‘எமது பொது எதிரி அரசுதான்… இம்முறை ஜேவிபியின் வித்தைகள் எடுபடாது’: க.வி.விக்னேஸ்வரன்!

Date:

எம்மைப் பொறுத்த வரையில் எமது பொது எதிரி அரசாங்கக் கட்சி. அதனை இனிமேலும் எம்மிடையே வளரவிடக்கூடாது என்பதில் நாம் கண்ணும் கருத்துமாக உள்ளோம். தொழிற்சங்கங்கள் ஊடாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிளவுகளின் நிமித்தமும் சென்றமுறை அரசாங்கக்கட்சி வட கிழக்கில் கால் பதிக்க நேரிட்டது. ஆனால் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் அதனை நடைபெறவிடமாட்டோம். தேர்தல் முடிந்தவுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயல்வோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி அதிகார சேவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே விக்னேஸ்வரன் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2018ல்த் தான் எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 2020ல் நான் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் எமது கட்சி பதிவு செய்யப்பட்டது. ஆகவே தற்போது எமது கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. எமது கட்சிக்குச் சில சிறப்பியல்புகள் உண்டு.
இளைஞர் மற்றும் பெண்களை உயர்ச்சி பெற ஆரம்பிக்கப்பட்ட கட்சியே எமது கட்சி. அத்துடன் படித்த பண்புள்ள இளைஞர் யுவதிகள் எமது மக்கள் சார்பில் தமது பொறுப்புக்களை ஏற்று அவர்களை வழிநடத்த வேண்டும் என்று கட்சியின் சிரேஸ்டர்களாகிய பேராசிரியர் சிவநாதன், திரு.கந்தையா இராஜதுரை, திரு.தவச்செல்வம் சிற்பரன், திரு.செல்வேந்திரா சபாரட்ணம், கணக்காளர் திரு.துரைசிங்கம் போன்றவர்களும் நானும் எதிர்பார்க்கின்றோம். அதனால்த்தான் நாங்கள் இளைஞராகிய சட்டத்தரணி மணிவண்ணணை எமது தேர்தல்கள் பொறுப்பாளராக நியமித்துள்ளோம்

எமக்கென்று பிரத்தியேகமான அரசியல், சமூக, பொருளாதார எதிர்பார்ப்புக்கள் உள்ளன. அரசியலிலே நாங்கள் கூட்டு சமஸ்;டி முறையையே சிபார்சு செய்து வருகின்றோம். கூட்டு சமஸ்டி முறை மாகாண அலகுகளுக்கு கூடிய சுயாட்சியையும் அதிகாரத்தையும் வழங்க வல்லன. மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களையும் மாகாண அலகுகளின் அதிகாரங்களையும் வரையறுத்து, வலியுறுத்தி, வேறுபடுத்தி சொல்லவல்லன.

எமது அரசியல் நோக்கு தன்னாட்சி சார்ந்தது. எமது தனிமனித நோக்கு தமிழ் மக்களாகிய நாம் பிறரின் தயவில் வாழாது எம்மை நம்பி, எமது வலுவை நம்பி, எமது கல்வியை நம்பி, எமது வளங்களை நம்பி தற்சார்பாக வாழப் பழகிக் கொள்வதாகும். எமது பொருளாதார நோக்கு எமது பிராந்தியங்களின் பொருளாதாரம் தன்னிறைவு பெற வேண்டும் என்பதாகும். நாம் போர்க் காலத்தின் பின்னர் மற்றவர்களை நம்பி, மற்றவர்களின் கொடையை நம்பி, மற்றவர்கள் தாழ்ந்து காட்டும் இசைவை நம்பி வாழ்ந்து வருகின்றோம். இந் நிலை மாற வேண்டும். நாம் எமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை முக்கியமாக உணவு வகைகளை நாமே உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். உணவுப் பொருட்களின் தன்னிறைவு, உடை பொருட்களின் தன்னிறைவு, பாரம்பரிய தமிழ் மருந்து வகைகளின் தன்னிறைவு, மேலும் எமது வளங்களை நாமே எமக்கென விருத்தி செய்து வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். ஆகவே தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு என்பன எமது தாரக மந்திரங்களாவன.

