பருத்தித்துறை – தும்பளை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயன்ற இளைஞன், வீட்டிலிருந்த மூதாட்டி கண்டதும், அவரை அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளான்.
தும்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்தார்.
வயதான இரண்டு பெண்கள் குடியிருக்கும் அந்த வீட்டில், மேற்படி 20 வயதான திருடன் பலமுறை திருட்டில் ஈடுபட்டுள்ளான். தேங்காய், கைத்தொலைபேசி போன்றவற்றை அந்த வீட்டிலிருந்து திருடியுள்ளான்.
அந்த இளைஞன் திருட்டில் ஈடுபட்டதை கண் மூதாட்டி, திருடனுக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று (20) இரவு மீண்டும் அந்த வீட்டுக்கு திருடச் சென்றுள்ளான்.
திருடன் வீட்டுக்குள் நுழைந்ததை அந்த மூதாட்டி கண்டுவிட்டார். தனக்கு எதிராக மூதாட்டி பொலிசில் முறைப்பாடு செய்வார் என நினைத்த திருடன், கதவுக்கு குறுக்கே பாதுகாப்பாக வைக்கப்படும் சட்டகத்தை எடுத்து மூதாட்டியின் தலையில் அடித்துள்ளார்.
மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருடன் வீட்டை விட்டு தப்பியோடினான்.
பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு, திருடனை கைது செய்தனர். அவனை முறையாக கவனித்து விசாரணை செய்ததில், கொலையை செய்ததை ஒத்துக்கொண்டான். அந்த பிரதேசத்தில் தொடர்ந்து திருட்டில் ஈடுபடுபவன் அவன்.
இளைஞன் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.




