தமிழர்கள் இருவர் அருகருகாக உட்கார்ந்திருந்தாலே ஏதாவது விபரீதமாகி விடும். ஆளுக்கொரு கட்சியாக, ஆளுக்கொரு அரசியல் நிலைப்பாடாக, ஆளுக்கொரு சாதியாக… மதமாக, ஊராக, கோயிலாக பிரிந்து நின்று மல்லுக்கட்டுவார்கள். இந்த இலட்சணத்தில் சில, பல இலட்சங்களாக கனடாவில் குடியேறி, உழைத்து செட்டிலாகி, பிள்ளைகளும் வளர்ந்து விட்டால்… தமிழர்கள் சும்மா இருப்பார்களா?
பொழுதுபோக்கிற்கேனும் அணிகளாகி சண்டை பிடிப்பார்கள்.
இந்த எழுதப்படாத நியதியில் இப்பொழுது சிக்கியுள்ள விவகாரம்- கனடாவின் தமிழர் தெருவிழா.
பல் கலாச்சார நாடான கனடாவில், ஈழத்தமிழர்களின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வான தமிழர் தெருவிழா இந்த வருடம் நடக்குமா, நடக்காதா என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. என்றாலும், இம்மாதம் 23, 24ஆம் திகதிகளில் தமிழர் தெருவிழா நடக்கும் என கனடிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது. கடந்த வருடம் தமிழர் தெருவிழாவில் நடந்த களேபரங்களின் நீட்சியாக, இந்த வருடம் தமிழர் தெருவிழா நடக்காமலே போகும் நிலைமை உருவாகியிருந்த நிலையில், எதிர்ப்பாளர்களுடன் சமரச பேச்சு நடத்தி, தமிழர் தெருவிழா நடக்கும் என கனடிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது. எனினும், எதிர்ப்பாளர்கள் தரப்பில் மாறுபட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த முறையை போலவே இம்முறையும் தமிழர் தெருவிழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழர் தெருவிழா குழப்பத்தை பற்றி பார்ப்பதற்கு முன்னதாக, கனடாவில் உள்ள ஈழத்தமிழர் அமைப்புக்களின் பின்னணி பற்றிய சுருக்கமான ஃபிளாஸ்பேக் பற்றி அறிந்து கொள்வது, இந்த குடுமிப்பிடி சண்டையின் அடிநுனியை புரிந்துகொள்ள உதவும்.
கனடாவில் மார்க்கம் நகரில் கடந்த 9 ஆண்டுகளாக தமிழர் தெருவிழா நடந்து வருகிறது. இது ஒரு பெரிய கலாச்சார நிகழ்வு. தமிழர்களின் கலை, பண்பாடு, வரலாற்று, அடையாளம், உணவை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் நடக்கும். தென்னிந்திய பாடகர்களை அழைத்து இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. கூடவே, உணவுக்கடைகள் என அந்த பகுதியே களை கட்டும். தமிழர் தெருவிழாவை முன்னிட்டு, ஒரு பிரதான வீதியையே மார்க்கம் மாநகரசபை போக்குவரத்துக்கு மூடி, திருவிழாவுக்காக ஒதுக்குகிறது. கனடா அரசியலில் ஈழத்தமிழர்கள் பங்குபற்ற ஆரம்பித்துள்ளதால், இது சாத்தியமாகியுள்ளது.
தமிழர் தெருவிழா கனடாவிலுள்ள ஈழத்தமிழர்களுக்கு முக்கியமான ஒரு நிகழ்வு. தமது அடையாளங்களை பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாக அதை கருதுகிறார்கள்.
இது கலை, பண்பாட்டு, வரலாற்றை பிரதிபலிக்கும் ஒரு கலாச்சார நிகழ்வு என்றாலும், தமிழர் தெருவிழாவின் பின்னால் பெரிய வர்த்தகமும், ஒழுங்கமைப்பும் உள்ளது. நிகழ்வுக்கு கனடாவிலுள்ள பணக்கார தமிழ் வர்த்தகர்கள் மட்டுமல்ல, வேறு இன தொழிலதிபர்களும் அனுசரனை வழங்குகிறார்கள்.
2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை கனடா தடை செய்த போது, அந்த நாட்டில் அதுவரை அந்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களாக இருந்தவர்கள் பூண்ட மாறுவேடமே கனடிய தமிழர் பேரவை.
