முத்தையன்கட்டு விவகாரம்: இராணுவச் சிப்பாய்க்கு கஞ்சா, கசிப்பு கொடுத்து முகாமில் திருட முயற்சி; உயிரிழந்த இளைஞன் ஐஸ் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதியானது!

Date:

முத்துஐயன்கட்டு குளத்தில் இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட விவகாரம் ஒரு அரசியல் விவகாரகமாறியுள்ளது. ஒரு குற்றச்சம்பவம் அரசியலாக மாறுவது சமூகத்தின் முதிர்ச்சியை கேள்விக்குட்படுத்தும் விவகாரம். ஆனால், அதைப்பற்றிய எந்த கூச்சமும், பொறுப்புணர்வும் இல்லாமல் தமிழ் அரசியல்வாதிகள்- இந்த சம்பவத்தில் அரசியல் செய்கிறார்கள்.

யதார்த்தவாதி- சமூகத்தால் விமர்சிக்கப்பட்டாலும், உண்மையை பேசுபவர் என தனது ஆதரவாளர்களால் விதந்தோதப்பட்டு வந்த, இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும்- சர்க்கஸ் கோமாளி வேடம் போட துணிந்துவிட்டார். குரங்கு வேடம் போட்டால், குரங்குச்சேட்டைகள் விட்டுத்தானே ஆக வேண்டும்.

அப்படியொரு சேட்டையே- திகதி வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு அறிவிப்பு.

ஈழத்தமிழர்கள் தமது அரசியல் உரிமைக்காக, நில உரிமைக்காக எத்தனையோ விதமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, யுத்தம் முடிந்த பின்னர் இந்த உரிமைகளுக்காகவும், பல படுகொலைகளுக்கு நியாயம் வேண்டியும் பல கதவடைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். அவை அனைத்தும், போராட்டங்களை அறிவித்த தரப்புக்களின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தவும், கணக்கிடவும், சமூகத்தில் தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவும் மட்டுமே பயன்பட்டது. அதற்கப்பால் மக்களின் போராட்டத்தை பலன்மிக்கதாக மாற்றும் எந்த அர்ப்பணிப்பும் அரசியல் கட்சிகளிடம் இல்லை.

அன்றாட உழைப்பாளிகள் தமது ஒருநாள் உழைப்பை, ஏனைய தொழில் செய்வோர் தமது ஒருநாள் வருவாயை தியாகம் செய்வது சாதாரண விடயமல்ல. அது அர்த்தமுள்ள ஒரு விவகாரத்துக்காக நடத்தப்படும் போராட்டமாக இருக்க வேண்டும். அரைவேக்காட்டுத்தனமான அறிவிப்புக்கள், சம்பவங்களுக்காக மக்கள் தமது ஒருநாளை இழப்பது முட்டாள்த்தனம்.

முத்தையன்கட்டு மரணம் ஒரு குற்றவியல் சம்பவம்.

இராணுவத்துக்கும், தமிழ் மக்களுக்குமிடையிலான சம்பவம் அல்ல. குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் இரண்டு தரப்புக்களுக்கிடையிலான சம்பவம். அதை அரசியலாக அர்த்தப்படுத்துவது- தமிழ் மக்களின் அரசியல் போராட்ட பெறுமானத்தையே சிறுமைப்படுத்துவதாகும்.

முத்துஐயன்கட்டு இராணுவமுகாமில் இருந்தவர்களில் ஓரிருவரும், கிராமத்தில் இருந்த ஒரு சிலரும் சம்பந்தப்பட்ட குற்றச்சம்பவம் அது.

இது முழுக்கமுழுக்க கஞ்சா, கசிப்பு மற்றும் திருட்டு விவகாரம்.

இந்த விவகாரத்துக்கு கதவடைப்பு போராட்டத்தை அறிவிக்கிறார்கள் எனில், எமது அரசியல்வாதிகள் எவ்வளவு தரம்தாழ்ந்தவர்கள்?