அடுத்து எமது கட்சி சுத்தமான கைகளுடன் நாம் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையையுடையது. குறிப்பாக உள்;@ராட்சி நிர்வாகத்தில் எமது வேட்பாளர்கள் ஊழலற்ற ஒரு சிறந்த நிர்வாகத்தை உருவாக்கப் பாடுபடுவர்.

இன்னொரு சிறப்பம்சம் எமக்குண்டு. நாம் வீணாக மற்றைய தமிழ்த் தேசியக் கட்சிகளையோ அரசியல் வாதிகளையோ விமர்சித்து எமது அரசியலை வழிநடத்த விருப்பமுடையவர்கள் அல்ல. எமது சிறப்பியல்புகளை நாம் குறிப்பிட்டு எமது கொள்கைகளை எடுத்துரைத்து எமது மக்களுக்கான கனவுகளை நாம் நனவாக்க முன்வந்துள்ளோம் என்ற செய்தியை மக்களுக்கு நாம் அறிவிக்க இருக்கின்றோம். எம்மை நம்பி எமது வாக்காளர்கள் மனமுவந்து எமக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அவ ர்கள் முன்வைப்போம். தன்னல மேம்பாட்டுக்காகவே நாம் பொதுநல வாழ்க்கையில் கலந்து கொண்டுள்ளோம் என்ற எண்ணம் எங்கள் இளைஞர் யுவதிகள் மத்தியில் கிஞ்சித்தேனும் இல்லை என்பதை நாம் எம் மக்களுக்கு உணர்த்துவோம்.

எம்மைப் பொறுத்த வரையில் எமது பொது எதிரி அரசாங்கக் கட்சி. அதனை இனிமேலும் எம்மிடையே வளரவிடக்கூடாது என்பதில் நாம் கண்ணும் கருத்துமாக உள்ளோம். தொழிற்சங்கங்கள் ஊடாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிளவுகளின் நிமித்தமும் சென்றமுறை அரசாங்கக்கட்சி வட கிழக்கில் கால் பதிக்க நேரிட்டது. ஆனால் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் அதனை நடைபெறவிடமாட்டோம். தேர்தல் முடிந்தவுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயல்வோம். பொதுவாக அரசாங்கக் கட்சியை நாம் புறக்கணிப்போம். அரசாங்கக்கட்சி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதை நாம் தடுக்கவே செய்வோம். அரசாங்கத்தின் ஒரு முக்கிய கோட்பாட்டின் விளைவே எம்மை இது பற்றி ஆழமாகச் சிந்திக்க வைத்துள்ளது. தமக்கு வாக்களித்தால் மட்டுமே நிதி வசதிகள் எமது உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கிடைக்கும் என்றிருக்கின்றார்கள் ஆளும் தரப்பினர். அவர்கள் பதவிக்கு வந்தால் எம்மை அடிமையாக்கி விடுவார்கள் என்பது இதிலிருந்து புலப்படுகின்றது.

அந்த விதத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் யாவும் எமது உறவுகளே என்பதும் அரசாங்கத்துடன் சேர்ந்து செல்லும் கட்சிகள் அனைத்தும் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் தற்கால, வருங்கால நல்வாழ்வுக்குப் பங்கம் விளைவிப்பவர்களே என்பதும் புலனாகின்றது. நாம் உள்ளுராட்சி மன்றங்களை எடுத்து நிர்வகிக்கும் போது அரசாங்கத்தையே நம்பி இருக்கப் போவதில்லை. எமது உள்ளுராட்சி அலகுகளை தனியார்துறையுடன் சேர்ந்து முன்னேற்ற விழைவோம்.

