கிளிநொச்சியை உலுக்கிய சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: புலிகள் அமைப்பிலும் இதே குற்றச்சாட்டை சந்தித்தவர்!

Date:

-விமலதாஸ்-

கிளிநொச்சி நகரப் பாடசாலையொன்றின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், பாடசாலை மாணவர்களை (சிறுவர்களை) பாலியல் துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் 16 மாணவர்களை (சிறாரை) துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்பதே தற்போதைய குற்றச்சாட்டாகும்.

ஆனால், இதற்கு முன்பே இவர் தொடர்ச்சியாக இவ்வாறு பல சந்தர்ப்பங்களிலும் பாலியல் துஸ்பிரயோகத்தை மேற்கொண்டு வந்ததாக குற்றச்சாட்டு உண்டு. இதே பாடசாலையில் கூட முன்பும் இதேமாதிரியான குற்றச்சாட்டைச் சில பெற்றோர் முன்வைத்தபோது அப்போதிருந்த பாடசாலை அதிபரினால் அது மூடி மறைக்கப்பட்டது.

இப்பொழுது இந்தக் குற்றச்சாட்டை பெற்றோர் முன்வைத்தபோது மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று பொலிசார் அவர்களை விசாரணைக்கு அழைக்க முற்பட்டபோது, பெற்றாருக்கும் பொலிசாருக்குமிடையில் முரண்பாடு தோன்றியது.

இதேவேளை குறித்த நபர் அரசியல் செல்வாக்கினால் கைது செய்யப்படாமல் தப்பித்து வந்தார்.

குறித்த பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுநர் உட்பட பலரது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் அங்கத்துவம் வகித்த உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. குற்றச்சாட்டின் பாரதூரத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இந்த இடைநிறுத்தத்தைக் கட்சி மேற்கொண்டுள்ளதாக அதனுடைய தற்போதைய செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்டவர், கிளிநொச்சியிலுள்ள பாடசாலையில் இரவு நேரக் காவலாளியாகவும் கடமையாற்றுகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கெல்லாம் முன்பு இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியாகச் செயற்பட்டவர். அந்த அமைப்பில் செயற்படும் காலத்திலேயே இத்தகைய துஸ்பிரயோகத்தினால் தண்டிக்கப்பட்டு, அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்.

இப்படி 30 ஆண்டுகளுக்கு மேலாக, செல்லுமிடமெல்லாம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்தவர் இப்போதுதான் முறையாகச் சிக்கியிருக்கிறார் .இனி, குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக சம்மந்தப்பட்டவரிடமும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுவோரிடமும் விசாரணைகள் செய்யப்படவுள்ளது. அதனையடுத்து நீதி மன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சட்டரீதியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. ஆனால், இதற்கு அப்பால் பாதிக்கப்பட்ட சிறார்களின் உளநிலைப் பாதிப்பை எப்படிச் சரி செய்வது? அவர்களுடைய பெற்றோர் அடைந்துள்ள துயரமும் வேதனையும் சாதாரணமானதே அல்ல. பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவருடைய தந்தையும் தாயும் ஒரு வாரத்துக்கும் மேலாகச் சரியாக உண்ண முடியாமல், தூங்க முடியாமல், வேலைக்குச் செல்ல முடியாமல் பெரும் பதட்டத்திலும் சோர்விலும் இருந்தனர். அந்த வீடே மரண வீடு போல மாறியிருந்தது. இதே நிலைதான் ஏறக்குறைய ஏனைய ஒவ்வொரு வீட்டிலும்.

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு நீண்டகாலம் செல்லும். சிலர் அதிலிருந்து மீள முடியாமல் தொடர்ந்தும் பிறழ் நடத்தையில் ஈடுபடக் கூடிய நிலையும் ஏற்படக் கூடும் என்று உளநல மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால், இந்தச் சிறார்களின் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நாம்.

இதேவேளை இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பாடசாலைகளிலிருந்தும் சமூக வெளியிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்குட்பட்ட சில ஆசிரியர்களும் அதிபர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு மேல் வேறு எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் சுதந்திரமாக புதிய இடத்தில் வேலை செய்கிறார்கள்.

இதனால், இந்தப் பிரச்சினை – இந்தப் பாதகச் செயல் – தொடர்ந்தும் அங்கங்கே நடந்து கொண்டேயிருக்கிறது. குற்றங்களை இழைப்பவர்களுக்கு அச்சமோ, அவமான உணர்வோ ஏற்படுவதாகத் தெரியவில்லை.

பொலிஸ், நீதி மன்றுகள், சட்டத்துறை, சிறைச்சாலை, தண்டனை, அபராதம் என்றெல்லாம் இருந்தாலும் போதைப் பொருள் மற்றும் கஞ்சா போன்றவற்றின் கடத்தலும் பாவனையும் எப்படி தொடர்ந்து கொண்டிருக்கிறதோ, அதைப்போல இதுவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதனால் உண்டாகும் பாதிப்பைப் பற்றி சரியாக உணர்ந்தால், இவ்வாறான செயலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகள் (தண்டனைகள்) மிகப் பாரதூரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். அதற்கான முறையில் சட்டத்திருத்தங்களும் செய்யப்பட்டிருக்கும். அப்படிச் செய்யப்பட்டிருந்தால் இந்தக் குற்றங்கள் (துஸ்பிரயோகங்கள்) ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும்.

