நூடில்ஸில் இடியப்பம் தயாரித்து சிக்கலாக்கியுள்ள தமிழரசு… யாழில் அதிகாரத்தை தீர்மானிக்கவுள்ள ஜேவிபி!

Date:

உள்ளூராட்சி மன்றங்களில் யாழ்ப்பாணத்தில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியாக ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இலங்கை தமிழ் அரச கட்சி, ஈ.பி.டி.பி மற்றும் மணிவண்ணன் அணி ஆகியன ஒரு கூட்டாக இணைந்து பல பிரதேசசபைகளில் ஆட்சியமைக்கவுள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ் தேசிய பேரவையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து ஆட்சியமைக்கவுள்ளன.

இந்த இரண்டு பிரதான தரப்புக்களுக்கும் பிரதேசசபைகளில் உள்ள சுயேச்சைக்குழுக்கள் ஆதரவளிக்கவுள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் தேசிய பேரவையும் இணைந்த பின்னர், யாழ்ப்பாணத்தின் கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் பிரதேசசபைகளில் ஆட்சியமைக்கவுள்ள தரப்புக்களை தீர்மானிப்பவர்களாக ஈ.பி.டி.பியும், மணிவண்ணன் தரப்பினரும் மாறினார்கள்.

மணியும், டக்ளஸூம் தமிழ் தரப்புக்குள்தான் தீர்மானிக்கும் தரப்பு. அவர்கள் தமிழரசு கட்சி கூட்டுக்கு சென்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள சபைகளின் அதிகாரம் யாருக்கு செல்லும் என்பதை தீர்மானிக்கும் இறுதி- பலம் பொருந்திய தரப்பாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது.

மேலே, கட்சிகள் எந்தெந்த சபைகளை கைப்பற்றும் என்று குறிப்பிட்டிருந்தோம். இது தேசிய மக்கள் சக்தியின் முடிவை கவனத்தில் கொள்ளாமல்- தமிழ் தேசிய கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டது.

சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை, பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, ஊர்காவற்துறை பிரதேசசபை என்பவற்றை தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றவுள்ளது.

நல்லூர் பிரதேசசபையில் மணிவண்ணன் குழு ஆட்சியமைக்க தமிழ் அரசு கட்சி விட்டுக்கொடுக்கவுள்ளது.

காரைநகர் பிரதேசசபை இன்னும் இழுபறியில் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய 10 பிரதேசசபைகளை இலங்கை தமிழ் அரசு கட்சி கைப்பற்றும். இவற்றில் ஓரிரண்டில் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்தால் இழக்குமே தவிர, 9 இற்கும் குறையாத சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சியமைக்கும்.

எனினும், கடந்த உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு அடைந்த வலுவான நிலையுடன் ஒப்பிடும் போது, இது மிகப்பெரிய சறுக்கல்.

அந்த கட்சியின் தலைமையெடுத்த புத்திசாதுரியமற்ற முடிவுதான் இதற்கு காரணம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையென்பது- தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மட்டுமல்ல. தற்போது தமிழ் அரசு கட்சிக்குள் தலைவர் வரையறுக்கப்பட்ட முடிவுகளைத்தான் எடுக்கிறார். ஏனைய விடயங்கள் எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. உள்ளூராட்சி கூட்டணி பற்றிய முடிவுகளை பெரும்பாலும் சுமந்திரன் மட்டும்தான் எடுத்தார். அந்த முடிவுகளை எடுத்த பின்னரே சீ.வீ.கே இடம் சொல்கிறார்.

சிறிதர் தியேட்டருக்கு சென்று ஈ.பி.டி.பியுடன் பேச்சு நடத்தியது மட்டும்தான் சீ.வீ.கே. இதன் மூலக்கதை சுமந்திரனுடையது.

இலங்கை தமிழ் அரசு கட்சி இன்னும் புத்திசாதுரியத்துடன் நடந்திருந்தால், தற்போது கிடைத்துள்ளதை விட யாழில் அதிக சபைகளில் ஆட்சியமைத்திருக்கலாம். எனினும், அதை கோட்டை விட்டு விட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர்- இலங்கை தமிழ் அரசு கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் கூட்டு வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் சாவகச்சேரி பிரதேசசபையிலும், மானிப்பாய் பிரதேசசபையிலும் தாம் ஆட்சியமைக்க கோரினர். கோப்பாயையும் கேட்டனர். தமிழரசு கட்சி அதை மறுத்ததும், கோப்பாயை விட்டுவிட்டனர்.

இந்த நிபந்தனையை தமிழ் அரசு கட்சி ஏற்று- கூட்டணி அமைந்திருந்தால்- சாவகச்சேரி பிரதேசசபை, மானிப்பாய் பிரதேசசபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசிய பேரவையும் ஆட்சியமைத்திருக்கும். ஏனைய 13 பிரதேசசபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சியமைத்திருக்கும். ஊர்காவற்துறையை இதில் கணக்கிடவில்லை.

இந்த கூட்டு அமைந்திருந்தால், சிறிதர் தியேட்டருக்கே தமிழரசு கட்சித்தலைவர் சென்று ஆதரவு கோரியிருக்கத் தேவையில்லை. இந்த நெருக்கடியை சந்தித்திருக்க தேவையில்லை. ஈ.பி.டி.பி எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்காது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு காலை வாரும் வேலைகளை மட்டுமே செய்யும். இந்த அரசியல் கணக்கு புரிந்திருந்தால்- இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர்கள் இன்னும் புத்திசாதுரியமாக நடந்திருப்பார்கள்.

