”NPP அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை, தென்னிலங்கை அரசியற் சூழலில் எத்தகைய நிலை மாற்றத்துடன் தொடர்புபட்டுள்ளது?” என்று கேட்கிறார் புலம்பெயர்ந்து வாழும் நண்பர் ஒருவர்.
இந்தக் கேள்வியை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் கேட்டேன். அவர் சொன்னார், “ரணிலின் கைது தென்னிலங்கை அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது” என்று.
“எப்படியான அதிவலைகளை உருவாக்கியுள்ளது? எந்தத் தரப்புகளிடம் அப்படியான நிலை உள்ளது?” என்று அவரிடமே கேட்டேன்.
“பொதுவாகவே எல்லா மட்டங்களிலும் ஒரு அதிர்வலை காணப்படுகிறது. அரசாங்கத்தரப்பிற்குள்ளும் வெவ்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன போல இருக்கு“ என்றார் மனோ.
இதேகேள்வியை தென்னிலங்கையில் உள்ள சிங்கள ஊடக நண்பர் ஒருவரிடமும் கேட்டேன். அவர் சொன்னார், “ரணிலின் கைது பலரும் எதிர்பார்த்திருக்காத ஒன்றுதான். ஆனால், இதெல்லாம் நடக்கக் கூடியதுதான் என்பதை NPP ஆட்சிக்கு வந்தபோதே எதிர்பார்த்திருக்க வேண்டும். ரணிலின் கைது கொழும்பில் உயர் குழாத்திற்கு ஒரு கவலையை ஏற்படுத்தி விடயமாகவே உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தை எந்தளவுக்கு நேர்மையாக எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. உண்மையாகவே அவர்கள் இதைச் சீரியஸாக எடுத்திருந்தால், ஐ.தே.கவும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கும். அந்த மாதிரியெல்லாம் தெரியவில்லை. அப்படித்தான் ஏனைய கட்சிகளும் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் உள்ளன. ஏனென்றால் இந்தக் கைது ஒரு சட்டப் பிரச்சினை. வழக்கில் உள்ள விவகாரமாக இருப்பதால் இறுதி முடிவு எப்படி அமையும் என்று சரியாகத் தெரியாது. ரணிலுக்குப் பாதகமான முறையில் தீர்ப்பு வந்தால் ஏனைய கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம். அது மட்டுமல்ல, கடந்த காலத்தில் ஒவ்வொரு ஆட்சியின்போதும் விட்ட தவறுகளை எல்லாம் நடவடிக்கைக்கு எடுத்தால் இவர்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. ஆகவே பெரிய அளவில் இந்தப் பிரச்சினை அரசியல் மாற்றங்களை உருவாக்கக் கூடிய நிலை இல்லை. என்றாலும் இதையெல்லாம் அரசாங்கம் எப்படி கையாளப்போகிறது என்பதைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும்..” என்றார் அவர்.
இந்த இரண்டு வாக்குமூலங்களும் கவனத்திற்குரியவை. ஏனென்றால், ஒன்று, எதிர்த்தரப்பிலுள்ள ஒரு அரசியற் தலைவருடையது. அவர் தன்னுடைய நோக்கு நிலையிலும் அவதானிப்பிலும் தென்பட்டவற்றைச் சொல்கிறார். ஏறக்குறைய தெற்கின் அரசியற் கட்சிகளில் பெரும்பாலானவையும் ரணிலின் கைதினை வைத்து தமக்கேற்ற வகையில் ஒரு அரசியல் முன்னெடுப்பைச் செய்ய விளைவதை நாமும் அவதானிக்க முடிகிறது. இதற்குக் காரணம், ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டவுடன் ஒரு சிறிய அளவில் மக்கள் திரண்டு தங்களுடைய அனுதாப எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். கோட்டை நீதிமன்றத்துக்கு அவரைக் கொண்டு சென்றபோதும் ஆதரவாளர்களும் எதிர்க்கட்சியினரும் திரண்டிருந்தனர். இதையே மனோ அங்கே ஒரு அதிர்வலை உருவாகியிருக்கிறது என்கிறார்.
