முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளர் ஒருவர்- அவரை உளறு வாயர் என்றும் சொல்லலாம்- சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, தற்போது கட்சி தலைமையிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கான தமிழரசு கட்சி வேட்பாளரான அவர் அரசியலில் ஒரு அங்கிடு தத்தியும் கூட. முதலில் தமிழரசு கட்சியின் ரவிகரன் அணியில் இருந்தார். பின்னர் அங்கிருந்து பல்டியடித்து சிவமோகன் அணியில் இணைந்தார். ரவிகரனை திட்டித்தீர்த்தார். பின்னர், சுமந்திரன் அணியில் இணைந்தார். தற்போதைக்கு அவரின் கடவுள் சுமந்திரன் மாத்திரமே.
வாய்க்கு வந்தபடி உளறுவதில் அவர் கில்லாடி. முன்னர் ஒருமுறை அவரை பொதுமக்கள் சிலர் ஒரு பிரச்சினையில் நையப்புடைத்தனர். அப்போது அவரது கைத்தொலைபேசி அவர்களிடம் சிக்கியது. தொலைபேசியை பரிசோதித்த போது தலைவர் பிரபாகரனை அவர் திட்டித்தீர்க்கும் ஒலிப்பதிவுகள் இருந்தன. பின்னர் அவை சமூக ஊடகங்களில் வெளியாகி பலத்த கண்டனங்களை எதிர்கொண்டன.
இந்த உளறுவாயர் இம்முறை உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்தில், தன்னுடையதும், தலைவர் பிரபாகரனதும் புகைப்படங்களை அச்சிட்டு விநியோகித்தார். தேர்தல் வெற்றிக்காக தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை எப்பேர்ப்பட்ட அயோக்கியர்களும் பயன்படுத்தலாம் என்ற விபரீதம் தமிழ் சூழலில் உருவாகுவதன் பேராபத்தை தமிழ் சமூகம் எப்போதுதான் புரிந்து, திருந்தப் போகிறதோ தெரியவில்லை.
தேர்தலில் இந்த நபரும் வென்றார்.
அத்துடன் நின்றபாடில்லை. கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் வெற்றியீட்டிய சிலரை வளைத்து, தன்னை தலைவராக்கும்படி கோரி, கட்சித்தலைமைக்கு ஒரு கோரிக்கை கடிதமும் அனுப்பி வைத்தார்.
ஆள் சுமந்திரனின் ஆள்… கணிசமான உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.. அவரையே பிரதேசசபை தவிசாளராக்கலாமென கட்சியும் கொள்கையளவில் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தது.
மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசினால் என்ன நடக்கும் என்பதற்கு… இந்த உளறு வாயருக்கு நடந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.
தேர்தல் வெற்றி, தவிசாளராகப் போகிறேன் என்ற போதையில்- தன்னிலை மறந்து, யூடியூப் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை அரசியல்வாதிகளுக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். குறிப்பாக ரெலோவை குறிவைத்துத்தான் தாக்கியதாக கருதப்படுகிறது. உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்ற அடிப்படை விடயமாவது அவருக்கு தெரிந்திருந்தால், அவர் இப்படி பேசியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.
ஆனால், நம்மாள்த்தான் உளறு வாயராச்சே. பேசி விட்டார்.
இந்த பேட்டியை பார்த்த பின், உளறு வாயருக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் ஆதரவளிப்பார்களா?
இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையில் உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதற்கான பேச்சுக்கள் நடந்து வருகிறது.
ஆனால், கரைத்துறைப்பற்றில் உளறு வாயரை தவிசாளராக்கினால் ஆதரிப்பதில்லையென்ற முடிவை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுத்து விட்டது.
வன்னியில் சபைகளை அமைப்பது தொடர்பான பணிகளை கவனித்து வந்த தமிழரசு கட்சியின் எம்.பி சத்தியலிங்கத்துக்கு இந்த விவகாரத்தை கையாள சிரமமாக இருந்துள்ளது. விடயத்தை இன்று (16) கட்சித்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திடம் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியில் முன்னர்தான் எந்த விவகாரத்திலும் நடவடிக்கையெடுக்கப்படுவதில்லை, பிரச்சினைகளை ஆறப்போட்டு பெரிதாக்குவார்கள் என்ற விமர்சனம் இருந்தது. சீ.வீ.கே அப்படியல்ல. உடனுக்குடன்- சூட்டோடு சூடாக பிரச்சினைகளை கையாண்டு, நடவடிக்கையெடுக்கிறார்.
கரைத்துறைப்பற்று உளறு வாயரின் விவகாரம் சீ.வீ.கே இடம் சொல்லப்பட்ட போது, அவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருனான சந்திப்புக்காக, நல்லூரிலுள்ள எம்.ஏ.சுமந்திரனின் வீட்டில் இருந்தார். தகவல் கிடைத்ததும் கரைத்துறைப்பற்று உளறு வாயருக்கு அழைப்பேற்படுத்திய சீ.வீ.கே நல்ல டோஸ் கொடுத்துள்ளார். அவர் டோஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரும் அங்கு வந்து விட்டனர். செல்வம் அடைக்கலநாதனை பக்கத்தில் வைத்துக் கொண்டு, “தம்பி நீர் பேசியது முற்றியும் பிழையானது. கட்சி அதை துளியளவும் ஏற்காது. இப்படி நடந்தால் பொறுத்துக்கொள்ளாது“ என சீ.வீ.கே டோஸ் கொடுத்தார்.
தான் பிழையாக கதைத்து விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் உளறு வாயர் கேட்டுக்கொண்டார்.
இந்த உரையாடலை செல்வம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார்.
விடயம் இத்துடன் முடியவில்லை. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆட்சேபனையை புரிந்து, உளறு வாயரை தவிசாளராக நியமிப்பதில்லையென தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.
நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு ஆகப்பிந்திய உதாரணம் இதுதான்!




