♦மதுசுதன்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் போது தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள செயல்பாட்டாளர்கள் ,ஆதரவாளர்கள், தமிழ்த்தேசிய ஆன்மாவினை ஆழ நேசிப்போர், ஊடக்வியலாளர்கள் அனைவருமே தமிழ் தேசிய கட்சிகளுக்கு தான் மக்கள் வாக்களிக்க வேண்டும். விஸ்வரூபம் எடுத்து எம் வாக்கு வங்கியை சிதைக்க வரும் பொது எதிரியான அரச கட்சியியினை தோற்கடிக்கவே அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தார்கள். அதன் பால் தமிழ் கட்சிகளும் தம்முள்ளே தள்ளுமுள்ளுப்பட்டு விமர்சனம் செய்வதை தவிர்த்திருந்தன.
தேர்தல் நடைபெற்று முடிந்ததும் நல்ல மகிழும் படியான முடிவுகளையே தமிழ் தேசிய பரப்பில் மக்கள் ஆணையளித்திருந்தார்கள்.
அதன் பின்னணியில் தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முண்ணனி முதன்மைமையான தமிழ் தேசிய பேரவை, ஜனநாய தமிழ் தேசிய கூட்டமைப்பு என மூன்றும் மக்களால் ஆணை வழங்கப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்று இருந்தன.
இதில் மூன்று தரப்பும் ஏதாவது ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்திருந்தால் எந்த சலனமோ சந்தடியோ இல்லாமல் எல்லா சபைகளிலும் ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால் தேர்தலில் பின் யார் சபை பிடிப்பது யாருக்கு அதிகம் மக்கள் செல்வாக்களித்தார்கள் என்ற வீரிய விளையாட்டில் மேல்படி கட்சிகள் முட்டி மோதிக்கொண்டிருந்தன.
இந்த முட்டி மோதல்களுக்கிடையே அண்மையில் சபை அமைப்பது தொடர்பாக தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் கருத்து பகிர்வுகள் ஏற்பட்டு எழுதப்படா உடன்படிக்கை ஏற்பட்டதாகவே தமிழர் அரசியல் பரப்பில் அதிகம் பேசப்பட்டது.
அதாவது தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு எங்கும் வியாபித்த கட்சி ஆகவே அதற்கு ஆதரவளிப்பதுதான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு அரசியல் எதிர்காலத்திற்கு லாபமாக அமையும் எனவே இணைவுகள் மெல்ல மெல்ல சாத்தியமாக தென்பட்டன. இதில் தமிழ்தேசிய மக்கள் முன்ணணி தலைமையிலால தமிழ் தேசிய பேரவை பக்கம் கொஞ்சம் அதிகமாக தலைவைத்து படுக்காமல் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பார்த்து கொண்டது.
அந்த பின்னணியில் திடீர் என ஓரிரு நாட்களுக்கு முன் “நரி விடுதியில்” தமிழரசு கட்சியின் தற்காலிக தலைவர் செயலர் ஆகியோர் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் நிரந்தர தலைவர் நிரந்தர செயலர் ஆகியோரை சந்தித்தி அரைமணிநேர கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதன் பின்னணியில் இணக்கப்பாடு பற்றியும் சபை அமைப்பது பற்றியும் கலந்துரையாடல் நிகழ்ந்தாலும் அது வெற்றி அளித்ததாக தெரியவில்லை. அந்த பேச்சு முடிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழரசு கட்சி “ஏக்கிய ராச்சிய” என்பதை கைவிடாதவரை இணக்கம் சாத்தியமில்லை என கட்டியம் கூறி சொல்லிவிட்டது. ஆக அந்த கருத்துக்கு பின்னால் தமிழரசு கட்சியோடு கஜேந்திரகுமார் அணி இணக்கம் என்பது கனவாக தான் போயிருந்தது.
