இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, தேசிய மக்கள் சக்தியுடன் இரகசிய பேச்சில் ஈடுபட முனைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம், அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் யாழிலுள்ள ஜேவிபி பிரமுகர்களை சந்திக்க, தமிழ் அரசு கட்சி தவிசாளர் வேட்பாளர் முயன்ற சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
நேற்று தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி புரிந்துணர்வு உடன்படிககை கைச்சாத்தானதும், இந்த சம்பவம் நடந்துள்ளது.
யாழிலுள்ள பிரதேசசபையொன்றில் தவிசாளர் ஆவதை அரசியல் இலட்சியமாக கொண்ட தமிழ் அரசு கட்சியின் உள்ளூர் பிரமுகர் ஒருவர், சங்கு- சைக்கிள் கூட்டணியால் தனது கனவில் மண்விழுந்து விடுமோ என பயந்தவர், அந்த பிரதேசசபைக்குட்பட்ட தேசிய மக்கள் சக்தி பிரதேசசபை உறுப்பினர்களுடன் பேச்சை ஆரம்பித்துள்ளார்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அதிக கட்டுப்பாடுகள் விதித்துள்ள கட்சியல்லவா. இந்த விவகாரத்தில் தம்மால் முடிவெடுக்க முடியாது- கட்சி தலைவர்களுடன் பேசுங்கள் என கூறிவிட்டனர்.
இதையடுத்து, ஜேவிபியின் யாழ்- வடக்கு தலைமையுடன் பேச திட்டமிட்ட அந்த நபர், மூன்றாம் தரப்பினர் மூலம் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜேவிபி தலைமை எகத்தாளமாக அதை நிராகரித்து விட்டது.
“இப்படியான கூட்டணி பேச்சுக்கள் நடத்த வேண்டுமெனில் உங்கள் தலைவர்களை வந்து பேசச்சொல்லுங்கள். இல்லை, நீங்கள் பேச வேண்டுமெனில், எமது பிரதேசசபை உறுப்பினர்களுடன் பேசிக்கொள்ளுங்கள்“ என பதில் கூறி அனுப்பியுள்ளனர்.
பிரதேசசபை தவிசாளர் வேட்பாளரின் இந்த அரசியல் நகர்வு, கட்சி தலைமையின் அனுமதியுடன் நிகழ்ந்ததா என்று சொல்ல முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் தமது கையை விட்டு சில சபைகள் பறிபோய்விடும் என்ற அச்சம் தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்டு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் உடன்படிக்கை எட்டாமல் விட்டது அரசியல் தவறு என கட்சி தலைமையை இளநிலை பிரமுகர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ள பின்னணியில்- கட்சியும் இதே முடிவை எடுத்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



