-கருணாகரன்
இலங்கையில் ‘மாற்றத்துக்கான ஆட்சி – முன்னேற்றத்துக்கான அரசாங்கம்’ என்ற பிரகடனத்தோடு அதிகாரத்துக்கு வந்தது NPP. நாட்டுக்கும் மக்களுக்கும் மாற்றமும் முன்னேற்றமும் தேவையாக இருந்தது; இருக்கிறது. மக்களுடைய எதிர்பார்ப்பும் இதுதான். அவர்களுடைய நம்பிக்கையும் இதுவே. NPP யின் முயற்சிகளும் இதற்கானதாகவே உள்ளன. ஆனால், மக்களும் NPP யும் எதிர்பார்க்கும் மாற்றங்களைச் செய்வது அல்லது அதை உருவாக்குவது மிகக் கடினமானதாகவே உள்ளது. என்பதால்தான் தாமதங்களும் மந்தநிலையும் தடுமாற்றங்களும் தொடர்கின்றன. முக்கியமாகத் தடுமாற்றங்கள்.
NPP யின் தடுமாற்றங்கள்தான் அதனுடைய பயணத்துக்குத் தடையாக உள்ளது. பலரும் கருதுவதைப்போல NPP க்கு நெருக்கடி அதற்குள்ளிருந்தே உள்ளது. JVP தான் அதற்கு அழுத்தங்களையும் நெருக்கடிளையும் கொடுக்கிறது. நிபந்தனைகளை விதிக்கிறது. (வெளித் தரப்பின் நெருக்கடி குறைவு). இதனால்தான் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு NPP க்குத் தயக்கங்களும் தாமதங்களும் தடுமாற்றங்களும் உள்ளன. இதனை அது வென்றெடுக்க வேண்டும். மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்றால், மக்களுடைய நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் எனில் NPP யும் ஜே.வி.பியும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
இப்படிச் சொல்வதைச் சிலர் மறுத்துரைக்கக் கூடும். அவர்கள் NPP யின் ஓராண்டுச் சாதனைப் பட்டியலைப் பதிலாக முன்வைக்க முயற்சிக்கலாம். இருந்தாலும் அவர்கள் சிலவற்றை – ஆதாரமான உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதுவரையில் NPP அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் மாற்றத்துக்கானவை அல்ல. ஆனால், சில முக்கியமான நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- ஊழல்வாதிகளின் மீதான நடவடிக்கை (கைதுகளும் விசாரணைகளும்)
- போதைவஸ்து மற்றும் பாதாள உலகக் கும்பலின் மீதான துணிச்சலான நடவடிக்கை (கைதுகளும் சிறைவைப்புகளும் விசாரணைகளும்)
- சிறிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள்.
- காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கமைப்பு.
- படைமுகாம்கள் குறைப்பும் மக்களின் நிலங்கள் விடுவிப்பும் (வடக்குக் கிழக்கில்)
- ஊழல், லஞ்சம் போன்றவை குறைவு அல்லது மட்டுப்பட்டுள்ளது.
- ஜனநாயகவெளி விரிவடைந்துள்ளது. அச்சுறுத்தல் மற்றும் அச்ச நிலை குறைந்துள்ளது.
இவ்வாறான விடயங்கள் முக்கியமானவைதான். இவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள அல்லது ஏற்பட்டுள்ள மாற்றங்களும் முக்கியமானவையே. இவற்றைச் செய்வது இலகுவானதல்ல. ஆனால், இவை நாடும் மக்களும் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கான அடிப்படைகளை உருவாக்கப்போதுமானவை அல்ல. மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் நாடு எதிர்பார்க்கின்ற முன்னேற்றங்கள் – தேவைகளையும் நிறைவு செய்யக் கூடியனவும் அல்ல.
நாடும் மக்களும் எதிர்பார்க்கும் மாற்றங்களில் முக்கியமானவை:-
- பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் முன்னேற்றமும் (வாழ்க்கைச் சுமைக் குறைப்பும் தொழில் வாய்ப்புகளும் பொருளாதார நலன்களை எட்டக் கூடிய சாத்திங்களும்).
- அரசியல் தீர்வு (நிலையான அமைதியும் சமாதானமும்)
இவை இரண்டும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால்தான் நாடும் மக்களும் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் எட்டலாம். NPP யின் சாதனைகளாகவும் வரலாற்றில் நிலைபெறும்.
