தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி சம்பந்தனை தமிழர்களின் தலைவராக்கி பாராளுமன்றத்துக்கு அனுப்பி அழகு பார்த்த தேசிய தலைவரை கொல்லுமாறு சொன்ன சம்பந்தன் ஒரு நயவஞ்சகர். எனவே அவரை கொல்ல சொன்ன தமிழரசு கட்சி இந்த மண்ணில் இருக்க கூடாது. அவ்வாறு இரா.சாணக்கியன் கிழக்கு மண்ணில் இருந்து எம். சுமந்திரன் கட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்படுவார்கள். இதற்காகவே கட்சி செயல்படும் என ஈழ தமிழர் முன்னணி கட்சி தலைவர் அன்பின் இல்லம் அறக்கட்டளை தலைவருமான எஸ்.ஜெயா சரவணா தெரிவித்தார்
மட்டக்களப்பு கிரானில் புதிய கட்சியான ஈழதமிழர் முன்னணி கட்சி மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளை காரியாலய திறப்பு விழாவும் கட்சி அங்குராப்பணம் ஞாயிற்றுக்கிழமை (23) சம்பிராய பூர்வமாக இடம்பெற்றது இதன்போது கட்சியின் தலைவர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்-
அரசியல் என்பது ஒரு சொல்லாடல் அல்ல அது எமது வாழ்வை நிர்ணயிக்கும் ஒரு கூர்மையான ஆயுதம் அந்த ஆயுதத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது எங்கள் கெட்டித்தனமாக இருக்கும்.
இந்த நிலையில் எமது தேசிய தலைவர் தங்களின் சுயநலத்துக்காக செயற்படுபவர்களின் கையில் கொடுத்த படியால் இன்று எமது முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நடுத் தெருவில் நிற்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
2009 போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு வன்னி மாவட்டத்தில் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவிகளை செய்து வந்தேன்
அப்போது கிழக்கு மாகாண போராளிகளை இனம் கண்டு அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக கடந்த 4 வருடங்களுக்கு முன்னாள் கால் பதித்த போது எனக்கு கை கொடுத்தது கருணா அம்மான்.
எனவே கருணா அம்மானுடன் இருந்தவர் இப்போது புதிய கட்சி ஆரம்பித்து டீல் போடுகின்றார் என்பர். அது ஒரு டீல் அல்ல. நான்கு வருடத்துக்கு முன்னர் போராளிகளுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என சொன்ன போது கருணா அம்மான் எனக்கு தைரியத்தை கொடுத்த போது அந்த நிகழ்ச்சி நிரலின் போது 100 போராளிகளுக்கு நான் அந்த உதவி செய்தேன். அவ்வாறே கடந்த வருடம் 70 போராளிகளுக்கு அதை செய்தேன்
அதற்கு பின்னர் அவருடைய நிர்வாகம் சிலவற்றை இனம் கண்டு அந்த நிருவாகத்தில் என்னால் செயல்பட முடியாது என்பதற்காக அதில் இருந்து விலகினேன். அதன் பின்னால் ஒரு வருட உழைப்பின் பின்னர் இப்போது அதே மண்ணில் கட்சியையும் அறக்கட்டளையும் திறந்துள்ளேன்.
சர்வதேச அரங்கில் பயங்கரவாதிகளுடனான போராட்டம் என்ற போர்வையில் சர்வதேச உதவியுடன் 2009 ஆண்டு ராஜபக்ச அரசு முள்ளி வாய்க்காலில் எங்களை தோற்கடித்த போது தலைவர் இரும்பு ஆயுதத்தை மௌனித்து அறிவாயுதம் என்பதை ஏற்படுத்தினா்.
இந்த நிலையில் இப்போது பொழுது போக்கு அம்சங்கள் வாழ்க்கை முறைகள் மாறி வருவதால் மண்ணின் மீதும் மக்கள் மீதும் உள்ள பற்று குறைந்து செல்கிறது. இதனை இனம் கண்டு மண்ணின் மீதான பற்றை ஊக்குவிக்க வேண்டும். அதற்கமைய அறிவாயுத போராட்டத்தை எங்கள் இளைஞர்களுக்கு கடத்த வேண்டும் .
