மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசுக் கட்சிக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
32 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 13 ஆசனங்களை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகளைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர்களாக சித்தாண்டியைச் சேர்ந்த முரளி மற்றும் செங்கலடியைச் சேர்ந்த நிலாந்தன் ஆகிய இருவரும் தவிசாளர் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர் .
இதில் முதல் இரண்டு வருடங்களுக்கு முரளிக்கும், அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு நிலாந்தனுக்கும் என உறுப்பினர்களின் வாக்களிப்பு மூலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், நிலாந்தன் தரப்பினர் இதை ஏற்காமல் குழப்பத்தில் ஈடுபட்டனர். குறித்த வாக்கெடுப்பில் முறைகேடுகள் உள்ளது என்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெருபான்மை முரளிக்கு இல்லை என்றும் இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்குமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
மட்டக்களப்பில் ஏற்கெனவே சில சபைகளில் இதே மாதிரி குழப்பம் இருந்தாலும், நிலாந்தன் கடிதம் அனுப்பியதும் கட்சியின் தலைவர், செயலாளர் மட்டக்களப்புக்கு சென்று, சமரசத்தில் ஈடுபட்டனர். நிலாந்தன் ஊடகத்துறை சார்ந்தவர் என்பதால் இந்த நடவடிக்கையா என மாவட்டத்தில் உள்ள கட்சியினர் கொதித்து போயுள்ளனர்.
இதன் அடிப்படையில் கட்சியின் உயர்மட்ட குழு நேற்று முன்தினம் மட்டக்களப்பிற்கு வந்து இது குறித்து ஆராயும் வகையில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு சந்திவெளியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், கல்குடா தொகுதி கிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமைய சித்தாண்டியைச் சேர்ந்த முரளியும் செங்கலடியைச் சேர்ந்த நிலாந்தனும் தவிசாளர் பதவிகளை பகிர்ந்து கொள்வார்கள் என்றும், ஆனால் சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையாக உள்ள ஏனைய கட்சிகளை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களின் ஆதரவை முரளியால் பெறமுடியாத சூழ்நிலை உள்ளதாகவும்- பிரதேசத்தில் முஸ்லிம் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென்ற இறுக்கமான நிலைப்பாடுடையவர் என்பதால்- முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் முரளி எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். எனினும், முஸ்லிம் தரப்பின் ஆதரவில்லாமல் தமிழ் தரப்பின் ஆதரவுடன் தன்னால் ஆட்சியமைக்க முடியுமென்றும் முரளி தரப்பு கூறுகிறது.
அடுத்த தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நிலாந்தனுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு இருக்குமானால் அவரை முதலில் தவிசாளராக முன் நிறுத்தி கட்சியை வெற்றி பெறச் செய்ததன் பின்னர் பின்னால் வரும் இரண்டு வருடங்களுக்கு முரளியை தவிசாளராக்கலாம் என்று கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை வழங்கியிருந்தது.
ஆட்சியமைப்பதற்கு ஏனைய தரப்பினருடன் பேச்சு நடத்த வேண்டியது கட்சியின் கடமை. ஆனால், மேற்படி தீர்மானம்- நிலாந்தனுக்கு சார்பாக எடுக்கப்பட்டது என ஏனைய உறுப்பினர்கள் கொதித்து போயுள்ளனர்.
முரளி மிக நேர்மையானவர் என்ற பெயர் உள்ளது. கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் வெற்றியீட்டிய அவர், கட்சியின் நிலைப்பாட்டின்படி, இரண்டு வருடத்தில் தனது பதவியை துறந்து, மற்றொருவருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தார்.
தவிசாளர்கள் யார் என்பதற்கு அப்பால் சபையில் தமிழரசுக் கட்சி தோல்வி அடையக் கூடாது என்பதில் தான் கட்சியின் உயர்மட்ட குழு கவனம் செலுத்தும் என இதன் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
எனவே ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளராக நிலாந்தனும், முரளியும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உள்ளது என்பதன் அடிப்படையில் அவரை முதலில் தவிசாளராக முன் நிறுத்துவதற்கு கட்சியின் உயர்மட்ட குழு தீர்மானித்துள்ளது. அத்துடன் முரளி மற்றும் நிலாந்தனை தவிர கட்சி வேறு யாரையும் தவிசாளராக தெரிவு செய்யவில்லை என்றும் கட்சியின் மேற்படி தீர்மானத்திற்கு மாறாக குழப்பங்களை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபடும் என கட்சியின் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.



