பாதாள உலகக் கும்பல் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபரான இஷார சேவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்களை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (24) உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு குற்றப்பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், 19.02.2025 அன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் அமைந்துள்ள கூடுதல் நீதவான் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் பிற சந்தேக நபர்களையும் அந்த திகதி வரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதவான் உத்தரவிட்டார். தற்போது பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள், ஜூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
செவ்வந்தி கடல் வழியாக இந்தியா செல்ல உதவிய ஆனந்தனிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தை சேர்ந்த ஆனந்தன், அவரது தங்கையின் கணவரான ரொசான் ஆகியோர் தற்போது பொலிசாரின் தடுப்பு காவலில் உள்ளனர். செவ்வந்தியை இந்தியாவுக்கு கடத்தியதற்காக, கெஹெல்பத்தர பத்மே கும்பலிடமிருந்து ஆனந்தன் பணமும், கைத்துப்பாக்கியும் பிரதியுபகாரமாக பெற்றுள்ளார்.
கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் உள்ள ஆனந்தனின் பாதுகாப்பு இல்லத்தில் செவ்வந்தி தங்க வைக்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்செல்ல பயன்படுத்தப்பட்ட படகு நேற்று (24) யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் ஆனந்தனுக்கு சொந்தமானதே.




