♦கருணாகரன்
காலமெல்லாம் ஒற்றுமையைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் ‘தமிழ்த் தரப்புகள் பிரிந்து நிற்பது ஏன்?‘
பலரும் வெளிப்படையாகக் கேட்காமல் விட்டாலும் இந்தக் கேள்வி எல்லோரிடமும் உண்டு.
ஏனென்றால், ‘தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கும் இழப்புகளுக்குரிய நீதியைப் பெறுவதற்கான சர்வதேச ஆதரவுக்கும் தமிழ் மக்கள் ஒன்றாகத் திரண்டு நிற்க வேண்டும்‘ என்றே தமிழ்த்தேசியவாதக் கட்சிகள் கூறி வந்தன. அப்படிக் கூறியே தேர்தல்களிலும் வெற்றியீட்டின.
வரலாறு இப்படியிருக்கும்போது, இதற்கு மாறாக ஏன் தமிழ்த் தரப்புகள் பிளவுண்டு, பிரிந்து நிற்கின்றன? அப்படியென்றால் தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளைப் பெற்று விட்டார்களா? சர்வதேச ஆதரவின் மூலம் இழப்புகளுக்குரிய நீதியும் நிவாரணமும் கிடைத்து விட்டதா? இவை எதுவும் நடக்காமலே தமிழ்க் கட்சிகள் (தமிழர் தரப்பு) பிரிந்து, பிளவுண்டு நிற்கிறது என்றால், அதன் பொருள் என்ன? நோக்கம் என்ன?
அதிலும் தமிழ்த் தரப்புக்குச் சவாலாக இப்பொழுது தேசிய மக்கள் சக்தி (NPP) வடக்குக் கிழக்கில் (தமிழ் மக்களிடம்) வலுவான ஆதரவுத் தளத்தை உருவாக்கியுள்ள சூழலில், அதை ஒன்றாகத் திரண்டு எதிர்கொள்வதற்குப் பதிலாக, எதற்காகப் பிரிந்து, பிளவுண்டு சிதறி நிற்கின்றன?
அப்படியென்றால், இவை இதுவரையிலும் கூறி வந்த தமிழ் மக்களின் ஒற்றுமை, ஓரணியாக நிற்றல், தேசமாகத் திரள்தல், சர்வதேசத்துக்கு எமது பலத்தையும் உணர்வையும் வெளிப்படுத்திக் காட்டுதல் போன்றவை எல்லாம் பொய்யா? அவை அந்தந்தச் சந்தர்ப்பத்துக்குக் காட்டிய அரசியல் நாடகங்களா? அரசியல் நாடக வார்த்தைகளா?
அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தனையும் நாடகங்களே! மக்களை ஏமாற்றுவதற்கான பொய் வேடங்களே! இதை வரலாறு (காலம்) தெளிவாக நிரூபித்துள்ளது.
உண்மையில் தமிழ்க் கட்சிகள் எப்போதும் பிரிந்து, பிளவுண்டே நின்றன. இயக்கங்களும்தான். ஒருபோதும் அவை ஒற்றுமையாக – மக்களுக்கு விசுவாசமாக – நேர்மையாக இருக்கவில்லை.
வேண்டுமானால் வரலாற்றை ஒரு தடவை பாருங்கள்.
1970 களின் முற்பகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கின. அன்றைய சூழலில் இந்தக் கூட்டணி மக்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. அதனால் 1977 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அதற்கு அமோக ஆதரவை அளித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழ்த்தரப்பு) மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.
ஆனால் கூட்டணியின் அந்த ஒற்றுமை எவ்வளவு காலம் நீடித்தது? அதனால் தமிழ் மக்கள் அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற அரசியல் நன்மை – வெற்றி – என்ன?
தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய அடுத்த சில ஆண்டுகளிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (தொண்டமான்) விலகிச் சென்று, அரசாங்கத்துடன் இணைந்து (கூட்டணி வைத்து) செயற்பட்டார். 1977 தேர்தலிலேயே கூட்டணிக்கு வெளியே வந்துதான் குமார் பொன்னம்பலம் (அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்) யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார். 1981 இல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அப்பால் சென்று குமார் பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் 1982 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் கூட்டணி போட்டியிட்டது. அதில் கூட குமார் பொன்னம்பலம் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) இணையவில்லை.
