அர்ச்சுனாக்களின் அரசியல்: பாடம் கற்காத ஈழத்தமிழர்கள்!

Date:

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. முன்னர் ஒரு காலத்தில் தமிழக திராவிட இயக்கத்தின் கொள்கை தொடங்கி மேடைப்பேச்சுவரை ஈழத்தமிழர்களின் வாழ்க்கையிலும் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தியது. ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழக திராவிட கட்சிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்குமான முந்தைய நெருக்கம் இல்லாமல் போனது.

என்றாலும், பிந்தைய மாற்றமாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது ஒரு சிறு தொகுதி ஈழத்தமிழர்களுக்கு ஈர்ப்புண்டு. இம்முறை சட்டமன்ற தேர்தல் சமயத்தில், யாழ்ப்பாணத்தின் ஓரிரண்டு இடங்களில் சீமானின் பனர், கட்அவுட் காணப்பட்டது. சீமானின் மேடைப் பேச்சு வீடியோக்களை பார்க்கும் பல ஈழத்தமிழர்கள் உள்ளனர்.

இம்முறை சட்டமன்ற தேர்தலையொட்டிய மாற்றங்களில் ஒன்றாக, நடிகர் விஜய் உடைய தமிழக வெற்றிக்கழகத்திற்கும் சமூக ஊடகங்களில் சில ஈழத்தமிழர்கள் ஆதரவளிப்பதை காண முடிந்தது. சமூக ஊடகங்களில் பகிரங்கமாக கருத்திடாவிட்டாலும், விஜய்யை ஆதரிக்கும் ஈழத்தமிழ் இளையவர்களை கண்டிருக்கிறேன். இவர்களில் பலர் விடலைகள். அவ்வளவாக அரசியல் மயப்படாதவர்கள். இன்னும் சிலர் ஓரளவு வயதானவர்கள்தான்.

திராவிட இயக்கங்களிற்கு மாற்றாக விஜய்யை இவர்கள் கருதுகிறார்கள் என்றால், ஓரளவு வயதானாலும் அவர்களில் அரசியல் புரிதல் பற்றிய கேள்வியுள்ளது. என்றாலும், அதை இப்போது பேச வேண்டியதில்லை. நடிகர் விஜய்யின் அரசியல் பற்றி மட்டும் பேசலாம்.

இலங்கையின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் ஒரு வித்தியாசமான சூழல் நிலவியது. தீவிர தமிழ் தேசிய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மாற்றாக, ஊசி அர்ச்சுனா, தேசிய மக்கள் சக்தி வகையறாக்கள் மீது ஒளிவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு தேர்தலிலும்- புதியவர்களுக்கு வழிவிடுங்கள் என்ற கோசத்தை ஆசனத்தை எதிர்பார்க்கும், நேரடியாக பதவியை எதிர்பார்க்கும் இளவயதுக்காரர்கள் முன்னெடுப்பதுண்டு. அது ஒரளவு சமூக அப்பிராயமாக மாறுவதுமுண்டு. பழையவர்கள் எவ்வளவு காலம் இருக்கிறார்கள், என்ன செய்தார்கள், புதியவர்கள் வந்தால் மாற்றம் வரும் என இதையொட்டி பலரும் புலம்புவதுண்டு.

இளையவர்களுக்கு வழிவிடுங்கள் என்ற கோசமே- ஒரு அரசியல் மயப்படாத கோசம்தான். ஒருவர் இளையவர் என்பதற்காக அவருக்கு வழிவிட வேண்டிய அவசியமில்லை. அரசியலில் புதிய சிந்தனைகள் புகுத்தப்பட வேண்டும் என்பது இளையவர்களுக்கு வழிவிடுவதில்லை. அதற்காக, நினைவு திரும்பாத சமயத்திலும் இரா.சம்பந்தன் போல நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியின் தலைவராக இருக்கக்கூடாது. ஒரு கட்சியாக புதுமைக்கும், அனுபவத்திற்குமிடையிலான சமநிலையை பேணி, புதிய சிந்தனைகளை புகுத்தி, .இளையவர்களை தலைமைத்துவத்திற்கு தயார் செய்து, படிப்படியாக வளர்த்து வர வேண்டியது கூட்டு பொறுப்பு. அதை தமிழ் கட்சிகள் செய்ய வேண்டும்.