இதற்கும் அப்பால் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் நெருக்கடியின்றி ஆட்சியமைக்கும் சூட்சுமம் தெரிந்திருந்தால், தற்போது எடுத்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள். இல்லை- அப்போதும், ஈ.பி.டி.பி, பெரமுன போன்ற தரப்புக்களுடனும் பேசி ஆட்சியை பிடிக்கலாம் என்ற அசட்டு மனநிலையிலிருந்தால்தான் தற்போதைய முடிவை போல எடுக்க முடியும்.

தற்போது, தமிழ் கட்சிகளின் பிரிவை தொடர்ந்து, யாழில் எந்த கூட்டு அதிகாரத்தை கைப்பற்றும் என்பதை தீர்மானிப்பவர்களாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. தேசிய மக்கள் சக்தியினர் எல்லா சபைகளிலும் நடுநிலை வகிக்க முடிவு செய்தால், மேலே குறிப்பிட்டதற்கமைவான முடிவே கிடைக்கும்.

தேசிய மக்கள் சக்தியினர் ஆரம்பத்தில் தமிழரசு கட்சியினரை எதிர்க்க முடிவு செய்திருந்தனர். பின்னர், தமிழரசுகட்சியினர் இரகசியமாக தேசிய மக்கள் சக்தியை தொடர்புகொண்டதாக தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கமுக்கமாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் நடுநிலை வகிக்குமாறு கோரியதாக சொல்கிறார்கள். சபைகள் கூடும்போது தேசிய மக்கள் சக்தி நடுநிலை வகித்தால்- தமிழரசு கட்சி மேலே குறிப்பிட்ட முடிவை போல, “அடி கொஞ்சம் பலம்தான். ஆனால் பிரச்சினையில்லை“ என்ற மனநிலையுடன் திருப்திப்பட்டு கொள்ளலாம். ஆதரவளித்தால், நல்லூரில் கூட மணி அணியின் ஆதரவின்றி அனைத்துசபைகளையும் கைப்பற்றலாம். ஊர்காவற்துறை விதிவிலக்கு. அதன் காரணம் பின்னால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜேவிபியின் ஆதரவினால், பெரும் விமர்சனத்தை சந்திக்க வேண்டியிருக்கும். சிறிதர் தியேட்டருக்கே செல்லத்துணிந்த தமிழரசு தலைமை, இந்த விமர்சனத்தில் சங்கடப்படும் என எதிர்பார்ப்பதும் அதிகபட்சம்தான்.

மாறாக, இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிரான நிலைப்பாட்ட தேசிய மக்கள் சக்தி எடுத்தால்- முடிவுகள் தலைகீழாக மாறும்.

குறைந்தபட்சம் இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கான வாக்கெடுப்பை தேசிய மக்கள் சக்தி ஆதரித்தாலே முடிவுகள் மாறும்.

தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களில்- சிறிதரன் ஆதரவு உறுப்பினர்கள்- கட்சியின் முடிவை மீறி – இரகசியமாக வாக்களிக்க தயாராக உள்ளனர். ஆனால் இரகசிய வாக்கெடுப்பை கோரும் வாக்களிப்பில் அதை பகிரங்கமாக ஆதரிக்கமாட்டார்கள். இரகசியமாக கட்சிக்கு எதிராக கலகம் செய்ய தயாராக உள்ளனர். இதை மோப்பம் பிடித்த கட்சித்தலைமை, தமிழரசு உறுப்பினர்கள் யாரும் இரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடாது என்ற கண்டிப்பான கட்டளையை இட்டுள்ளது.

இதனால், ஜேவிபியின் ஆதரவுடன் இரகசிய வாக்கெடுப்பு நிகழ்தால், தமிழரசு கட்சிக்கு இன்னும் அதிர்ச்சிகள் காத்திருக்கும்.

இதேவேளை, ஊர்காவற்துறையில் நிலைமை வேறு. அங்கு ஈ.பி.டி.பிக்கு 4 ஆசனங்கள். தமிழ் தேசிய பேரவைக்கு 3, தமிழரசுக்கு 2, சங்குக்கு 1. ஜேவிபிக்கு 3.

தற்போது அமைந்துள்ள தமிழரசு, ஈ.பி.டி.பி கூட்டணி 6 ஆசனங்களுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும்.

ஆனால், அங்குள்ள தமிழரசு கட்சியினர் ஈ.பி.டி.பியை ஆதரிக்கவில்லை. அவர்கள் சிறிதரன் அணியினர். அவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கவுள்ளனர். உள்ளூராட்சிசபைகளுக்கு நிதி வராது என்பதால், தவிசாளர் பதவிகளை பெற்று மக்களின் அதிருப்தியை பெற தயாரில்லை என குறிப்பிட்டு ஈ.பி.டி.பி அதிகாரத்தை கைப்பற்றாமலிருக்க தீர்மானித்துள்ளது. இப்படி பார்த்தால்- அங்கு தமிழரசு கட்சிதான் அதிகாரத்துக்கு வர வேண்டும். ஆனால் அங்குள்ள சிறிதரன் அணியினர், தமது தலைமையின் கட்டளைப்படி- தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

இதேபோல, நெடுந்தீவு பிரதேசசபையில் வென்றவர்களும் சிறிதரன் அணியினரே. அங்கு தமிழரசு கட்சி ஆட்சியமைக்க நெருக்கடியில்லாவிட்டாலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது ஆதரவை வழங்கவுள்ளது.

ஆக, மொதத்ததில் நூடில்ஸில் இடியப்பம் தயாரித்து, இடியப்ப சிக்கலாக்கி வைத்துள்ளது தமிழரசுக்கட்சி.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்