1985 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், விடுதலைப் புலிகள், ரெலோ ஆகிய இயக்கங்கள் இணைந்து ஈழதேசிய விடுதலை முன்னணி (Eelam National Liberation Front – ENLF) என்ற விடுதலைக் கூட்டொன்று உருவாக்கப்பட்டது. நான்கு இயக்கங்களின் தலைவர்களும் (பத்மநாபா, பாலகுமாரன், பிரபாகரன், சிறிசபாரத்தினம்) கைகளைக் கோர்த்து விதவிதமாகப் படங்களையும் எடுத்தனர். ஈழதேசிய விடுதலை முன்னணியின் அரசியல் இலக்கு, எதிர்காலச் செயற்பாடுகள் பற்றிய கூட்டறிக்கையும் விடப்பட்டது. இந்தக் கைகோர்ப்பு (ஒற்றுமை) அப்போது போராளிகளுக்கும் மக்களுக்கும் பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
ஆனால் நடந்தது என்ன? 1986 இல் ரெலோவை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது விடுதலைப்புலிகள். சிறிசபாரத்தினமும் பெருந்தொகையான ரெலோ இயக்கத்தின் போராளிகளும் புலிகளால் கொல்லப்பட்டனர். 1987 இல் அதே வழியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டது. 1990 இல் பத்மநாபா கொல்லப்பட்டார். 1990 இல் ஈரோஸ் இயக்கம் கலைக்கப்பட்டது.
இயக்கங்களின் ஒற்றுமைக்கான ஆணி அதோடு அறையப்பட்டு விட்டது. இதுதான் இயக்கங்களின் ஒற்றுமைக் கதையும் நிலையுமாகும். தமிழ் மக்கள் ‘இரண்டாவது சூரியோதயத்தை‘யும் இழந்தனர்.
இதையெல்லாம் பார்த்துச் சந்தோசப்பட்டது, அப்பொழுது சிங்கள இனவாதத் தரப்பும் ஆட்சியாளர்களுமே. இயக்கங்களின் ஒற்றுமையைக் கண்டு மிரண்டு போயிருந்த ஆட்சியாளர்களுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இந்தப் பிளவும் அழிவும் மகிழ்ச்சியைத் தானே தரும்!
பின்னர், இந்த இயக்கங்களில் பலதும் இலங்கை அரசோடு இணைந்து செயற்பட்டது காலத்தின் விந்தையா அரசியல் திறனா அவற்றின் கையறு நிலையா? என்பதெல்லாம் வரலாற்றுக்கு வெளிச்சம்.
இருந்தும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதையைப்போல
2001 இல் இன்னொரு ஒற்றுமை – ஓரணிக் கட்டமைப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (TNA) உருவானது. விடுதலைப் புலிகளின் அனுசரணையோடு, தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழரசுக் கட்சி), அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டமைப்பு உருவானது. இது அன்றைய சூழலில் தமிழ் மக்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. (ஆனால், தமிழ் அரசியல் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு இது சிரிப்பையே உண்டாக்கியது) காரணம், ஒரு காலம் தமக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான சக்திகள் என நிராகரித்த – தடை செய்த கட்சிகளையும் இயக்கங்களையும் விடுதலைப் புலிகள் கூட ஏற்றுள்ளனர். அவர்களும் இந்தக் கூட்டமைப்பின் பங்காளிகளாகி விட்டனர் என்ற அடிப்படையில்.
இந்த நம்பிக்கைக்கு ஆணி அடிப்பதைப்போல அடுத்த ஆண்டு ஆனந்தசங்கரி (தமிழர் விடுதலைக் கூட்டணி) கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். – வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2010 இல் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் வெளியேறியது. தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறியது – வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. பதிலாக புளொட் உள்ளே நுழைந்தது. ஆனாலும் அந்த உறவு நீடிப்பதற்கான சூழல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி தானே அதிகாரம் உள்ள தரப்பு என ஜனநாயக அடிப்படைக்கு மாறான முறையில் மூப்பு வேலை பார்த்தது. இறுதியில் புளொட்டும் ரெலோவுடன் இணைந்து வெளியேற வேண்டிய நிலை உருவானது. விளைவு, தமிழத் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதைந்தது. இப்பொழுது தமிழரசுக் கட்சி மட்டும் தனித்து நிற்கிறது. அப்படித் தனித்து நிற்கும் தமிழரசுக் கட்சி, “உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய அந்தந்த இடங்களில் இணைந்து செயற்படுவது, சபைகளைக் கைப்பற்றுவது, சபைகளை நிர்வகிப்பது” என்றொரு நியாயம் (கதை) சொல்கிறது.
