♦கருணாகரன்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலோடு ‘தமிழ்த்தேசிய அரசியல்’ என்ற ‘பிராந்திய அரசியல்’ (Regional politics) மீண்டும் (மறுபடியும்) வலுப்பெற்றுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தமது பிராந்திய அரசியலைக் குறித்துக் கலங்கிப் போயிருந்த தமிழ்த்தேசியவாதத் தரப்பினருக்கு, இந்த வெற்றி உற்சாகத்தைத் தந்திருக்கிறது. தமிழ்த் தேசியவாத ஊடகங்களுக்கு இது இன்னும் மகிழ்ச்சியாகும்.
பிராந்திய அரசியல் பலவீனமடைந்துவிட்டால் தமிழ் ஊடகங்களுக்கு ‘சங்கதியே‘ இல்லாமற் போய் விடுமல்லவா! அப்படித்தான் தமிழ் அரசியற் தரப்பினருக்கும். எதிர்ப்புக்கு (சட்டியைச் சூடாக்குவதற்கு) ஒரு தரப்பு வேண்டும். அதாவது கற்பனையிலாவது ஒரு வில்லன் வேண்டும்.
தமிழ்த் தரப்பில் மட்டுமல்ல, முஸ்லிம், மலையகத் தரப்பிலும் இதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஆக, உள்ளுராட்சித் தேர்தலில் பிராந்திய அரசியலும் அதை முன்னெடுத்த சக்திகளும் மீளுயிர்ப்புப் பெற்றுள்ளன எனலாம்.
இது “பிராந்திய அரசியல் தளர்ந்து விட்டது. இலங்கைத் தேசிய அரசியலின் பக்கமாக தமிழ் பேசும் மக்கள் நகர்ந்து விட்டனர்…” என்று சொல்லிக் கொண்டிருந்த NPP க்குச் சற்றுச் சறுக்கல்.
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, ஆட்சியிலிருக்கும் NPP யின் தவறுகள். குறிப்பாக வடக்குக் கிழக்கிலுள்ள NPP யினரின் வாய்தான் NPP க்குப் பின்னடைவைக் கொண்டு வந்தது. அமைச்சர் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போன்றோர் இதில் உச்சம். அதிலும் சந்திரசேகரின் சொற்களும் உடல்மொழியும் நையாண்டித்தனமான பரிகசிப்பும் NPP ஆதரவாளர்களைக் கூட தலைகுனிய வைத்தன. அதற்கும் அப்பால் சந்திரசேகரின் நீண்டகால நண்பர்களையும் வெட்கப்பட வைத்தன.
இவ்வளவுக்கும் சந்திரசேகர் JVP யில் 30 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்டவர். ஒரு தடவை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இப்பொழுது அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர். இப்படியெல்லாம் இருந்தும் எதைப்பேசுவது? எப்படிப் பேசுவது? அரசியல் விடயங்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாத நிலையிலேயே சந்திரசேகருடைய நடவடிக்கைகளும் வார்த்தைகளும் உள்ளன.
இளங்குமரனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அந்தளவுக்கு அரசியல் விடயங்களைப் பற்றிய பேச்சுகளில் மிகப் பலவீனமாக உள்ளார்.
இது போதாதென்று, இதற்கெல்லாம் வலுச்சேர்க்கிற மாதிரி – NPP யை தமிழ் பேசும் மக்களிடத்திலிருந்து விலக்கம் செய்வதைப்போலவே – அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் பேச்சுகளும் இருந்தன. “இலங்கையில் முஸ்லிம் அரசியல் என்ற ஒன்றே இல்லை…” என்ற தொனியில் பேசினார் பிமல். ஆனையிறவு உப்புப் பற்றிய கேள்வி எழுந்தபோது, “உங்களுக்கு உப்பின் ருசி முக்கியமா? அதனுடைய பெயர் முக்கியமா?” என்று திமிர்த்தனமாகப் பேசினார். இது பலரையும் முகம் சுழிக்க வைத்தது.
இரண்டாவது, தமிழ் பேசும் மக்களை நெருங்கி வருவதை விட, தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட, சிங்களப் பேரினவாதத் தரப்புகளை மகிழ்வூட்டுவதிலேயே – அவற்றுக்குத் திருப்தியளிப்பதிலேயே NPP கூடிய கவனம் செலுத்தியது.
என்னதான் மாற்றுச் சக்தியாக, தேசியத் தன்மையுள்ள தரப்பாக, தன்னை அடையாளப்படுத்துவதற்கு NPP முயற்சித்தாலும் அடிப்படையில் அதுவும் ஏனைய சிங்களத் தரப்புகளைப் போன்றே செயற்படுகிறது. சிங்கள மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதிலும் கூடுதல் அக்கறை காட்டுகிறது.
இதனால் ஏனைய சிங்களத் தேசியவாதக் கட்சிகளைப்போலத்தான் NPP யும் என்ற எண்ணம் தமிழ் பேசும் மக்களிடத்திலே உருவாகியது. இதெல்லாம் NPP மீதான நம்பிக்கையை இழக்க வைத்ததோடு, அதனுடைய மதிப்பையும் குறைத்தது.