ஆனால் இன்று தமிழ் தாயகமான வடக்கு கிழக்கு நிலை கேள்வி குறியாக இருக்கிறது. இதற்கு காரணம் தமிழரசு கட்சி நம்ப வைத்து கழுத்தறுத்தது. 2002ம் ஆண்டு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக களமிறக்கப்பட்டது.
2009 ஆண்டு தலைவரால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போது முள்ளிவாய்க்காலில் மாண்ட அத்தனை போராளிகள் தலைவர் உட்பட அனைவரும் கடைசி நிமிடத்தில் நினைத்திருப்பார்கள் எங்கள் அரசியல் கட்சியை களமிறக்கி உள்ளோம். அவர்கள் எமது போராளிகள் மாவீரர் குடும்பங்கள் மற்றும் மக்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் உயிரிழந்தனர். ஆனால் நடந்தது என்ன?
2009 க்கு முன் நாங்கள் கற்று தெரிந்து கொண்ட பாடங்கள் மண் மக்கள், போர் , கலாச்சாரம் போரை நடாத்துவதற்கு கட்டுகோப்பான அமைப்பு என்றால் என்ன? என அறிந்து கொண்டோம். ஆனால் 2009 பின் இனழிப்பு நிறுத்தப்பட்டு அந்த வலி குறையும் முன்னரே வடகிழக்கு பூராகவும் போதை பொருள் கலாச்சாரம் பரப்பப்பட்டது. மத தலங்கள் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் கையக்படுத்தப்பட்டதுடன் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள், பறிபோயுள்ளது.
இவைகள் 2009 க் முன்னர் நடைபெறவில்லை. ஆனால் இவைகள் 2009 பின்னர் தான் நடக்கின்றது. 25 வருடத்தின் பின்னர் தமிழ் இனம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது. கொழும்பில் தமிழர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் அவ்வாறு பத்துடன் பதினொன்றாக இருக்க வேண்டிவரும்.
எங்களுக்கான கலாச்சாரம் விழுமியம் இருக்காது. இதற்கு எல்லாம் காரணம் இந்த தமிழரசு கட்சி 22 பாராளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் யுத்தம் முடிந்த பின் போராளிகளின் நிலையை நினைத்தார்களா? அவர்களை ஒரு வழிப்படுத்தாமல் இருந்துள்ளனர்.
தலைவர் செத்தால்தான் நீங்கள் உயிருடன் இருக்கலாம் என சொன்ன சம்மந்தனின் கட்சியான தமிழரசு கட்சி இந்த நாட்டிலே இருக்க கூடாது. அதற்கு என்னுடைய உயிர் இருக்கும் வரை விடமாட்டேன். இரா.சாணக்கியன் எம்.சுமந்திரன் கட்சியில் இருந்து விரட்டப்பட்டு தேசியம் சார்ந்தவர்கள் இந்த கட்சியை எடுத்து நடத்த வேண்டும்.
இந்த நயவஞ்சகர்கள் கூட்டத்தை இந்த மண்ணில் இருந்து விரட்ட வேண்டும். அதற்கு தேர்தெடுத்த பிரதேசம் வீரம் நிறைந்த இந்த கிரான் மண்ணில் சத்தியம் செய்து தமிழர கட்சியை ஓடும்வரைக்கு விரட்டுவேன். இல்லாவிட்டால் அன்றுடன் நான் உயிரை விடுவேன்.
ஆயிரம் குற்றச்சாட்டு தெரிவிக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் நாங்கள் நல்லாக இருந்திருப்போம் என நினைப்பீர்கள். தலைவர் அழிந்து போக வேண்டும் என அப்போது இருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தொலைபேசியை நிறுத்திவிட்டு ஒடி ஒழித்தனர். இப்போது வெள்ளை வேட்டியை போட்டுக் கொண்டு திரிகிற இவர்கள் தேவைதானா?
எனவே எங்கள் கட்சி இந்த தமிழரசு கட்சி அழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்றார்.
-கனகராசா சரவணன்-