2009 இல் விடுதலைப் புலிகள் அமைப்பு அழிந்த போது, கனடா தமிழர் பேரவை கொள்கைரீதியாக பெரிய மாற்றத்திற்குள்ளானது. அந்த அமைப்பிற்குள் இருந்த அதிதீவிர நிலைப்பாடுடையவர்கள், செயற்பாட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டு, படித்தவர்கள், நல்ல உத்தியோகங்களில் உள்ளவர்கள் உள்வாங்கப்பட்டனர். அதாவது, இலங்கை தமிழ் அரசு கட்சி (அப்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பும்) எப்படியாக மாற்றமடைந்ததோ, அதே விதமாக கனடிய தமிழர் பேரவையும் மாற்றமடைந்தது. அதன் பதவிகளில் படித்தவர்கள், உத்தியோகங்களில் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டவர்.
இந்த சமயத்தில், நாடு கடந்த தமிழீழ அரசில் முரண்பட்டவர்கள் உருவாக்கிய அமைப்பு- கனடிய தமிழர் தேசிய அவை (National council of canadian tamils- NCC). தமிழ் தேசிய நிலைப்பாட்டில் தீவிரமான கருத்துடையவர்கள் அவர்கள்.
கனடிய தமிழர் பேரவையின் பண்பு மாற்றம், அதிலிருந்த தீவிர தமிழ் தேசியவாதிகளை வெளியேற்றியது. பின்னாளில், கனடிய தமிழர் பேரவை இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கிறேன் என்ற பகிரங்க நிலைப்பாட்டை எடுத்தது. இலங்கை தமிழ் அரசு கட்சியை ஆதரித்தது
அதிலிருந்து பிரிந்த தீவிர நிலைப்பாடுடையவர்களில் பலர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரித்தனர். சிலர் க.வி.விக்னேஸ்வரன் தரப்பை ஆதரித்தனர். விக்னேஸ்வரன் வடக்கு முதல்வராக இருந்த போது, அவருக்கு நல்லூரில் அலுவலகம் நடத்த வாடகைப்பணம் மற்றும் இதர செலவுப் பணத்தையும் இந்த குழுவினரே கொடுத்தனர்.
கனடாவில் கனடிய தமிழர் பேரவை மற்றும் தீவிர நிலைப்பாடுடைய குழுக்கள் இருந்த நிலையில், அவர்கள் கூடிப்பேசி எந்தெந்த நிகழ்வுகளை யார் நடத்துவது என தமக்குள் ஒரு எழுதப்படாத உடன்பாட்டை உருவாக்கியிருந்தனர். தமிழர் தெருவிழா, தைப்பொங்கல் விழா உள்ளிட்ட 3 நிகழ்வுகளை கனடிய தமிழர் பேரவை நடத்துவதென்றும், மாவீரர்நாள், முள்ளிவாய்க்கால் நினைவுநாள் உள்ளிட்ட வேறு 3 நிகழ்வுகளை மறுதரப்பு நடத்துவதென்றும் இணக்கம் காணப்பட்டு, அதன்படி செயற்பட்டு வந்தனர்.
இப்படியாக இருந்த நிலையில், உலகத்தமிழர் பேரவையென்ற பெயரில் லண்டனில் ஈயோட்டிக் கொண்டிருக்கும் சுரேன் சுரேந்திரன் ஒரு ஆர்வக்கோளாறான நடவடிக்கையெடுத்தார். இமாலயப் பிரகடனம் என ஒரு அறிக்கையை சிலரோடு இணைந்து வெளியிட்டார். இலங்கைக்கு வந்து சிங்கள தலைவர்கள், பௌத்த பிக்குகளுக்கு அதை வழங்கி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ஆர்வக்கோளாறான இந்த மனிதர் கடந்த நல்லாட்சி காலத்திலும், தனது புத்திசாதுரியம் மூலம் இலங்கை இனப்பிரச்சனையை தீர்த்து விடுவேன் தலைகால் புரியாமல் நடந்தது கவனிக்கத்தக்கது.
இமாலய பிரகடனத்தில் கனடிய தமிழர் பேரவையும் பங்காளி.

கனடாவிலுள்ள தீவிர நிலைப்பாடுடைய அமைப்புக்கள் போர்க்கோலம் கொண்டு, கனடிய தமிழர் பேரவையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தன. இந்த சமயத்தில், கடந்த வருடம் தமிழர் தெருவிழா வந்தது. எதிர்தரப்புக்கள் தமிழர் தெருவிழாவை போர்க்களமாக்கின. பெரும் புறக்கணிப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. புறக்கணிப்பு கோசம் வலுவாகி, தமிழர் தெருவிழாவில் சர்ச்சைகள் ஏற்பட்ட பலருக்கு நினைவிருக்கலாம்.
தென்னிந்திய பாடகர் சிறிநிவாஸ் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி குழம்பியது, முட்டை வீச்சு வீடியோக்கள் எல்லாம் அப்போது வைரலாகியிருந்தன.
