தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) மிகவும் சிறப்பாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டு தோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி பங்கேற்றிருந்தார். சிறப்பு விருந்தினர்களாகக் கிழக்கு மாகாணக் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் மு.அ. முகமது சுல்பீக்கர் அபூபக்கர் மற்றும் இயற்கை வழிச் செயற்பாட்டாளர் சி. சுந்தரேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இவ் விழாவில் மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் முதல் 250 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குச் சூழலியல் ஆசான் க. சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்பட்டன.
முதலாம் இடத்தைப் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த டிலுக்ஷிகா மதிவதனன் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த டிலுக்ஷினி டன்ஸ்ரன் வெள்ளிப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மூன்றாம் இடத்தைப் பெற்ற சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த றம்யா றமேஸ் மட்டக்களப்பு சென்.ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த அன்ரனி கிங்சிலி யனுசன் மன்னார் டி லா சால் கல்லூரியைச் சேர்ந்த கிறிஸ்துராசா அன்ரனி டிலைக்சன் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
தாலகாவலர் மு. க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுவரும் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான விருதை இம்முறை சிவகுமாரன் நிரோசன் பெற்றிருந்தார். சிறுதானிய பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு தேனீ வளர்ப்பு குறுங்காடுகள் உருவாக்கம் உட்படப் பல்வேறு சூழல்நேயப் பணிகளை ஆற்றிவரும் இவருக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் சிறந்த செய்கையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மாணாக்க உழவர்களாகவும், தாவரங்களை அடையாளம் காணும் போட்டியில் அதிக எண்ணிக்கையான தாவரங்களை அடையாளம் கண்டவர்கள் தாவராவதானிகளாகவும்; சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
வரவேற்புரையைப் பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைப் பொதுச்செயலாளர் கை. சரவணனும், நன்றியுரையைப் பசுமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் ம. கஜேந்திரனும் ஆற்றியிருந்தார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தார் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறிய இவ்விழாவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் வாத்திய இசைக்கச்சேரியும் இடம்பெற்றது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வழங்கப்பட்டுவரும் பசுமை அமைதி விருதுகள் இலங்கையில் வழங்கப்பட்டு வரும் சூழல்சார் விருதுகளில் அனைவரினதும் கவனத்தைப் பெற்ற முதன்மை விருதுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.