ஆகவே இந்தக் கட்சிகள், இயக்கங்களெல்லாம் ஒற்றுமையாக, ஓரணியாக ஒருபோதும் நின்றதில்லை. இதய சுத்தியுடன் கரம் கோர்த்ததுமில்லை. மனம் கோர்த்ததுமில்லை. அதற்கான உளநிலையும் அதற்குரிய பண்பும் அதைப்பற்றிய அக்கறையும் (சிரத்தையும்) இவற்றிடம் இருந்ததில்லை. ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்குரிய அரசியல் புரிதலோடும் விடுதலைக்கான அரசியல் உணர்வோடும் இவை சரியாகச் செயற்படவில்லை. அப்படிச் செயற்பட்டிருந்தால், தமிழ் பேசும் மக்களுடைய விடுதலை இப்போது சாத்தியப்பட்டிருக்கக் கூடும்.
எல்லாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்றாக நடந்தன என்பதே வரலாறாகும். சில தரப்புகள் இதை மறுத்து, “தாம் எப்போதும் ஒற்றுமைக்கான சிலுவையைத் தூக்கிக் கொண்டுதான் நின்றோம். ஏனைய தரப்புகள்தான் அதை மறுதலித்துத் தம்மைச் சிலுவையேற்றம் செய்தன” என்று கூறலாம்.
அப்படியென்றால், அவையெல்லாம் வெளியே வந்தபின் இன்னொரு புதிய – வலவான கூட்டாக இணைந்து, அந்த ஒற்றுமையை, ஓரணியாகத் திரள்வதை, ஒரு மாற்று அரசியற் பண்பாக – மாற்று அடையாளமாகச் செய்திருக்க வேண்டும்.
அப்படி நடக்கவில்லையே!
இப்பொழுது (2025 இல்), இந்த உள்ளுராட்சித் தேர்தலுக்காக இரண்டு அவசரக் கூட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்று, அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைமையில் ஐந்தாறு குழுக்கள் இணைந்து (நாங்கள் குழுக்கள் இல்லை. மிகப் பலமான அரசியல் கட்சிகள் என்று போருக்கு இவை வரக்கூடும். அப்படி வந்தால், நமக்கு பாதுகாப்பான பதுங்குகுழிகள் தாராளமாக உண்டு. கவலையில்லை) ‘தமிழ்த் தேசியப் பேரவை‘ என்ற பெயரிலானது. இதனுடைய சின்னம் சைக்கிளாகும்.
“ஒரு நாடு இரு தேசம், ஐக்கிய இலங்கைக்குள் அடங்க மாட்டோம்… என் வழி தனி வழி..” என்றெல்லாம் கஜேந்திரகுமார் ‘பஞ்ச்‘ டயலாக் பேசினாலும் பாட்டனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் உருவாக்கிய ‘அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் (All Ceylon Tamil Congress )‘ கட்சியையும் அதனுடைய சின்னத்தையும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. அதாவது ‘அகில இலங்கை – All Ceylon ‘ என்ற அடையாளத்தையும் கோட்பாட்டையும் அவர் சட்டரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பேணிக் கொள்கிறார். வடக்குக் கிழக்குத் தமிழர்களின் வாக்குகளுக்காக மட்டும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியப் பேரவை என்ற லேபிள்களை அடிச்சு ஒட்டிக் கொண்டிருக்கிறார். இதனை எந்தக் கேள்வியும் இல்லாமல் இந்தக் கூட்டில் இணைந்திருக்கின்ற அரசியல் மேதைகள் அப்படியே தலையைக் கொடுத்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வது, தாங்களெல்லாம் மாற்றுக் குறையாத தங்கங்கள் என்று.