இம்முறை, தமிழர் தெருவிழாவை சுமுகமாக நடத்தி முடிக்க, கனடிய தமிழர் பேரவை சில சமரச முயற்சிகளை மேற்கொண்டது.
முதலாவதாக- உலகத்தமிழர் பேரவையிலிருந்து விலகுவதாகவும், இமாலய பிரகடனத்தில் பங்கேற்றது தவறு என்றும் அறிவித்தது. இமாலப் பிரகடனத்துடன் மகிந்த ராஜபக்சவை சந்தித்த கனடிய தமிழர் பேரவையின் உறுப்பினர் அந்த அமைப்பிலிருந்தும் விலகினார்.
கனடாவில் ஒப்பீட்டளவில் பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட தமிழர் அமைப்பாக கனடிய தமிழர் பேரவை உள்ளது. கனடாவிலுள்ள தமிழ் அமைப்புக்கள் நடத்தும் நிகழ்வுகளில், கனடிய தமிழர் பேரவையில் தெருவிழாவிலேயே அதிகளவான மக்கள் கலந்துகொள்கிறார்கள்.
தமிழர் பெருவிழாவை ஏனைய தரப்புக்கள் குறிவைப்பதன் பின்னணி இதுதான் என்கிறார்கள் கனடிய தமிழர் பேரவையினர். தம்மால் அதிக மக்களை திரட்ட முடியாதவர்கள், கனடிய தமிழர் பேரவையை செயலிழக்க வைத்து, தமிழர் தெருவிழாவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள், இதற்காக அவர்கள் கையிலெடுத்துள்ள ஆயுதமே தற்போதைய எதிர்ப்பு என்கிறார்கள்.
தமிழர் தெருவிழா வெற்றியளிக்க வேண்டுமெனில் கனடாவிலுள்ள தமிழ் வணிகர்கள் அதில் பங்கேற்க வேண்டும். பொதுவாகவே, சர்ச்சைக்குரிய விவகாரங்களில், இடங்களில் வர்த்தகர்கள் முதலிட மாட்டார்கள். தமிழர் தெருவிழாவில் குழப்பம் நிகழுமென தெரிந்தால் வர்த்தகர்கள் முதலிட மாட்டார்கள். கனடிய தமிழர் பேரவைக்கு அது பெரும் சறுக்கலாகி விடும். இந்த இடத்தில்தான் கச்சிதமாக கவ்வியுள்ளனர் எதிர்ப்பாளர்கள்.
கனடிய தமிழர் பேரவை எதிர்பாளர்களை சமாளிக்கவே- இமாலயப் பிரகடனத்தில் பங்கேற்றது தவறு என அறிக்கை வெளியிட்டனர். ஆனாலும், எதிர்ப்பாளர்கள் அடங்கவில்லை.
அவர்களை சமரசப்படுத்த, எதிர்ப்பு தெரிவித்த கனடிய தமிழர் தேசிய அவை உள்ளிட்ட இரு அமைப்புக்களுடன் கனடிய தமிழர் பேரவை பேச்சு நடத்தியது.
இந்த பேச்சின் போது- கனடிய தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குனர் டான்ரன் துரைராஜாவும், அதன் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பதவிவிலக வேண்டுமென எதிர்ப்பாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். கனடிய தமிழர் பேரவை தனது கணக்கறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் கேட்டனர். கணக்கறிக்கை விவகாரத்தை ஏற்ற கனடிய தமிழர் பேரவை, பதவிவிலகல் கோரிக்கையை ஏற்கவில்லை. டான்ரன் துரைராஜாவே தமிழர் தெருவிழாவின் காரணகர்த்தா என்றும், அவரை பதவிவிலக கோருவது கனடிய தமிழர் பேரவையை செயலிழக்க வைக்கும் நோக்கமுடையது என்கிறார்கள் கனடியா தமிழர் பேரவையினர்.
மறுவளமாக- கனடிய தமிழர் பேரவையின் பண்புமாற்றம் டான்ரன் துரைராஜாவினாலேயே நிகழ்ந்ததாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்துகிறது, இமாலயப் பிரகடனத்தின் மூலகர்த்தாக்களில் அவரும் ஒருவர், அவர் தொடர்ந்து பதவியில் இருந்து கொண்டு, ஒப்புக்கு ஒருவரை விலக வைத்துள்ளனர் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.
தமிழர் தெருவிழா சர்ச்சையினால் வர்த்தகர்கள் அதில் பங்கேற்க தயங்குவதாக அறிய முடிகிறது. இதனை வைத்து, கனடிய தமிழர் பேரவையை முடக்க எதிர்தரப்பு தீவிரம் காட்டுகிறது. நிலமையை சமாளிக்க கனடிய தமிழர் பேரவை முயல்கிறது.