இது எதிர்க்கட்சிகளுக்குச் சிறியதொரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. மற்றும்படி NPP க்குள்ளும் மாற்று அபிப்பிராயங்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதை உறுதிப்படுத்த முடியவில்லை. வெளியே அப்படி எந்த அசுமாத்தத்தையும் காணவில்லை.
மற்றது, தெற்கிலிருக்கும் சிங்கள ஊடகவியலாளர் பிரதிபலிக்கும் கருத்து. ஏறக்குறைய சுயாதீனத் தன்மையுடையது. அவர் தன்னுடைய கண்ணோட்டத்தையும் அதிற் சேர்த்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அந்தக் கருத்துப் பொது அவதானிப்பும் யதார்த்தமும் உடையது.
இவற்றை வைத்துக் கொண்டு நாம் ஏனைய விடயங்களை நோக்கலாம்.
இன்றைய தென்னிலங்கை அரசியற் சூழலை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். ஒன்று எதிர்க்கட்சிகள் அல்லது முந்திய ஆட்சித் தரப்புகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அதற்கான ஊடகங்களும்.
இரண்டாவது, மாற்றத்தை விரும்புகின்ற மக்களும் அவர்கள் ஆதரிக்கின்ற NPP அரசாங்கமும் அதற்கான ஊடகப் பரப்பும்.
இவை இரண்டும் இரண்டு விதமாக இந்தக் கைது விடயத்தை நோக்குகின்றன. முக்கியமாக முதலாவது தரப்பான எதிர்க்கட்சிகள் ரணிலின் கைதைத் தமக்கான அரசியல் முதலீடாக்குவதற்கு முயற்சிக்கின்றன. இதற்கான காரணம் பலரும் அறிந்ததுதான். NPP யின் ஆட்சியை எதிர்கொள்ள முடியாத தவிப்பிலிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இந்தக் கைது ஒரு எளிய – மலினமான அல்லது பலவீனமான அரசியல் முதலீடாகும்.
வேறு வழிகளில் அரசாங்கத்தைச் சவாலுக்குட்படுத்துவதற்கு அவற்றினால் இப்பொழுது முடியாமல் உள்ளது. அதற்குக் காலம் எடுக்கலாம். அல்லது அரசாங்கத்தின் மீது சனங்களுக்கு ஏமாற்றமும் எதிர்ப்புணர்வும் ஏற்பட வேண்டும்.
அதற்கும் காலம் எடுக்கும். ஏனென்றால் இப்பொழுதுதான் NPP பிரகடனப்படுத்திய விடயங்களை மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது. அதாவது NNP ஆட்சி என்ற அடையாளத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
அப்படிச் செய்யும்போது இந்த மாதிரியான அலைகள் உருவாகுவது இயல்பு. எதிர்பார்க்கக் கூடியதுதான். இதை விடக் கடினமான காட்சிகளை எதிர்காலத்தில் மேலும் பார்க்க்க் கூடிய நிலையும் (சூழலும்) உருவாகக்கூடும்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதை விட NPP ஆட்சியில் எதுவும் நடக்கும் என்று சொல்கிறார் ஒரு நண்பர். அவர் அரசியலில் பெரிய ஈடுபாடு காட்டுகின்றவர் அல்ல. ஆனால், NPP ஆட்சிக்கு வந்த பிறகு உற்சாகமான முறையில் அரசியல் பேசுகிறார்.
ரணிலின் கைதை அரசியற் பழிவாங்கலாகப் பார்க்கின்ற ஒரு சாரார் உள்ளனர். அவர்கள் அதற்கு இரண்டு காரணங்களைப் பிரதானமாகச் சொல்கிறார்கள்.