இந்த நிலையில் பழைய நிகழ்வான சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசு கட்சிக்கே ஆதரவளிப்பது என்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்சணியின் கொள்கை ரீதியான இணக்கமே சாத்தியப்படும் என எல்லா அரசியல் அவதானிகளும் எதிர்பார்த்திருக்க எதிர்பாராதவிதமாக கஜேந்திரகுமார் அணியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து ஓர் அரசியல் விநோதத்தினை நிகழ்த்தி காட்டியிருக்கிறது.
ஆம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை உடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கொள்கை ரீதியாக சபைகளில் ஆட்சி அமைக்கும் இணக்கத்திற்கு வந்து ஒப்பந்தமும் கைச்சாத்தாக்கி விட்டது.(02.06.2025)
சரி பிழை விமர்சனங்களுக்கு அப்பால் அது ஒர் அரசியல் அதிரடியாகவே பார்க்கப்படுகிறது. தமிழரசு கட்சியினருக்கும் வயிற்றில் புளியை கரைத்து விட்டிருக்கிறது .
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அத்தனை கட்சிகளையும் நபர்களையும் ஏதோ ஓர் வகையில் துரோகிகளாக அல்லது தீண்டத்தகாதவர்களாக பார்த்து வந்த கஜேந்திரகுமார் அணியில் பாரிய ஓர் மாற்றம் வந்துகொண்டிருப்பது அவர்களின் எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கான சமிஞ்ஞைகளாகும்.
அவர்கள் இன்று இணைந்திருக்கும் தரப்பிலுள்ள எல்லோரையும் ஏதோ ஓர் வகையில் துரோகிகளாக அல்லது வேண்டத்தகாதவர்களாக தான் அவர்களின் அரசியல் சித்தாந்தம் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் தூக்கி கடாசி விட்டு புதிய அரசியல் பரிணாமத்திற்குள் தங்களை புகுத்தியுள்ளார்கள் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸினர்.
ஆம் இந்த மாற்றம் மிக அண்மையில் உள்ளூராட்சியோடு வந்த அதிசயமானதும் அதிரடியானதுமான மாற்றமாகும்.
உள்ளூராட்சி சபைகளுக்காக அரசியல் பலம் இல்லாதவர்களோடு ஓர் கூட்டு என்ற பெயருக்காக ஆவது இணைந்து ” தமிழ் தேசிய பேரவை” என இயங்கி பல ஆசனங்கள் பெற்றவர்கள் இன்று அவர்களது தொடந்த தோற்றுபோன அரசியல் அணுகுமுறைகளை கைவிட்டு அனைவருடனும் இணைந்து பயணிக்கும் அணுகுமுறைக்குள் தங்களை தாங்களே கூட்டி கொண்டுவந்திருப்பது. அரசியல் முதிர்ச்சி தன்மையின் வெளிப்பாடாகும்.
தமிழ் தேசிய பரப்பில் யாழ்ப்பாணத்தினை தாண்டி அரசியல் செய்ய முடியா ஓர் அரசியல் வக்குரோந்தடைந்த யாழ் மைய அரசியலும் அதுவும் அடுத்தவருடன் இணங்காத மற்றவரை சதா குறை கூறி மேலெழுந்துவிடலாம் என்ற தொடர் தோல்வி நிலை அரசியல் நிலைப்பாடுகளினை மாற்றி இந்த புதிய இணக்கப்பாட்டு முயற்சிக்குள் இறங்கியிருப்பது அவர்களின் அரசியல் அனுபவம் மற்றும் அரசியல் முதிர்ச்சி மற்றும் எதிர்கால அரசியல் வெற்றி இலக்கு என்பவற்றினை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன.
இதில் கஜேந்திரகுமார் தன் அணி சார்ந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்வீட்டினரை சமரசம் செய்து தெளிவடைய செய்து இந்த இணக்கப்பாட்ட்டினை ஏற்படுத்தி இருப்பது அவரது சாணக்கிய தன்மையை எடுத்தியம்புகிறது.