இளையவர்கள் செயற்பாட்டாளர்களாக இருந்து, படிப்படியாக வளர்ந்து வர வேண்டும். இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலை கூட்டணி போன்றவற்றில், இளையவர்கள் பல தசாப்தங்களாக செயற்பட்டு, புடம்போடப்பட்டு, படிப்படியாக முன்னேறி வந்தார்கள். மாவை சேனாதிராசா மாளிகை கட்டினார், குடும்பத்திற்கு சொத்து சேர்த்தார், நீண்டகாலம் பதவியில் இருக்கிறார் என கடந்த தேர்தல் சமயத்தில் ஒரு விசமப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. உண்மையில் மாவை சேனாதிராசாவின் வீடு, யாழ்ப்பாணத்தின் மேல் மத்தியதர வர்க்கத்தினரின் வீட்டையொத்தது. அது பிரச்சாரப்படுத்தப்பட்டதை போல ஒரு மாளிகையல்ல. மாவை சேனாதிராசா பல தடவைகள் சிறை சென்றார். தாக்கப்பட்டார். அந்த சம்பவங்கள் நடந்தவுடன், அவர் தனக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டுமென அடம்பிடிக்கவில்லை. அவர் நடுத்தர வயதை தொட்டபோதுதான் எம்.பியானார்.

தமிழ் தேசியம் பேசிய கட்சிகளின் வேட்பாளர்களை விட ஊசி அர்ச்சுனாவும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களும் அதிக வாக்குகளை பெற்றனர்.

அர்ச்சுனா தற்குறித்தனமாக நடக்கிறார் என்ற விமர்சனங்கள் அப்போதே எழுந்தது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பிள்ளைப்பூச்சிகள், வாய் திறந்தும் பேசத் தெரியாதவர்கள், அப்படி பேசத் தெரிந்தாலும், கட்சி அனுமதித்தால் மட்டுமே பேச முடியும் என்ற யதார்த்தங்கள் முன்வைக்கப்பட்ட போதும், வாக்காளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் அர்ச்சுனா செயற்பட்ட விதத்தினால், அவர் மாற்றாக இருப்பார் என இளையவர்கள், பெண்கள் என பல தரப்பினர் அவருக்கு வாக்களித்தனர். அவருக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள், தமது தலையில் தாம மண்ணள்ளிப் போட்டு விட்டோம் என்பதை மிக தாமதமாக இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இன்னொரு தேர்தலில் அவர் வெற்றியீட்டப் போவதில்லை. ஆனால் ஒருமுறையே அவர் ஏற்படுத்திய சேதாரங்கள் ஏராளம்.

அர்ச்சுனா மட்டுமல்ல, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்களும் தமது தீர்மானத்தில் திருப்தியாக இல்லை.

கடந்த தேர்தலின் பின்னர், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான மக்களிடமிருந்து- முன்னைய காலத்தை போல எம்.பியை சந்திக்க முடியவில்லையென்ற ஆதங்கத்தை அவதானித்துள்ளேன்.

முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அல்லது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்குமிடையில் இலகுவான தொடர்பாடல் வழிமுறையிருந்தது. இப்போது அது இல்லை. புதிய எம்.பிக்களை எங்கு சந்திப்பது என்ற குழப்பத்தை கண்டிருக்கிறேன். ஒரு விவகாரத்தை எம்.பியொருவருடன் பேசினால், அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார், புரிந்துகொள்வார் என்ற குழப்பத்தை சமூக அமைப்புக்களிடம் கண்டேன்.

இதன் அர்த்தம் முன்னைய அரசியல் பிரதிநிதிகள் குறைகளே அற்றவர்கள் என்பதல்ல. அவர்களுக்கு மாற்றாக தெரிவு செய்பவர்கள் அவர்களை விட சிறப்பானவர்களாக இருக்க வேண்டுமென்பதே பொருள்.

யாழ்ப்பாணத்தில் ஊசி அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராகிய பின்னர், நாடாளுமன்ற உறுப்பினருக்கான மாண்பை பேணும் விதமாக நடந்து கொண்டது குறைவு. அபிவிருத்திக்குழு கூட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி தன் மீதான கவனக்குவிப்பை மேற்கொள்வதை மட்டுமே அவர் செய்தார். எந்த விடயத்திற்கும் தீர்வை அவரால் கண்டறிய முடியவில்லை. தன் பகையாளிகளை தாக்குமிடமாக பாராளுமன்றத்தை பயன்படுத்தினார். மற்றவர்களை சொட்டை சொல்லுமிடமாக பேஸ்புக்கை பயன்படுத்தினார்.