ன்பது.
ஆனால், இதை மறுக்கும் மறுதரப்பு, “ரணில் குற்றங்களின் நாயகன். மட்டுமல்ல, ராஜபக்ஸக்கள் உட்படப் பல குற்றங்களைச் செய்தவர்களையும் காப்பாற்றியவர். கடந்த கால ஆட்சியின்போது மிக மோசமான முறையில் அதிகார துஸ்பிரயோகங்களைச் செய்தவர். இதையெல்லாம் மறைத்துத் தன்னை ஒரு மிகப் பெரிய கனவான், கண்ணியமான அரசியல் தலைவர், உலக மதிப்பைப் பெற்றவர் என்று வித்தை காட்டி, மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். ஆகவே அவர் கைது செய்யப்படுவது, இந்த நாட்டின் ஆட்சி மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்கிறது.
ரணிலின் குற்றங்கள் எனப் பெரியதொரு பட்டியலையும் அந்த்த் தரப்பு முன்வைக்கிறது. அவை பெருமளவுக்கும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்திருக்கின்றன. அதில் முக்கியமானவை, இனவாத நடவடிக்கைகள், மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அரசியல் தீர்வைக் குழப்பியமை, சர்வதேச சமூகத்தையே ஏமாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க மறுத்தமை, போரை நடத்தியமை, பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களுக்குப் பின்னணி அல்லது தலைமை வகித்தமை, பிணைமுறை மோசடி எனப் பாரதூரமான பல விதமான குற்றங்களின் பட்டியல் அது. ஆனால், அவற்றை ஆதாரப்படுத்தி நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு ரணில் தன்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் அவரைச் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடிய விடயங்களுக்கு ஊடாகவே கையாள – கைது செய்ய முடிந்திருக்கிறத. அதுதான் நடந்துமிருக்கிறது.
இந்தக் கைது பல நரிகள், சிங்கங்கள், புலிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. பலருடைய பசி, தூக்கத்தையெல்லாம் கெடுத்துள்ளது.
ரணிலின் கைது தமிழ், முஸ்லிம், மலையகப் பரப்பிலும் மக்களிடத்தில் சிறிய அளவிலான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அரசியற் கட்சிகள் எவையும் இதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சுமந்திரன் மட்டுமே, இந்தக் கைது சற்றுப் பெருப்பிக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்ற தொனிப்படப் பேசியிருந்தார். அதற்கு அப்பால் தொடர்ந்து அவர் அதைப் பற்றிப் பேசவில்லை. அவர் பேசியது கூட சட்ட அடிப்படையிலானதே தவிர, அரசியல் ரீதியானதல்ல.
முஸ்லிம், மலையகக் கட்சிகளின் தலைவர்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அந்தச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் அமைப்புகள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினர் உள்ளுர இதை மகிழ்வதை அவதானிக்க முடிகிறது.
இதைப் பற்றி மேலதிகமாகப் பேசுவதற்கு நாம் மேலும் நிலைமைகளைக் கூர்மையாக அவதானிக்க வேண்டியுள்ளது. நீதி மன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை – தீர்ப்பு மற்றும் அரசாங்கத்தின் தொடர் செயற்பாடுகள் போன்றவையே அதைச் சொல்லக் கூடியன.
ஆனால் ஒரு விடயம் முதன்மைக் கவனத்திற்குரியது. என்னதானிருந்தாலும் தென்னிலங்கையின் அரசியல் நிலவரம் (சூழல்) தான் ஏனைய வடக்குக் கிழக்கு உட்பட்ட அனைத்துப் பிரதேசங்களின் அரசியல் தலைவிதியையும் பிரதிபலிப்பது; தாக்கம் செலுத்துவதாகும்.
ஆகவே தெற்கில் நடப்பவற்றைக் குறித்துக் கவனிக்காமலும் பேசாமலும் இருக்க முடியாது.
00