கனடாவிலுள்ள தமிழ் அமைப்புக்களில் ஒப்பீட்டளவில் ஜனநாயக முறைகளை கொண்ட, கணக்கறிக்கையை கொண்ட ஒரே அமைப்பு கனடிய தமிழர் பேரவை மட்டும்தான். அதன் கணக்கறிக்கை அமைப்பு மட்டத்தில் வெளிப்படைத்தன்மையாக பேணப்படுகிறது. எனினும், தற்போது கனடிய தமிழர் பேரவையிடம் கணக்கறிக்கை கேட்கும் எந்த தரப்பும் தமது கணக்கறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதில்லை. விடுதலைப் புலிகளின் பெருந்தொகை வெளிநாட்டு பணம் இவர்களிடமே சிக்கியுள்ளது. தலைவர் வந்தால் பணத்தை திருப்பிக்கொடுப்பேன் என கப்சா விட்டபடி, பணத்தை சுருட்டிய தரப்புக்களும் இவர்கள்தான். அவர்கள் கேட்டபடி, பொதுமக்களுக்கும் தனது கணக்கறிக்கையை வெளிப்படுத்துவதாக கனடிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
கனடாவிலுள்ள ஏனைய தரப்புக்கள் தாயகத்தில் முறையாக மக்கள் நலப்பணிகள் எதையும் செய்யவில்லை. தமக்கு தோதான கட்சிகளுக்கு பணம் கொடுக்கிறார்கள். கனடிய தமிழர் பேரவையும் தமிழ் கட்சியொன்றுக்கு பணம் கொடுக்கிறதுதான். அதனால்தான் கனடிய தமிழர் பேரவையின் பிரமுகர் குகதாசன் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் சுலபமாக வேட்புமனு பெற்றார். ஆனால், தாயகத்தில் அந்த அமைப்பு பல மக்கள் நல பணிகளில் ஈடுபடுகிறது. தென்னன்மரவாடியில், முல்லைத்தீவில், மட்டக்களப்பில் நிறுவனமயப்பட்ட உதவிகளை செயற்படுத்துகிறது. கனடாவிலுள்ள ஏனைய அமைப்புக்கள் எதுவும் அப்படி செயற்படவில்லை.
இம்முறை தமிழர் தெருவிழாவை சுமுகமாக நடத்த எதிர்ப்பாளர்களுடன் சமரச பேச்சுக்களிலும் கனடிய தமிழர் பேரவை ஈடுபட்டது. பலனில்லை. ஆனால், பேச்சு வெற்றி, திட்டமிட்டபடி ஓகஸ்ட் 23, 24 இல் தமிழர் தெருவிழா நடக்குமென அறிவித்துள்ளனர்.
உடனடியாகவே எதிர்ப்பாளர்கள் மறுப்பறிக்கை வெளியிட்டு, புறக்கணிப்பு உறுதியென அறிவித்துள்ளனர்.
தமிழர் தெருவிழா நிறுத்தப்படுவதால் கனடாவிலுள்ள தமிழர்கள் அடையாளம் இழந்து விடுவார்கள் என்றில்லைத்தான். ஆனால், புலம்பெயர்ந்த இனக்குழுவொன்று தான் வாழும் வேற்று நாட்டில் தனது அடையாளங்களை பேணவும், அதை சக சமூகங்களிற்கு அறிமுகப்படுத்தவும் சிறு சந்தர்ப்பமொன்றேனும் கிடைத்தால் அதை பாதுகாக்க வேண்டுமல்லவா. அந்த வகையில், கனடா தமிழர் தெருவிழாவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வே.
கனடாவின் சக்தி வாய்ந்த அமைப்பு யார் என்ற போட்டியில், ஒரு ஆயுதமாக தமிழ் தேசியம் முன்னிறுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.
தமிழர்களிடம் நிரந்தரமான தியாகிகளும் இல்லை, துரோகிகளும் இல்லை. தமிழர்கள் தமது எதிராளிகளை சுலபமாக வீழ்த்த முன்னர் பொம்பிளை பிரச்சினை, காசுப் பிரச்சினை என்றார்கள். இப்போது துரோகி என்கிறார்கள்.
கனடாவில் தமிழர் தெருவிழா நடக்குமா என்பதற்கு இந்த மாத இறுதிக்குள் பதில் கிடைத்து விடும். ஆனால், தமிழர்களால் ஒற்றுமையாக அரசியல் இலக்கை நோக்கி பயணிக்க முடியுமா என்பதற்கு ஒரு போதும் பதில் கிடைக்காது என்பதே துரதிஸ்டமானது.