அவரது செயற்பாடுகளினால்தான் அவரை யாழ்ப்பாணத்தில் தற்குறி என விளிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக்கழகத்தையும் இப்போது தமிழகத்தில் தற்குறி என்றுதான் விளிக்கிறார்கள்.

தமிழகத்தில் மாநில உரிமை, மொழி உரிமை, இடஒதுக்கீடு, சமச்சீர் கல்வி என நீண்ட வரலாற்றை கொண்ட திராவிட இயக்கத்திற்கு மாற்றாக தமிழக வெற்றிக்கழகத்தை இப்போது சில ஈழத்தமிழர்கள் குறிப்பிடுவதை காண முடிந்தது.

வாரிசு அரசியல், நீண்டகால ஆட்சி, ஊழல் என திராவிட இயக்கங்கள் மீது தமிழக வெற்றிக்கழகமும், அதன் ஆதரவாளர்களாக ஈழத்தமிழர்களும் குறிப்பிடுகிறார்கள்.

ஊழல் என்பது தென்னாசிய பிராந்தியத்தின் அரசியலில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மக்களுக்கும் அதில் அவ்வளவு அக்கறையிருப்பதாக தெரியவில்லை. இதன் அர்த்தம்- ஊழலை வெகுஜன மயப்படுத்துவதல்ல. யார் ஆட்சிக்கு வந்தாலும், ஊழல் இருக்குமென்பதை குறிப்பிடவே. திராவிட இயக்க தலைவர்கள் ஆட்சிக்கு வர முன்னர், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்ததில்லை. விஜய் மீது உள்ளது. அவரது திரைப்பட வருவாயை குறைத்து காண்பித்ததற்கான நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.

விஜய் கட்சி ஆரம்பித்ததுமே, அவர் திராவிட இயக்கங்களிற்கு மாற்று என அப்பாவித்தனமாக நம்புகிறார்கள். அதற்கான வாய்ப்பை விட, அவர் ஆட்சிக்கு வந்தால் மோசமான ஊழல் பெருச்சாளியாக இருப்பார் என்பதற்கான வாய்ப்பே அதிகம் என்பதையே நீதிமன்ற அபராத விவகாரம் புலப்படுத்துகிறது.

வாரிசு அரசியல், நீண்டகால ஆட்சி போன்ற விவகாரங்களில் ஈழத்தமிழர்கள் அக்கறைப்பட வேண்டியதில்லை. வடகொரிய தலைவர் போல திமுக கட்சியை கருணாநிதி குடும்பம் கட்டுப்படுத்தவில்லை. தமிழகத்தை ஆளவில்லை. முழுமையான ஜனநாயக பண்புகளின் அடிப்படையிலேயே அவர்கள் கட்சிக்கும், தமிழகத்திற்கும் தலைவர்கள் ஆகிறார்கள். அவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பது பொறாமையை உண்டாக்கினால் அதற்கு மருந்தில்லை, மற்றும்படி ஈழத்தமிழர்கள் இதில் அக்கறை கொள்ள வேண்டியதில்லை.

பங்களாவை அடைத்துக் கொண்டு தனிமையில் இருப்பது, வெற்றுச்சுவரை வெறித்துக்கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது, யாரையும் சந்திப்பதில்லை, வெய்யில் ஆகாது, வியர்வை ஆகாது, தனிமனித ஒழுங்கீனங்கள் என விஜய் மீது பயங்கொள்ள ஏராளம் காரணங்கள் உள்ளன.

ஆனால், வெறும் திரைக்கவர்ச்சி என்ற ஒன்றை மட்டும் நம்பி, அவர் ஒரு அரசியல் மாற்று என அப்பாவித்தனமாக நம்புவது, இன்னொரு அர்ச்சுனாவை உருவாக்குவதாக ஆகிவிடும்.

இம்முறை தேர்தலில் விஜய் ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லையன்பதுதான் இப்போதுள்ள ஒரேயொரு ஆறுதல். அவர் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்து, தன்னை அரசியலுக்கு தயார்ப்படுத்தி, பின்னொரு காலத்தில் முதல்வராகினால் அதை வரவேற்கலாம்.

யாழ்ப்பாண எம்.பி அர்ச்சுனா இனிமேல் அரசியல் வாய்ப்பில்லையென்பதால் இப்போதே யூடியூப் ஒன்றை உபரி வருமானமாக ஆரம்பித்துள்ளார். அது தன்னை உணர்ந்த செயற்பாடு. அதேபோல, விஜய்யும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது, அரசியலுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளட்டும்.த

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்