உயிரிழந்த இளைஞனின் இறுதிச்சடங்கு நேற்று (11) முத்துஐயன்கட்டில் நடந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், து.ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், காதர் மஸ்தான் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், உள்ளூராட்சிமன்ற பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றிய சிறிதரன் எம்.பி, இலங்கை இராணுவத்தின் இனவழிப்பின் தொடர்ச்சியாக அந்த மரணத்தை விபரித்தார். மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசுவதில் அவர் வல்லவர் என்ற பெருமையை நீண்டகாலத்தின் முன்னரே பெற்றவர் என்பதால், அப்படி பேசுவதில் ஆச்சரியமொன்றுமில்லை.

உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை

கடந்த 7ஆம் திகதி முத்துஐயன்கட்டு குளத்தின் இடதுகரையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 12வது சிங்க ரெஜிமென்ட் முகாமில் திருட்டில் ஈடுபட சென்றவர்களை, இராணுவத்தினர் பிடித்து தாக்கியபோது, அங்கிருந்து தப்பியோடிய நால்வர் வீடு திரும்பினர். ஒருவர் காணாமல் போயிருந்தார்.

பின்னர் 9ஆம் திகதி முத்துஐயன்கட்டு குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டார்.

எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (10) அவரது சடலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. நேற்று சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, உயிரிழந்தவரின் உறவினர்கள் சிலர் வைத்தியசாலை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, இராணுவத்தினர் கபில்ராஜை அடித்துக் கொன்றதாகவும், சடலத்தில் தாக்குதல் காயங்கள் காணப்படுவதாகவும் கூறியிருந்தனர்.

எனினும், அது தவறான கூற்று என்பதை பொலிசார் உறுதி செய்தனர். பிரேதபரிசோதனையில் அவ்வாறான காயங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லையென்றும், உயிரிழந்தவரின் சகோதரி, சகோதரன், தந்தை அழைக்கப்பட்டு சடலம் காண்பிக்கப்பட்டு. அவ்வாறான காயங்கள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. உடலில் எலும்பு முறிவு, நொறுங்கல் காயங்கள் இல்லையென்பது சி.ரி ஸ்கான் முடிவுகள் காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டதாகவும், அதையும் மீறி, சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக அவர்கள் கூறுவது குறித்து தம்மால் என்ன செய்ய முடியுமென கேட்டனர்.

சடலம் நீண்டநேரம் தண்ணீரில் இருந்தால் கண், மூக்கினால் இரத்தம் வருமென்றும், கபில்ராஜின் சடலத்திலும் அதுதான் நடந்ததாகவும் தெரிவித்தனர்.

கபில்ராஜின் மரணம் குறித்து வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதை போல, இளைஞன் இராணுவத்தினரால் அடித்துக் கொல்லப்படவில்லை, மரணத்தை ஏற்படுத்தும் காயங்கள் உடலில் காணப்படவில்லையென்பதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிசெய்கிறது. அவர் இராணுவத்தால் தாக்கப்பட்டார், குளத்துக்குள் தப்பியோடினார், பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

அத்துடன், கபில்ராஜ் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்ததும் பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.

கபில்ராஜ் எப்படி இறந்தார் என்பதை கண்கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில், சம்பவத்தை ஊகிக்கும் விஞ்ஞானபூர்வமான- சட்டபூர்வமான வழி ஒன்றேயொன்றுதான். சம்பவத்தையும், பிரேதபரிசோதனை அறிக்கையையும் பொருத்திப் பார்ப்பதுதான். அதைவிடுத்து, பச்சைசட்டை போட்டாலே அடிப்போம் என்ற நகைச்சுவையை போல, இராணுவம் அடித்துக்கொன்று குளத்தில் வீசியது என்பது- தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு கிளுகிளுப்பாக இருக்கலாமே தவிர, யதார்த்தமாக இருக்கவாய்ப்பில்லை.

நடந்தது என்ன?