இவற்றுக்கு பொருத்தமான திட்டங்களும் தீர்மானங்களும் நடைமுறைகளும் அவசியம். அதற்கு முதல் இவற்றைப் பற்றிய தெளிவும் உறுதிப்பாடும் வேண்டும். குறிப்பாக பொருத்தமானதொரு பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்படுவது அவசியம். அந்தக் கொள்கையையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த – விரைவுபடுத்தப்பட்ட பொறிமுறை வேண்டும். அந்தப் பொறிமுறையின் நடைமுறைகள், அவற்றின் வெற்றி – தோல்விகளை மதிப்பீட்டாய்வு செய்தல், கண்காணித்து, குறைகளை நிவர்த்தித்து, சீரான அமூலாக்கம் செய்யும் திறன் அவசியம்.
இதையெல்லாம் சரியாகவும் சீராகவும் ஒழுங்கமைத்தால்தான் பொருளாதாரத் திட்டத்தில் சில படிகளில் முன்னேற்றத்தைக் காண முடியும். இதற்கு அப்பாலும் இதனோடு இணைந்த விடயங்கள் உண்டு. அதில் ஒன்று – பிரதானமானது – இனப் பிரச்சினையாகும். இலங்கையில் இனப்பிரச்னைக்குத் தீர்வைக் காணாமல், சமூகங்களை அமைதி நிலைக்குக் கொண்டு வராமல் பொருளாதார முன்னேற்றத்தைக் காணவும் முடியாது. பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும் முடியாது.
தவிர, பொருத்தமான பொருளாதாரக் கொள்கை என்றால் என்ன? அல்லது அது எப்படியானது என்பதைக் கண்டறிவதே பெரிய விடயமாகும்.
இலங்கையின் விவசாயப் பொருளாதாரமும் சுற்றுலாத்துறையின் மூலமான வருமானம் ஈட்டலும் மிகத் தொய்வான நிலையிலேயே உள்ளன. மேம்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களை யாரும் காட்டலாம். அவை நிலையானவையோ பாதுகாப்பானவையோ அல்ல. கொரோனாப் பெருந்தொற்று வந்தபோது சுற்றுலாத்துறைத் தளம்பலைச் சந்தித்தது. நாட்டில் அமைதியற்ற நிலை ஒன்று ஏற்படுமானால், அல்லது அமையற்ற தன்மை காணப்படுமானால், சுற்றுலாத்துறை சோபிக்காது. மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய அளவுக்கு அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் இல்லை. உதாரணமாக ஒன்றிரண்டு விடயங்களை இங்கே சுட்டிக் காட்டலாம்.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற – தொன்மையான இடங்களில் ஒன்று மிகிந்தலை விகாரையும் வளாகமும் ஆகும். அங்கே தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால், அந்தப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடியவாறு அல்லது அவர்கள் பயன்பெறுமாறு அங்கே ஆங்கிலம் மற்றும் பிற மொழியிலான அறிவித்தற்பலகைகள் எதுவும் இல்லை. கையேடுகள், விளக்கக் குறிப்புகள், பிற மொழிப் பரிச்சியம் உள்ள உத்தியோகத்தர்கள் என எந்த ஏற்பாடுமே இல்லை. ஆனால், இந்தப் பகுதியை அரசாங்கத்தின் தொல்லியற் திணைக்களமும் சுற்றுலாத்துறையுமே பொறுப்புடமை கொண்டுள்ளன. இவற்றைச் சீரமைப்பதோடு, குறித்த பகுதியைச் சுற்றுலாப் பயணிகள் பயணிப்பதற்கும் தங்கி, உண்டு, உறங்கிச் செல்வதற்கும் ஏற்றவாறு விருத்தி செய்யவும் வேண்டும்.
இதேநிலையில்தான் திருகோணமலையில் உள்ள கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியும் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்குள் அந்தப் பகுதியைப் பௌத்த மையமாக மாற்றுவதற்கு எடுத்திருக்கும் கரிசனையை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்றமாதிரிச் செலவிடவில்லை. இப்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள நிறைவாய்ப்புகள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. இதெல்லாம் அரசாங்கத்தின் பொருளாதாரம் பற்றிய கண்ணோட்டத்திலும் அக்கறையிலும் உள்ள குறைபாடுகளாகும். இந்த லட்சணத்தில் எப்படிச் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும்? அதன் மூலம் எப்படி நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கலாம்?