பொதுவாகவே ஆட்சியிலிருக்கும் தரப்பை எதிர்நிலையில் வைத்துத் தனது அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த்தேசியத் தரப்பினருக்கு (பிராந்திய சக்திகளுக்கு) NPP யின் இந்தப் பலவீனங்களும் சிங்களத் தேசியவாதத்தின் பக்கமான சாய்வும் வாய்ப்பாகியது.
தமக்குள் பல அணிகளாகப் பிளவு பட்டிருந்த தமிழ் அரசியற் தரப்புகள் (தமிழ்த்தேசியவாதச் சக்திகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட) அனைத்தும் NPP யை ஒருமுகப்பட்டு எதிர்த்தன. அதாவது அனைவருக்கும் பொது எதிரி NPP என்றாகியது.
முஸ்லிம், மலையகச் சூழலும் இதுவே நடந்தது.
என்பதால் அந்தப் பொது எதிரியை (NPP) எதிர்ப்பதில் அனைத்துத் தமிழ்த்தரப்பும் ஒரே இலக்கில் நின்று செயற்பட்டன. எல்லாத் தேர்தல் மேடைகளிலும் NPP க்கு எதிரான குரல்களே ஒலித்தன. (தெற்கிலும் அனைத்துத் தரப்புக்கும் NPP யே பொது எதிரி) தமிழ் (தேசியவாத) ஊடகங்களிலும் NPP க்கு எதிரான தொனியே தூக்கலாகத் தெரிந்தது.
இப்படியெல்லாம் தமிழ்த் தரப்புகள் NPP யைப் பொது எதிரியாகச் சித்திரித்து நின்றபோதும் NPP ஐ முழுதாகத் தோற்கடிக்க முடியவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி 307,657 வாக்குகளைப் பெற்றது. NPP யோ 306,968 வாக்குகளைப் பெற்று மிக நெருக்கமாக இரண்டாம் இடத்தில் நிற்கிறது.
என்பதால் பிராந்திய அரசியலின் (தமிழ்த்தேசிய அரசியலின்) நெருக்கடி தீர்ந்து விட்டதாகச் சொல்ல முடியாது. இந்தத் தேர்தல் முடிவுகளைப் பரிசீலித்துக் கொண்டு NPP தன்னைச் சற்றுச் சுதாகரித்துக் கொண்டால், அதனுடைய இடம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு விடும். இதைப் புரிந்து கொள்ளாமல் NPP யைப் பின் தள்ளி விட்டதாக பிராந்திய அரசியல் சக்திகள் (தமிழ்த்தேசியவாதிகள்) மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றன.
வடக்குக் கிழக்கில் எதிர்பார்த்தவாறு சபைகளைக் கைப்பற்றுவதற்கு NPP யினால் முடியாமற் போயிருக்கலாம். அதனுடைய வாக்குகளும் சபைகளில் உறுப்பினர்களின் தொகையும் வலுவானதாகவே உள்ளது. என்பதால் நினைத்த மாதிரி (முன்னரைப்போல) பிராந்திய சக்திகள் (தமிழ்த்தேசியத் தரப்புகள்) வாலாட்ட முடியாது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. முன்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை தமிழ்த் தேசியத்தரப்புகளுக்கு வாய்ப்பாக இருந்தது.
இப்பொழுது அந்தச் சூழல் இல்லை. தேசிய மக்கள் சக்தியே ஒருங்கிணைப்புக்குழுவைத் தன்னுடைய கைகளில் வைத்திருக்கிறது. அரச நிர்வாகமும் அதனுடைய பொறுப்பிலேயே உள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும்வரையில் ஆளுநர்களே வடக்குக் கிழக்கின் நிர்வாகத்துக்குப் பொறுப்பானவர்கள். அவர்கள், NPP யினால் நியமிக்கப்பட்டவர்கள். அல்லது NPP யை மீறிச் செயற்பட முடியாதவர்கள்.
ஆகவே பிராந்திய அரசியலின் நிலை தமிழ்த் தேசியவாதிகள் மகிழ்ச்சியடைதற்கு ஏற்ற மாதிரி ஒன்றும் வெற்றியடையவில்லை. தேசிய மக்கள் சக்தி எந்தச் சபையையும் கைப்பற்றவில்லை என்பது ஒரு ஆறுதல் பரிசு மட்டுமே. மற்றும்படி மக்கள் முற்று முழுதாக அதனை விட்டு விலகி விட்டார்கள் என்றில்லை. ஐக்கிய தேசியக் கட்சியோ, சுதந்திரக் கட்சியோ, பெரமுனவோ முன்னெப்போதும் பெறாத வாக்குகளையும் இடத்தையும் NPP பெற்றுள்ளது. அதுவும் கிராமங்களில் கூட.
இன்று நாட்டிலுள்ள அனைத்து அரசியற் சக்திகளும் NPP க்கு எதிராகவே நிற்கின்றன. NPP யும் எந்தச் சக்திகளோடும் கூட்டு வைத்துக் கொள்ளவில்லை. அப்படியென்றால், உண்மையில் நாட்டிலுள்ள அனைத்துச் சக்திகளுக்கும் NPP பொது எதிரிதானா? அப்படியென்றால், NPP யை விட நல்ல சக்திகள் எவை? அல்லது NPP உட்பட அனைத்துச் சக்திகளும் கூடாதவையா?