இங்கே நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். குறித்த நபர் துடுப்பாட்டத்தைப் பயிற்றுவிக்கும் பாடசாலையொன்றில் உள்ள 16 மாணவர்களை சமகாலத்தில் (ஒரே காலத்தில்) துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்றால், இவர் இதற்கு முன் எத்தனை மாணவர்களை (சிறாரை) இவ்வாறு பாழாக்கியிருப்பார்? இரண்டாவது, இந்தப் பாடசாலைக்கு அப்பால், வேறு பாடசாலைகளில், வேறு அணிகளில் எப்படியெல்லாம் நடந்திருப்பார்? என்பதை.

இவராலும் இவரைப்போன்றோராலும் பாதிக்கப்படுகின்ற சிறாரின் உளநிலையைச் சரிசெய்ய எவ்வளவு முயற்சிகள் எடுக்க வேண்டும். அதற்கான சமூக வளர்ச்சி எங்களுடைய சூழலில் இன்னும் உருவாகவில்லை. ஆகவே அவர்களுடைய எதிர்காலம் (வாழ்க்கை) மிகப் பாரதூரமான பாதிப்பை எதிர்கொள்ளப்போகிறது என்பதை மீளவும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியுள்ளது. சமநேரத்தில் இவர்களுடைய பெற்றோரின் உளநிலையும் அவர்கள் எதிர்கொள்ள நேரும் நெருக்கடிகளும் இடர்களும் சரிசெய்யப்பட வேண்டும்.

எனவே இதனை அதிகாரத் தரப்பினரோ சமூகமோ எளிதாகக் கடந்து சென்று விட முடியாது.

பொதுவாக வடமாகாணத்தில்தான் அதிகப்படியான குற்றச் செயல்கள் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. விபத்துகள், தற்கொலைகள், பாலியற் பிறழ்வுகள் – துஸ்பிரயோகங்கள், குடும்பப் பிணக்குகள், குடும்பப் பிரிவுகள் தொடக்கம் ஊழல், அதிகார துஸ்பிரயோகம், மணல் அகழ்வு, காடழிப்பு, இயற்கை வளச் சிதைப்பு எனச் சகலதிலும் வடமாகாணம் முன்னிலை வகிக்கிறது.

இதனால்தான் வடக்கில் அதிகளவான சிறார் இல்லங்களும் புனர்வாழ்வு நிலையங்களும் உருவாகியிருக்கின்றன. சிறார் இல்லங்களில் இடநெருக்கீடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தினமும் கஞ்சா அல்லது போதைப் பொருள் கைப்பற்றப்படுவதாக செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்தளவுக்கு போதைப்பொருள் விநியோகம் தொடர்ந்து நடப்பதால்தானே அவற்றில் ஒரு தொகுதியை படையினராலும் காவற்துறையினராலும் தினமும் கைப்பற்றப்படக் கூடியதாக இருக்கிறது! மணல் அகழ்வு, காடழிப்பு போன்ற குற்றச்சாட்டுகளால் நீதிமன்றங்களில் நிரம்பி வழிகிறது இதற்கான விசாரணைகளும் இவற்றிற் கைப்பற்றப்படும் பொருட்களும்.

இளவயதில் (18 வயதுக்கு முன்பே) கர்ப்பமாக்கப்படுகின்ற பெண்களின் தொகையும் வடக்கிற்தான் அதிகம் என்று கூறப்படுகிறது. கிளிநொச்சியில் இவ்வாறான பெண்களுக்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று இயங்குகிறது. இங்கே மாதாமாதம் குறைவில்லாமல் இத்தகைய பெண்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர் என்று சம்மந்தப்பட்ட நிலையத்தரப்பிலிருந்து சொல்கிறார்கள்.

இதைப்போல குடி மற்றும் போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்படுவோருக்கான புனர்வாழ்வு நிலையங்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறான நிலையங்கள் எங்காவது இருந்தனவா? அதற்கான தேவை இருந்ததா?

இப்போது மட்டும் இவை உருவாகக் காரணம் என்ன? ஏன் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமலுள்ளது?

இவையெல்லாம் சமூகச் சீரழிவின் வெளிப்பாடுகளன்றி வேறென்ன?

ஒரு சமூகம் பல வழிகளிலும் சீரழிந்து கொண்டிருக்கின்றது என்றால், அதனுடைய இருப்பே கேள்விக்குள்ளாகிறது; அபாய நிலையில் உள்ளது என்றே அர்த்தமாகும். ஊன்றிக் கவனித்துப் பாருங்கள், இளைய தலைமுறையினரே இவ்வாறான குற்றச்செயல்களில் கூடுதலாக ஈடுபடுகிறார்கள். பாதிப்படைகின்றவர்களிலும் இளைய தலைமுறையினரே அதிகமாக இருக்கின்றனர்.