நாட்டின் அபிவிருத்தி என்பது பொருண்மிய மேம்பாட்டை எட்டுவதாகும். அதற்குப் பல வழிகள், பல காரியங்கள் உண்டு. முக்கியமாக உற்பத்தித்துறையை மேம்படுத்த வேண்டும். விவசாயம், கடற்தொழில் போன்ற பாரம்பரியத் தொழில்கள் – உற்பத்திகளுக்கு அப்பால், தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உள்ளுர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளைச் சர்வதேசச் சந்தையில் தேடிக் கண்டடைய வேண்டும். எலெக்ரோனிக் உற்பத்திகளை அல்லது அவற்றின் மூலத்தைப் பயன்படுத்தி முடிவுப் பொருட்களை வெளிநாட்டு உதவிகளோடு மேற்கொள்ளுதல் என இதை இன்னும் விரிவுபடுத்திக் கொள்வது அவசியம். எல்லாவற்றுக்கும் அப்பால் நிறைவான ஒரு பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டால்தான் தொழில்வாய்ப்புகளையும் வருமானத்தையும் எட்டலாம். இதில் ஜே.வி.பியின் ஈடுபாடு எந்தளவுக்கு உள்ளது என்ற கேள்வி உண்டு. ஆனால், இதுதான் எங்களுடைய பொருளாதாரக் கொள்கை என்று அது எந்த விவரமும் சொன்னதில்லை.
இதனால் NPP யின் நிகழ்ச்சி நிரல் மந்தமாகவே உள்ளது. இதைச் சரியாகக் கணிப்பிட்டிருக்கிறார் இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் பீலிக்ஸ் நியூமான். முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் இலங்கை இன்னும் மந்த நிலையிலேயே உள்ளது என்று அவர் கவலைப்படுகிறார். உண்மையான நிலவரம் இதுதான். மாற்ற வேண்டிய – கவனிக்க வேண்டிய விடயமும் இதுவே.
அடுத்தது, இனப்பிரச்சினைக்கான தீர்வாகும். இது மிகச் சிக்கலானது. NPP இதைக்குறித்து வாயே திறக்கவில்லை. ஏறக்குறையக் கள்ள மௌனமே காக்கப்படுகிறது. இனப் பிரச்சினை தொடர்பாக JVP யின் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே. வடக்குக் கிழக்கு இணைப்பைப் பிரித்தது தொடக்கம், இந்திய இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தது, மாகாணசபை முறையில் அக்கறையற்ற தன்மை, தமிழ் பேசும் மக்களின் உரிமை தொடர்பாகச் சிங்களப் பெருந்தேசியவாதச் சிந்தனையைக் கொண்டிருப்பது, மலையக மக்கள் தொடர்பான மாற்று எண்ணம் என எதிர்மறை உணர்வே அதற்குண்டு.
JVP யின் இந்த எல்லையை (மட்டுப்பாடுகளையும் எதிர்நிலைகளையும்) கடந்து NPP அரசியற் தீர்வுக்கான வேலைகளைச் செய்வது என்பது சுலபமானதல்ல. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹருணி அமரசூரிய போன்றவர்களுக்கு இனப்பிரச்சியைத் தீர்ப்பது தொடர்பாக நியாயபூர்வமான சிந்தனை இருக்கலாம். அவர்களால் சுயாதீனமாகச் செயற்படவோ, தீர்க்கமாக முடிவுகளை எடுக்கவோ முடியாது. ஜே.வி.பிக்குள் குணாம்ச மாற்றங்கள் நிகழ்ந்தால்தான் நிலைமையில் மாற்றம் ஏற்படும். அதற்கான சிந்தனை ஜே.வி.பிக்குள் தென்படவில்லை.
ஆனால், ஜே.வி.விக்கும் சரி, அதனுடைய புதிய முகமான NPP க்கும் சரி, இதொரு நல் வாய்ப்பு. பழைய தவறுகளைச் சீர்ப்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கம் கூடிய வாய்ப்பு. அதற்கு அவை துணிகரமான நடவடிக்கைளை விரைந்து முன்னெடுக்க வேண்டும். அரசியலில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் கூட அப்படித்தான். எதைச் செய்ய வேண்டுமோ அதை விரைவாகச் செய்து விட வேண்டும். எதைச் செய்யக் கூடாது அதைச் செய்யவே கூடாது.
முன்னர் ஆட்சியிலிருந்தவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாகவும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாகவும் பின்பற்றிய அதே நிலைப்பாட்டையும் அணுகுமுறையையும்தான் ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும் கொள்ளப்போகின்றன என்றால், மாற்றம் என்ற சொல்லை இலங்கையில் சமாதானம் என்ற சொல் எப்படி பொருள் இழந்து, நம்பிக்கை இழந்து, நிறமிழந்து கேலிச் சொல்லாகியதோ, அதைப்போலாகி விடும்.
அரசியில் ஆயிரம் சொல்லுக்கு இல்லாத மதிப்பு ஒரு செயலுக்குண்டு. அதைப் புரிந்து நடக்க வேண்டும் NPP.
00