அடுத்த கூட்டு, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி. இது முன்னாள் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்களுடையது. ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, விடுதலைப்புலிகள் தரப்புகள் இதில் இணைந்திருக்கின்றன. சமத்துவக் கட்சி – மு. சந்திரகுமார் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி வழிவந்தவர். இதனை ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட அரசியற் பாதையில் வந்தவர்களின் கூட்டு எனலாம். முன்னர் இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக தன்னைத் தமிழ்ச் சமூகத்தின் முன்னே வைப்பதற்கு இது முயற்சிக்கிறது. இதனுடைய சின்னம் சங்கு. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சின்னம். தொடர்ந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலும் இந்தச் சின்னம் பயன்படுத்தப்பட்டது. அப்போதே சந்திரகுமாரை (சமத்துவக் கட்சியை) இணைத்திருந்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இந்தக் கூட்டுப் பெற்றிருக்கக் கூடும். என்ன செய்வது, காலம் பிந்திய கூட்டாகி விட்டது. உள்ளுராட்சித் தேர்தலில் கிடைக்கப்போகின்ற வெற்றி தோல்விதான் இதனுடைய அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும்.
இந்தக் கூட்டுகள் – சேர்க்கைகள் – எல்லாம் நிர்ப்பந்தங்களினால் ஏற்பட்டதே தவிர, சுய விருப்பின் அடிப்படையில், தூர நோக்குடைய அரசியற் சிந்தனையின் அடிப்படையில் உருவாகவுமில்லை. உருவாக்கப்படவும் இல்லை.
1. இலங்கை அரசு அல்லது சிங்களத் தரப்பு உருவாக்கிய நெருக்கடிகளையும் சவாலையும் எதிர்கொள்வதற்கான கூட்டு. தமிழர் விடுதலைக் கூட்டணியும் தற்போது உருவாகியுள்ள தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இந்த வகையானவை.
2. இந்தியா (தமிழ்நாடு) கொடுத்த அழுத்தங்களினால் உருவானது (ஈழதேசிய விடுதலை முன்னணி)
3. தமிழ் மக்களின் (தமிழ்ப் புத்திஜீவிகள், தமிழ் ஊடகங்கள், தமிழ் அரசியல் பத்தியாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் போன்ற தரப்புகள்) அழுத்தம், அவர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகள், அவர்களுடைய கோரிக்கைகள் – விருப்பங்களுக்காக ஏற்படுத்திக் கொண்ட கூட்டுகள் – சேர்க்கைகள்.
4. தமிழ் மக்களின் அரசியல் உணர்வையும் பலத்தையும் திரட்டி வெளியுலகத்துக்குக் காண்பிப்பதையும் இலங்கை அரசை எதிர்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட கூட்டு. (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
ஆகவே மக்களுடைய அரசியல் விடுதலை, சமூக மேம்பாடு, மக்களின் பாதுகாப்பு, அடையாளம் (தனித்துவம்) போன்றவற்றையெல்லாம் மனதிற் கொண்டு எந்தத் தரப்பும் செயற்படவில்லை – எந்தக் கூட்டும் உருவாகவில்லை; உருவாக்கப்படவும் இல்லை.
காரணம், ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான சிரத்தையும் விடுதலைக்கான கரிசனையும் இவர்களிடம் மிகப் பலவீனமாக இருப்பதாகும். இதனால்தான் ஒரு மகத்தான – கவனத்திற்குரிய தலைமையை தமிழ்ச்சமூகம் பெற முடியாமல் உள்ளது. எவரும் அத்தகைய தலைமைப் பாத்திரத்தை வகிக்க முடியாமல் உள்ளனர்.
இந்த நிலையில்தான் தேசமாகத் திரள்வோம், ஒரு நாடு இரு தேசம், சமஸ்டி அல்லது சுயாட்சி, அடைந்தால் மகாதேவி இல்லையென்றால் மரண தேவி என்ற பஞ்ச் டயலாக்கை இந்தக் கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்களுடைய நம்பிக்கைக்கும் உணர்வுக்கும் அப்பால்தான் இவை தொடர்ந்தும் பயணிக்கின்றன. என்பதால் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெளிறிப்போன சுவரொட்டியாகச் சந்தி சிரிக்கும்படி காட்சியளிக்கிறது
00