நான் முதலமைச்சராக இருந்த போது வெளிநாட்டு நகரங்களின் நிர்வாகங்களுடன் உடன்படிக்கைகளை உருவாக்கி பரஸ்பரம் உதவிகளைப் பரிமாற்றிக் கொண்டோம். கனடாவின் ஒன்டாரியோ நகரம், இங்கிலாந்தின் கிங்ஸ்டன் நகரம் போன்றவற்றுடன் பரஸ்பர உடன்பாடுகளைக் கைமாற்றிக் கொண்டோம். இதனால் பல நன்மைகளை பெற்றுக் கொடுத்தோம். உதாரணத்திற்கு தலை சிறந்த மேலை நாட்டு மருத்துவர்கள் எமது மருத்துவர்களுடன் அளவளாவ வழிவகுத்தோம். மேலை நாட்டு மருந்து வகைகளைப் எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தோம். இவ்வாறான இரட்டைநகர உடன்பாடுகளின் மூலம் எமது உள்ளுராட்சி அலகுகளை முன்னேற்றத் திட்டமிட்டுள்ளோம்.

இன்று தமிழ் தேசியம் என்றுமில்லாதவகையில் அரசியல் ரீதியாக மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம். சுதந்திரம் கிடைத்தபின்னர் இன்றுள்ளதுபோல என்றைக்குமே தமிழர் தாயகத்தில் தமிழ் தேசியம் சிங்கள அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு அஞ்சவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இல்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை விபரிப்பது இப்போது இங்கு பொருத்தம் அல்ல. ஆனால், 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியினதும் செயற்பாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்களுக்கு பலாபலன்களை பெற்றுக்கொடுக்க தவறியமையே பிரதான காரணம் ஆகும். கடந்த தேர்தல்களில் மக்கள் எம்மை நம்பி பல தடவைகள் வாக்களித்து எமக்கு சந்தர்ப்பம் தந்திருந்தார்கள். ஆனால் எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. இந்த ஏமாற்றமும் கோபமும் இன்று சிங்கள அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பாகியிருக்கின்றது. எம்முள் சிலர் பல எத்தனிப்புகளில் ஈடுபட்டும் சிங்கள அரசியல்வாதிகளினால் ஏமாற்றப்பட்டோம்.
ஆகவேதான் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் எமக்கு மிகவும் முக்கியமானது. ஒருபுறம் எமது கட்சி சில சபைகளிலாவது உள்ளூராட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய தேவை. மறுபுறம் தமிழ் தேசிய அரசியல், சிங்கள அரசியல் கட்சிகளினால் சிதைக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டிய தேவை.

யாழ் மாநகர சபையில் நாம் திரு.மணிவண்ணன் தலைமையில் வென்று ஆட்சி அமைப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தபோதிலும் துரதிஸ்டவசமாக அந்த வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், நல்லூர், காரைநகர் மற்றும் சில தொகுதிகளில் நாம் முன்னிலை வகித்து ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் இருப்பதால் நாம் மிகவும் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கின்றது. இதற்கான வியூகங்களை திரு.மணிவண்ணன் மற்றும் திரு.பார்த்திபன் ஆகியோரின் தலைமையில் உடனடியாக மேற்கொள்ளவேண்டும். சொற்ப கால அவகாசமே எமக்கு இருக்கிறது. ஆகவே நாம் விரைவாக செயற்படவேண்டியிருக்கின்றது.

அதேநேரம், நாம் போட்டியிடாத தொகுதிகளில் சிங்கள தேசிய கட்சிகள் வெற்றிபெறாமல் தடுக்கும் வகையில் நாம் செயற்படவேண்டிய கடமையும் எமக்கு இருக்கிறது. ஏதாவது ஒரு தமிழ் தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு நாம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு விரலை சுட்டுவதா அல்லது மக்களை தாம் விரும்பும் ஒரு தமிழ் தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுவதா என்று நாம் தீர்மானிக்கவேண்டும். இந்த தேர்தலின் பின்னர் மாகாண சபை தேர்தல் உடனடியாக வராதுவிட்டாலும் மாகாண சபை தேர்தல் என்றோ ஒரு நாள் நடைபெறும். ஆகவே, அதனை கவனத்தில் கொண்டு நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மத்தியில் இம்முறை தேர்தலில் புதிய கூட்டணிகள் தோற்றம் பெற்றுள்ளன. தமிழரசு கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது. மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை சரியாக கணிப்பிடமுடியாத நிலை உள்ளது. ஆகவே, என்னைப்பொறுத்தவரையில் தாம் விரும்பும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு நாம் தமிழ் மக்களைக் கோரவேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால், இதனை கவனமாக நாம் செய்யவேண்டும். ஏனென்றால், எமது இந்த கோரிக்கை நாம் தனியாக போட்டியிடும் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு புரியாத அல்லது குழப்பமான செய்தியாக அமைந்துவிடக்கூடாது. அதேநேரம், சிங்கள கட்சிகளுக்கு குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து தமிழ் மக்கள் தமது தலையில் தாமே மண்ணை வாரி இறைத்துவிடக்கூடாது என்ற மிகத் தீவிரமான பிரசாரத்தை மேற்கொள்ளவேண்டும். இதனை நான் என்னால் முடிந்தளவுக்குக் காத்திரமாக மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளேன்.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிந்ததும் நாம் எமது கட்சியை வளர்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டியிருக்கின்றது. கட்சி கிளைகளை ஸ்தாபித்து மாவட்ட அமைப்பாளர்களை நியமித்து உறுப்பினர்களை நாம் சேர்க்க வேண்டும். இவற்றுக்கு அடிப்படையாக கட்சி அமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நான் நம்புகின்றேன். விரைவில் அதையும் செய்வோம்.