2010 இல்” தமிழ் தேசிய கூட்டமைப்பில்” இருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் அணி பின் தம் வெற்றியை பெற தமிழரசு கட்சியை ,கூட்டமைப்பினை விமர்ச்சிப்பதான எதிர்ப்பரசியலையே பிரதான சித்தாந்தமாக கைக்கொண்டிருந்தது . இரு தேர்தல்களில் தொடர் தோல்வி அடைந்தாலும் பின் இரண்டு கஜாக்களும் பாராளுமன்றம் செல்லுமளவுக்கு அவர்களது எதிர்பரசியலை வீரியமாக்கி வெற்றியும் கண்டிருந்தார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்கள் அதிகமாக விமர்சித்த இரா. சம்மந்தன் ஐயா அமரத்துவம் அடைந்துவிட்டார் அடுத்தது சுமந்திரன் நேரடி அரசியல் களத்தில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார். ஆக அவர்களது இரு பொது எதிரிகளும் தான் அவர்களின் பொதுபடையான விமர்சன அரசியலுக்க்கான மையப்புள்ளிகள். இரண்டும் இல்லாததால் இப்போது அவர்களுக்கு வேலைகள் அதிகம் இருப்பதில்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் கஜேந்திரகுமார் மட்டுமெ ஓர் ஆசனத்தினை பெற்றதோடு அவர்களது கட்சியும் வாக்கு வங்கியை சரிவித்தது. ஆக கஜேந்திரகுமார் எதிர்கால அரசியல் இருப்பு பற்றி சதா சிந்தித்ததன் விளைவே இன்றைய ” தமிழ் தேசியப் பேரவை” ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ” இணக்கப்பாடு.
பார்க்கபோனால் இந்த இணக்கப்பாடு நிகழ்வு கஜேந்திரகுமாரின் அரசியல் முதிர்ச்சி அரசியல் அணுகுமுறை என்பன வேறு பரிமாணத்தினூடாக பயணிக்க இருப்பதை காட்டுகின்றது.
என்ன வியாக்கியானம் சொன்னாலும் இந்த நகர்வில் தமிழரசு கட்சி பெரும் தோல்வி அடைந்து நிற்கிறது. தமிழரசு கட்சியின் அரசியல் அணுகுமுறை சாணக்கியம் என்பன இதில் படுதோல்வியை சந்தித்து நிற்கிறது.
இலகுவாக பல சபைகளை கைப்பற்றகூடிய தமிழரசு கட்சி தன் அரசியல் முதிர்ச்சி அல்லது அரசியல் சாணக்கியத்தனத்தினை தூக்கி நிறுதாமையினால் பல பெரும்பாலான சபைகளை இழந்துவிட்டது. ஆனால் அவர்களும் அவர்கள் ஆதவாளர்களும் தம் இயலாமையினை நிரூபிக்க கையில் எடுக்க போவதோ ” கஜேந்திரகுமார் துரோகிகளுடன் இணைந்துவிட்டார்” ” கஜாக்கள் தாமே துரோகிப்பட்டம் கொடுத்தோருடன் சேர்ந்து கூஜா தூக்க போய்விட்டார்கள்” என்பதாக தான் அமைகிறது. அமைய இருக்கிறது . இது வெற்றும் வெறிதான கூச்சல் மட்டுமே! ஏன் 2028 உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி துரோகியாக தீண்டாமையாக பார்த்த ஈபிடிபி உடன் இணைந்து யாழ்பாண மாநகரசபை உட்பட பல சபைகளை கைப்பற்றியதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆக வெற்று கூச்சல்கள் எதுவும் அரசியல் நிலைபாட்டு நகர்வுகளில் பெரும் தாக்கத்தினை செலுத்த போவது இல்லை.
இந்த அதிரடி அரசியல் விநோதம் தமிழ் தேசியப் பரப்பில் அதிக ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.
ஆக தமிழரசு கட்சிக்கு மிகப்பெரும் செக் மேற் வைத்திருக்கிறார்கள் கஜேந்திரகுமார் மற்றும் ஜனநாயக கூட்டணியினர் & கோ என்று தான் சொல்ல வேண்டும்.