ஆக, இரு நிலைகளிலும் அழிவை நோக்கியிருப்பது இளைய தலைமுறையினர் என்பதால், எதிர்காலச் சந்ததி மிகப் பெரிய பேரபாயத்தில் உள்ளது.

இதைக்குறித்து அரசாங்கம், அதிகாரிகள், சட்டத்துறை, நீதித்துறையினர், சமூகச் செயற்பாட்டியக்கங்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள், மக்கள் அமைப்புகள், அரசியற் தரப்பினர், மத அமைப்புகள், அறிவுத்தரப்பினர் எல்லாம் கூடிய கரிசனை எடுக்க வேண்டும். ஆனால், இங்கே நடப்பது என்னவென்றால், பலரும் இவை பற்றித் தினமும் வருகின்ற செய்திகளைப் படித்து வெறுமனே கடந்து விடுவதாகவே உள்ளது. இதைப்பற்றி பொறுப்பானவர்களிடம் கேட்டால் அல்லது அவர்களோடு உரையாடினால், இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தமக்கும் தெரியவில்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. இதனால், மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். கவலைக்குள்ளாகியுள்ளனர். ஏறக்குறைய அநாதரவான நிலைக்குள்ளாகியிருக்கின்றனர்.

அரசிடமும் சட்டத்துறை, நீதித்துறை, காவல்துறை மற்றும் பொறுப்பான நிர்வாகத்துறை போன்றவற்றிடம் எல்லாம் மக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டால், அது நாட்டுக்கு நல்லதே அல்ல. இதனால்தான் பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் இந்த நாட்டை விட்டு வெளியேறினாலே போதும் என்று கருதும் நிலை வந்தது. இங்கே இருந்து (இந்த நாட்டிலிருந்து) எந்த மாற்றங்களையும் காண முடியாது என்று மக்களின் மனதில் ஒரு வலுவான அபிப்பிராயம் தோன்றியுள்ளது.

இதில் முக்கியமானது என்னவென்றால், ஆதாரப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் குற்றத்தை இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அவர்கள் அரசியற் செல்வாக்கினாலோ நிர்வாக ஒத்துழைப்பினால் அல்லது நிர்வாகச் சீர்கேட்டினாலோ தப்பி விடுகிறார்கள். குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பல திணைக்களங்களில் நடந்த பல ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பாக ஆதரங்களோடு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னும் உரியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது குற்றவாளிகள் தப்புவதோடு, மேலும் பலர் குற்றமிழைப்பதற்கு ஊக்குவிப்பதாகவும் அமைகிறது.

ஏறக்குறைய வடமாகாண நிர்வாகம் பல வகையிலும் சீரிழிவு நிலையிலேயே உள்ளது. இதனால்தான் “அதிகாரிகளும் அரச ஊழியர்களும் பொறுப்பாகச் செயற்படவில்லை. மக்களுக்கான சேவைகள் சரியான முறையில் நடக்கவில்லை. மக்கள் தொடர்ந்தும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்..” என்றெல்லாம் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் செல்லுமிடமெல்லாம் பகிரங்கமாக அதிகாரிகளையும் ஊழியர்களையும் குற்றம் சாட்டி வருகிறார். உண்மையில் ஆளுநர் இவ்வாறு குற்றம் சாட்டுவது நல்லதல்ல. இத்தகையவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதே ஆளுநருக்குரிய கடமையாகும். அதற்கான அதிகாரமும் பொறுப்பும் அவருக்குண்டு. அதை அவர் பயன்படுத்திச் செயற்பட வேண்டும்.

குறிப்பாக காவல்துறையினர் மீதான நடவடிக்கைகள் அவசியம். அதிகமாகக் குற்றச் செயல்கள் நடக்கின்ற இடங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவது அவசியம். அத்துடன் அங்கே விசேட கண்காணிப்புகளும் அவசியம்.

என்.பி.பி அரசாங்கத்திடம் மக்கள் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எனப் பலரும் நாடு முழுவதிலும் பயணித்து மக்களைச் சந்திக்கின்றனர். தேர்தலுக்காக மட்டுமன்றி, இதெல்லாம் சமூகத்தை – மாற்றத்தை முன்னேற்றுவதற்காக இருந்தால் அதை வரவேற்கலாம். இல்லையெனில் நாட்டை விட்டு வெளியேறுவதே மக்களின் ஒரே தெரிவாக இருக்கும்.

புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்புமாறு ஜனாதிபதி அழைக்கிறார். மக்களோ நாட்டை விட்டுப் போகவே எத்தனிக்கிறார்கள். இதுதான் கவனிக்கப்பட வேண்டிய உண்மையும் யதார்த்தமுமாகும்.

00

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்