முத்துஐயன்கட்டு விவகாரத்தில் நடந்தவற்றை ஏற்கெனவே நேற்று வெளியிட்டிருந்தோம். (கள்ளுக்கு வாங்கிய 1000 ரூபா… அடுத்தடுத்த தொலைபேசி அழைப்பு: முத்துஐயன்கட்டு இளைஞன் மரணத்தின் முழுமையான பின்னணி!) இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 3 இராணுவத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்களின் அடிப்படையில் அந்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தியில்- கள்ளு வாங்கிவர ரூ.1000 கொடுத்ததாக இராணுவத்தினர் குறிப்பிட்டிருந்தனர். அது சந்தேகத்திற்கிடமான கூற்று என்பதால், (கள்ளு அல்லது வேறு உள்ளூர் மதுபானமாக இருக்கலாம்) என அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருந்தோம். அந்த சந்தேகத்திற்கிடமான கூற்று தொடர்பாக தமிழ்பக்கம் தொடர்ந்து தேடியதில், மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த கபில்ராஜூடன் இராணுவ முகாமுக்குள் திருட்டுக்கு சென்று தப்பிவந்தவர்களிடம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில், இராணுவ முகாமுக்குள் திருட்டுக்கு சென்ற சமயத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிய மேலும் சில தகவல்களை இந்த பகுதியில் வெளியிடுகிறோம்.

உயிரிழந்த கபில்ராஜ் (32) யாழ்ப்பாணம், கொக்குவில், தாவடி பகுதியை சேர்ந்தவர். அவர் சில வருடங்களின் முன், இடதுகரை, ஜீவநகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்தார். இப்பொழுது அந்த சிறுமிக்கு 17 வயது. அநத சிறுமிக்கு 6 மாத குழந்தையும் உள்ளது.

கபில்ராஜின் சகோதரர் ஒருவர் சில வருடங்களின் முன்னர், கொக்குவிலில் மேசன் வேலை செய்யும் இடத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவரது சகோதரி ஒருவர், தற்போது சுன்னாகம் பிரதேசசபை உறுப்பினர். உள்ளூராட்சிதேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (புளொட்) சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், பின்னர் நியமனப்பட்டியல் மூலம் பிரதேசசபை உறுப்பினரானார்.

கஞ்சா, கசிப்பு

கடந்த 7ஆம் திகதி திருட்டுக்கு சென்ற சம்பவத்தின் பின்னணி பற்றி, தப்பி வந்தவர்கள் கூறியவற்றின் தொகுப்பு இது.

“கபில்ராஜ்தான் இந்த விடயம் பற்றி இராணுவத்தினருடன் பேசியவர். காட்டுக்கு விறகு வெட்டச்சென்ற போது, இராணுவச்சிப்பாய் ஒருவர் முகாமில் பொருட்கள் எடுக்கலாம் என கூறியிருக்கிறார். ஆனால், பதிலுக்கு தமக்கு கஞ்சாவும், கசிப்பும் தர வேண்டுமென கேட்டார்.

இதனடிப்படையில் 7ஆம் திகதி அவற்றை தருவதாக கூறியிருந்தோம். நாம் அவற்றை கொண்டு செல்லவில்லையென்றுதான் சிப்பாய் பலமுறை கபில்ராஜூக்கு அழைப்பேற்படுத்தினார். இறுதியாக, ரூ.6000 க்கு கஞ்சாவும், ரூ.3,000 இற்கு கசிப்பும் வாங்கிக்கொண்டு சென்றோம்.

கஞ்சாவையும், கசிப்பையும் இராணுவச்சிப்பாயிடம் ஒப்படைத்தோம். முகாமிற்குள் வந்து பொருட்களை எடுக்குமாறும், யாராவது இராணுவத்தினர் வந்தால் அவர்களிற்கு தெரியாமல் தப்பியோடி விட வேண்டுமென்றும் அவர்கள் கூறினார்கள்“ என்றார்கள்.