நாம் வலிய எந்தக் கட்சியுடனுமே மோதல்களில் ஈடுபடமாட்டோம். ஆனால் வந்த சண்டையை விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்!

ஆகவே இறுதியில் எம்மைப் பற்றி நான் சுருக்கமாகக் கூறுவதானால்,
1. நாம் ஒரு இளம் கட்சி. இளைஞர் யுவதிகள் உயர்ச்சி பெற உந்துதல்களைப் பெற்றுக் கொடுக்கும் கட்சி.
2. எமக்கென தாரக மந்திரங்களான தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு என்பன உள்ளன. அவற்றின் அடிப்படையில் எமது பயணம் தொடரும்.
3. எமது அரசியல் நோக்கு கூட்டு சமஸ்டி அரசியல் முறையை உருவாக்குவது.
4. எமது கட்சி சுத்தமான கைகளுடன் அரசியல் செய்ய முன்வந்துள்ள கட்சி. ஊழலற்ற நிர்வாகத்தை நாம் உள்ளுராட்சி மன்றங்களில் உருவாக்குவோம்.
5. நாம் வலிய சண்டைகளுக்குப் போகின்றவர்கள் அல்ல. வந்த சண்டையை விட்டுக் கொடுப்பவர்களும் அல்ல.
6. நாம் அரசாங்கக் கட்சிக்கு எதிரானவர்கள். அரசாங்கக் கட்சி வடகிழக்கில் காலூன்றுவதை விரும்பாதவர்கள். எவ்வளவு தான் பொருளாதார நன்மைகளை அரசாங்கம் பெற்றுத் தந்தாலும் அடிப்படையில் அவர்கள் தமிழர்களின் தனித்துவத்தை ஏற்பவர்கள் அல்ல. எம்மை சிங்கள சமூகத்தின் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கத் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் யாவுமே தொடர் சதியில் ஈடுபட்டு வந்துள்ளள்ளன. இப்போதைய அரசாங்கம் அதற்கு விதிவிலக்கல்ல.
7. நாம் தனியார் துறைகளுடன் சேர்ந்து நகர அபிவிருத்தியில் ஈடுபடுவோம். வெறுமனே அரசாங்க உதவியை நம்பி எமது மக்கள் தேவைகளைப் புறக்கணிக்கமாட்டோம்.
8. எமது புலம்பெயர் உறவுகளுடன் தொடர்புகள் வைத்து இரட்டை நகர உடன்படிக்கைகள் போன்றவற்றினூடாக உள்ளுராட்சி அலகுகளை வளர்ச்சி பெறச் செய்ய உள்ளோம்.
இதற்கு எமது மக்களின் ஆதரவையும் அனுசரணையையும் வேண்டி நிற்கின்றோம்.
அடுத்து எமது வேட்பாளர்களை அடையாளம் காட்டும் நிகழ்வு நடைபெறும். அதனை எமது இளம் தலைவர் சட்டத்தரணி திரு.மணிவண்ணன் அவர்கள் நடத்தி வைப்பார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்