பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஐரோப்பிய தகுதி சுற்றின் பிளே ஆஃப் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இதில் போஸ்னியாவில் உள்ள ஜெனிகா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் 4 முறை சம்பியனான இத்தாலி, தரவரிசையில் 66வது இடத்தில் உள்ள போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. 15வது நிமிடத்தில் இத்தாலி அணியின் மொயீஸ் கீன் கோல் அடித்து அசத்தினார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. 41வது நிமிடத்தில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்டோனிக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
இதனால் இத்தாலி அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. 79-வது நிமிடத்தில் போஸ்னியா பதிலடி கொடுத்தது. அந்த அணியின் வீரர் ஹாரிஸ் தபகோவிச் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது. அந்த அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவது இது 2வது முறையாகும். கடைசியாக அந்த கடந்த 2014ஆம் முதன்முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி இருந்தது.
அதேவேளையில் இத்தாலி அணி தொடர்ச்சியாக 3வது முறையாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறி உள்ளது. அந்த அணி 2018 மற்றும் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கும் தகுதி பெற இல்லை. 1934, 1934, 1982 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி தற்போதைய தோல்வியால் கால்பந்தின் மிகப்பெரிய திருவிழாவில் 16 ஆண்டுகளாக நுழைய முடியாமல் தவிப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மற்ற ஆட்டங்களில் சுவீடன் 3-2 என்ற கோல் கணக்கில் போலந்து அணியையும், துருக்கி 1-0 என்ற கோல் கணக்கில் கோசோவோ அணியையும் தோற்கடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. துருக்கி அணி 2002ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுகிறது. செக் குடியரசு – டென்மார்க் அணிகள் மோதிய ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் 1-1 சமனில் முடிந்தது.
இதன் பின்னர் வழங்கப்பட்ட 30 நிமிடங்கள் கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பெனால்டி ஷுட் அவுட்டில் செக்குடியரசு 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால்பதித்தது. அந்த அணி 2006ஆம் ஆண்டுக்கு பின் தற்போதுதான் உலகக் கோப்பை தொடரில் நுழைகிறது.
40 வருடங்களுக்கு பிறகு ஈராக்
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் கண்டங்களுக்கு இடையிலான பிளே ஆஃப் போட்டியில் நேற்று மெக்சிகோவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈராக் – பொலிவியா அணிகள் மோதின.
இதில் ஈராக் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 10வது நிமிடத்தில் அலி அல்-ஹமாதியும், 53வது நிமிடத்தில் அய்மன் ஹுசைனும் கோல் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் கடைசி அணியாக ஈராக் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 40 வருடங்களுக்கு பிறகு ஈராக் அணி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால்பதிக்கிறது. கடைசியாக அந்த 1986ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தது.



