உள்ளூராட்சிசபையில் போனஸ் ஆசனம் வழங்குவது தொடர்பான சர்ச்சையில், கிளிநொச்சி இயக்கச்சியில் தேசிய மக்கள் சக்திக்குள் பெரும் களேபரம் வெடித்துள்ளது.
இளைஞர் விவகார பிரதியமைச்சர் இன்று அங்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவிருந்த நிலையில், அங்குள்ள பெண்ணொருவருக்கு போனஸ் ஆசனம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, அங்குள்ள சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதியமைச்சர் உள்ளிட்ட ஜேவிபி பிரமுகர்கள் இயக்கச்சி நிகழ்வுக்கு செல்வதை தவிர்த்து விட்டனர்.
இயக்கச்சி பகுதியிலுள்ள செல்வந்தரான, தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் ஒருவரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடந்தது. உள்ளூராட்சி தேர்தலில் மேற்படி செல்வந்தரின் சகோதரியும் போட்டியிட்டார். ஆனால் வெற்றியீட்டவில்லை. அவர் 300 இற்கும் அதிக வாக்குகளை பெற்றார் என்றும், வெறும் 27 வாக்குகளை பெற்ற ஒருவருக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டு, செல்வந்தர் தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்.