அவர்களின் தகவல்படி-

இராணுவ முகாமில் திருட்டுக்கு செல்வதற்கு முதல் நாட்களில், ஒரு நாள் லாண்ட்மாஸ்டரிலும், மற்றொரு நாள் உழவு இயந்திரத்திலும் வேறு ஆட்கள் திருட்டுப் பொருட்களை ஏற்றிச் சென்றதாகவும், வெளியாட்களே வந்து திருடிச் செல்லும் போது, முகாமுக்கு அருகிலுள்ள தாம் விட்டுவைக்கலாமா என யோசித்ததாக தெரிவித்தனர்.

இராணுவ முகாமில் திருடும் பொருட்களை தோணியில் ஏற்றிவர திட்டமிட்டனர்.

கடந்த 7ஆம் திகதி இராணுவ முகாமில் திருட்டுக்கு செல்லும் போது, கபில்ராஜின் மனைவியின் தந்தை தோணியை செலுத்திச் சென்றார். கபில்ராஜ், அவரது மனைவியின் சகோதரன் உள்ளிட்ட 6 பேர் சென்றார்கள்.

முகாமின் பின்பகுதியை தோணி அடைந்ததும், தோணியுடன் கபில்ராஜின் மாமா நின்றுள்ளார். கபில்ராஜூம் இன்னொருவரும் இராணுவ முட்கம்பி வேலிக்கு வெளியே நின்றார்கள்.

இரும்பு கட்டில் 4, இரும்பு பட்டம் 4, தகரங்கள் 15, உடற்பயிற்சி சாதனங்கள் சிலவற்றை முகாமுக்குள்ளிருந்து வெளியே கொண்டுவந்துள்ளனர். இந்த பொருட்களை தோணியில் ஏற்றுவதற்கு முன்னர், இன்னும் சில தகரங்களை எடுத்து வரலாமென மீண்டும் முகாமுக்குள் நுழைந்துள்ளார்கள்.

தகரங்களை கழற்றிக் கொண்டிருந்த சமயத்தில் சிகரெட் புகைப்பதற்காக அங்கு வந்த இராணுவத்தினர் சிலர், டோர்ச் லைட்டை அடித்தபடி அங்கு வந்து, தகரம் கழற்றிக்கொண்டிருந்தவர்களை பிடித்து விட்டனர். திருட்டில் ஈடுபட்ட 3 பேரையும் இராணுவத்தினர் தாக்கினர். அதில் ஒருவர் தப்பி வெளியே ஓடிவந்துவிட்டார்.

முள்கம்பி வேலிக்கு வெளியே நின்ற கபில்ராஜ்தான் ஒரு இராணுவச்சிப்பாயுடன் பேசி இந்த டீலை முடித்தவர். ஆனால் திருடர்கள் சிக்கியிருப்பது இந்த டீலை அறியாத இராணுவத்தினரிடம். இருந்தாலும், அவர்களுடன் பேசிப்பார்க்க கபில்ராஜ் இராணுவ முகாமுக்குள் நுழைந்தார்.

ஆனால், இராணுவத்தினர் அவரையும் பிடித்து தாக்கினார்கள். இராணுவத்திடம் சிக்கியிருந்த திருடர்கள் மூவரும் ஒருவாறு தப்பித்து வெளியே ஓடிவந்தனர். இராணுவத்தினர் அவர்களை விரட்டி வந்தனர்.

திருடர்களில் இருவர் காட்டு வழியாக தப்பியோடி விட்டனர்.

உயிரிழந்த கபில்ராஜ், அவரது மனைவின் சகோதரன் மற்றொருவரே அங்கு நின்றனர். இராணுவத்தினர் விரட்டி வர, அவர்கள் குளத்தில் நின்ற தோணியை நோக்கி தப்பியோடினர். கபில்ராஜூம், மனைவியின் சகோதரனும் நன்றாக நீந்துவார்கள். ஆனால் அவர்களுடன் வந்த தனுசிகன் தண்ணீரில் தப்பியோட முடியாமல் சிரமப்பட, அவரை காப்பாற்ற, கபில்ராஜின் மனைவியின் சகோதரன் சென்றார்.

