்பிட்டனர்.
விமானப்படை உதவி
யாழ் மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீணை அணைக்க முயற்சித்தாலும், அது பலனளிக்கவில்லை. பின்னர் விமானப்படையின் உதவி நாடப்பட்டது. பலாலி விமானப்படை தளத்தில் இருந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டன.
ஏற்கெனவே தீயணைப்பு பணியில் இருந்தவர்களுடன் முப்படையினரும் இணைந்து பல மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை அணைத்தனர்.
இதற்குள் பெருந்தொகையான மருந்துப் பொருட்கள் எரிந்தழிந்து விட்டன.
திருடர்கள் கைவரிசை
அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டு, பல தரப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தீப்பற்றி எரிந்த மருந்துக் களஞ்சியத்திற்குள் இருந்த மருந்துப் பொதிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். இதன்போது, சிலர் மருந்துப் பொதிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிச்செல்ல முயன்றனர். பொலிசார் அந்த முயற்சிகளை முறியத்தனர்.
தீயணைப்பு வாகனம் இல்லாத மாநகரசபை
யாழ்ப்பாணத்தின் முக்கிய உள்ளூராட்சிசபையான யாழ் மாநகரசபையே வளங்களும், வருமானமும் கூடிய சபையாகும். யாழில் தீயணைப்பு பிரிவு உள்ள ஒரேயொரு சபையும் அதுதான். என்றாலும், யாழ் மாநகரசபையிடம் முறையான தீயணைப்பு வாகனங்கள் இல்லாதது மிகப்பெரிய குறையே. யாழில் பெரிய தீ விபத்துக்கள் ஏற்பட்டால் யாழ் மாநகரசபையிடம் உள்ள வளங்களை கொண்டு அதை அணைக்க முடியாது. குறிப்பாக உயரமான கட்டிடங்களில் ஏற்படும் தீணை யாழ் மாநகரசபையின் தீயணைப்பு வளங்களை பயன்படுத்தி அணைக்க முடியாது.
யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்தை கட்டுப்படுத்துவதில் யாழ் மாநகரசபை ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையை பலரும் பாராட்டினாலும், அவர்களுக்கு போதிய வளங்கள், பயிற்சிகள் அவசியம் என்பது காலத்தின் தேவை.
யாழ் மாநகரசபையிடம் தற்போது இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. ஒன்று, தண்ணீர் பவுசரில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் இறைக்கும் இயந்திரம் மூலம் நீர் வெளியேற்றும் அமைப்பு. மற்றொன்று- தனியார் ஒருவர் சில வருடங்களின் முன்னர் பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்த தீயணைப்பு வாகனமொன்றை இலங்கை கொண்டு வந்த பின்னர், அதை யாழ் வர்த்தகர் சங்கமும், நொதேர்ன் வைத்தியசாலையும் வாங்கி, யாழ் மாநகரசபைக்கு வழங்கியிருந்தனர். அதுவும் பழுதடைந்திருந்த நிலையில், அண்மையில்தான் சேவைக்கு திரும்பியிருந்தது.
சக்தி வாய்ந்த தீயணைப்பு வாகனமொன்று யாழ் மாநகரசபையிடம் முன்னர் இருந்தது. என்றாலும், அதன் இயந்திரத்திற்கு அல்லாமல் வெளிப்புறத்திற்கே காப்புறுதி செய்திருந்தனர். இயந்திர சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வாகனம் கைவிடப்பட்டது.
தற்போது யாழை் மாநகரசபையிடம் இருக்கும் தீயணைப்பு வாகனத்தை விட கரைச்சி பிரதேசசபையிடம் நல்லதொரு தீயணைப்பு வாகனம் இருக்கிறது.
யாழ் மாநகரசபையிடம் தற்போதுள்ள தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தும் போதும், குழாய்களில் ஒழுக்கு ஏற்பட்டு பிளாஸ்ரிக் பைகளை சுற்றுவது போன்ற சம்பவங்களை பார்க்க முடிகிறது. தீயணைப்பு பிரிவுக்கு வளங்களையும், பயிற்சிகளையும் கொடுத்து முறைப்படி ஒழுங்குபடுத்துவதே யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க ஒரேயொரு வழியாகும்.
மின்ஒழுக்கே தீவிபத்திற்கு காரணம்?
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டதும், தீ பற்றியெரிவதற்குள்- இது திட்டமிட்ட சதியென்ற வதந்தித் தீயை சிலர் மூட்ட ஆரம்பித்தனர்.
எனினும், தடயவியல் பொலிசார் நடத்தி வரும் விசாரணையின் முடிவிலேயே உண்மையான காரணம் தெரியவரும் என்றாலும், தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில்- தடயவியல் சான்றுகளின் அடிப்படையில்- மின் ஒழுங்கினால் ஏற்பட்ட தீ விபத்து என்பதற்கே நிறைய வாய்ப்புக்கள் இருப்பதாக பொலிசார் நம்புகிறார்கள் என அறிய முடிந்தது.
மருந்துக் களஞ்சியத்தின் குளிரூட்டப்பட்ட பகுதியில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ ஏற்பட்டு, ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
சத்திர சிகிச்சைகள் தொடர்கின்றன
பெருமளவு மருத்துவப் பொருட்கள் தீயில் அழிந்துள்ள நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நிலையை சுமுகமாக்க தொடர் முயற்சி செய்வதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது.
ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து தேவையான பொருட்களை பெற்று, இன்று திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் எதையும் தள்ளி வைக்காமல் இன்றே நடத்தி வருவதாக அறிய முடிகிறது.
தீவிபத்தை தொடர்ந்து வடக்கு ஆளுனர், கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.
இரசாயன பகுப்பாய்வின் பின்னரே மருத்துவக் களஞ்சிய தீப்பரவலுக்கான உண்மைக் காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ள அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
களஞ்சியத்தின் இழப்பு பல ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளதுடன் நோயாளருக்கான மருத்துவ சேவையில் பாதிப்புகள் ஏற்படாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
”இந்த அனர்த்தம் எமது மக்களுக்கு பேரிழப்பாகும். இது தற்செயல் நிகழ்வோ அன்றி ஏதாவது சதியோ என்று பலவாறான கோணங்களில் ஆராயப்படுகின்றது.
ஆனாலும் இது சதிச் செயலாக இருக்காது என நம்புகின்றேன். தற்போது துறைசார் தரப்பினரது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் துறைசார் அமைச்சுக்கு தெரியப்படுத்தி தேவையான மருந்துப் பொருட்களை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.