இதற்குள் விரட்டி வந்த இராணுவத்தினர் தனுசிகனை பிடித்துக் கொண்டனர். இதையடுத்து, கபில்ராஜின் மனைவியின் சகோதரன், அங்கிருந்து தப்பிச்சென்று தோணியில் ஏறினார். தோணியில் இருந்தவர் தந்தை. அவரும், மகனும் தோணியில் தப்பி வந்தனர்.

கபில்ராஜ் நீந்தி தப்பிச்செல்ல முயன்றார். அவருடன் கூட சென்றவர்களின் தகவல்படி, கபில்ராஜ் சுமார் 15 மீற்றர்கள் நீந்தி சென்றபின் நீருக்குள் மறைந்து விட்டார்.

தப்பிச்சென்றவர்கள் சென்று வழங்கிய தகவலின்படி, உறவினர்கள் இராணுவ முகாமுக்கு வந்தபோது, இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தனுசிகனை ஒப்படைத்தனர்.

கபில்ராஜ் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

கைதுகள் தொடரும்

உறவினர்களின் தகவல்படி, உயிரிழந்த கபில்ராஜின் உடலை- அவர் இறந்து விட்டார் என்பதை அறியாமல்- இராணுவத்தினர் மீட்டிருக்கலாம் என்றும், அவர் உயிரிழந்து விட்டார் என்பதை தெரிந்ததும், உடலை மறைத்து வைத்து விட்டு, வெள்ளிக்கிழமை இரவிற்கு பின்னர் குளத்தில் வீசியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள்.

இப்படி நடந்ததா என்பது பொலிசாரின் விசாரணையின் பின்னர்தான் வெளிப்படும்.

கபில்ராஜ் உயிரிழந்த போது, ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார் என்பது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவரது மரணத்தில் போதை செல்வாக்கு செலுத்தியதா என்பதும் கேள்விக்குரிய விடயம்.

முகாமுக்குள் திருட்டுக்கு சென்றவர்களின் தகவல்படி, தம்மை தாக்கிய இராணுவத்தினர் இருவர் தற்போதும் முகாமில் இருப்பதாகவும், அவர்கள் கைது செய்யப்படவில்லையென்றும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மேலும் 2,3 இராணுவத்தினர் கைதாக வாய்ப்புள்ளதாக அறிய முடிகிறது.

ஏற்கெனவே 3 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கபில்ராஜூடன் திருட்டு டீலிங் செய்த சிப்பாய், அவர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட தொலைபேசிக்குரிய சிப்பாய் ஆகியோர் திருட்டுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். கபில்ராஜ் மரணத்தை தொடர்ந்து தொடர்ந்து வெளியான வீடியோக்களில் கொட்டனுடன் காணப்பட்ட சிப்பாய் ஒருவர், தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழர்கள் கதவடைப்பு போராட்டம் மேற்கொள்ளுமாறு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ள சம்பவத்தின் பின்னணி இதுதான். தனிச்சிங்கள சட்டம் அறிமுகமான போது, அதற்கு எதிராக தமது அரசாங்க உத்தியோகங்களையும் உதறி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியவர்கள் தமிழர்கள். காலிமுகத்திடலில், கச்சேரியில் பொலிசாரின் தடியடி பிரயோகத்தையும் தாங்கி போராட்டம் நடத்தியவர்கள். அரசியல், நில உரிமைக்காக தமது பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கொடுத்து போராடியவர்கள் தமிழர்கள். போராட்டம் தமிழர்களுக்கு சுமையாக இருந்ததாக வரலாறில்லை. ஆனால் அந்த போராட்டங்களுக்கு அர்த்தமிருந்தது… வலுவான காரணங்களிருந்தது.

இந்த வரலாறுடைய தமிழர்கள் போதைப்பொருள், குற்றக்குழுக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது சிறுமையில்லையா?

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்