Pagetamil
இலங்கை கட்டுரை

சுற்றி வளைக்கப்படுகிறாரா ரணில்?

கருணாகரன்

தன்னை ஒரு கனவானாக, Respected politician ஆக முன்னிறுத்தி வந்த ரணில் விக்கிரமசிங்கவை, லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது. மட்டுமல்ல, பட்டலந்த குடியிருப்பு மற்றும் கைத்தொழில் வளாகத்தில் இருந்த சட்டவிரோத தடுப்பு முகாமில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், கொலைகளுக்கு ரணில் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்ற நெருக்கடியும் உருவாகி வருகிறது.

அப்படியென்றால் ரணில் சுற்றி வளைக்கப்படுகிறாரா?

நிச்சயமாக அப்படித்தான்.

ஏறக்குறைய 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் (1977 – 2024) ரணிலுக்கு இது பொல்லாத சோதனைக் காலம். இப்போதுதான் அவர் பாராளுமன்றத்திற்கு – அதிகாரத்துக்கு வெளியே இருக்கிறார். மற்றும்படி 1977 இலிருந்து தொடர்ச்சியாகவே ஆளும் தரப்பாகவும் எதிர்க்கட்சியாகவும் பிரதிநிதித்துவம் செய்து வந்திருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு மேல் கட்சித் தலைவராக இருக்கிறார்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் பல எதிர்த்தரப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கிறார் ரணில். இரண்டு தடவை பிரதமர் பதவி பறிப்புக்குள்ளாகியிருக்கிறார். மட்டுமல்ல, தன்னுடைய கட்சிக்குள்ளேயே போட்டியாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் சந்தித்து வந்தவர். இருந்தும் அதையெல்லாம் எதிர்கொண்டு நிமிர்ந்து தன்னை நிலை நிறுத்தியதால், வியப்புக்குரிய ஆளுமையாக நிரூபித்தார். ஒரு கட்டத்தில் அவருடைய எதிர்த்தரப்பினரை அல்லது அரசியல் எதிரிகளாக இருந்தோரைக் கூட தன்னுடைய நெகிழ்ச்சியான – சிநேகபூர்வமான – கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் ரணில். முக்கியமாக மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஸ, சம்மந்தன் போன்றோரை. எதிர்க்கட்சியாக – எதிர்த்தரப்பாக இருந்தாலும் ரணிலை மிஞ்சி எதையும் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தார். ஒரு கட்டத்தில் (பின்னாட்களில்) போட்டியாளராக இல்லாது விட்டாலும் சந்திரிகா குமாரதுங்கவையும் ரணில் வளைத்துப் போட்டிருந்தார்.

இதனால் இலங்கைக்குள் மட்டுமல்ல வெளியே சர்வதேசப் பரப்பிலும் அறியப்பட்ட – வியக்கக் கூடிய – அரசியல் ஆளுமையாக நோக்கப்பட்டார் ரணில். ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்குப் பின்னர் அரசியல் சாதுரியம் (தந்திரம்) மிக்கவர் என்று புகழப்பட்டவர் என்றால் அது ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. ஜெயவர்த்தனவை நரியின் தந்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசுவது வழமை. பல கட்டுரைகள், விமர்சனங்கள், காட்டூன்கள் கூட இந்தப் பொருளில் வரையப்பட்டுள்ளன. அந்த வழியில், ஜே.ஆரையும் விட பல மடங்கு சாதுரியமும் திறனுமுடையவர் ரணில் என்பது பலருடைய அவதானமாகும். அது உண்மையே. இதை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கூட வெளிப்படையாகக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

எதிரிகளை – எதிர்த்தரப்பை – உள்ளுர நடுங்க வைப்பது, பதட்டமடைய வைப்பது, குழப்பத்துக்குள்ளாக்குவது ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்பட்ட அரசியற் திறமை எனலாம். இது அவருக்குள்ளே ஒரு திமிரை உண்டாக்கியது. ரணிலுடன் அரசியற் பயணத்தில் ஈடுபட்டிருந்த மகிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க போன்றோரெல்லாம் ஏறக்குறைய அரசியல் ஓய்வுக்கு வந்து விட்டனர். கட்சிகளின் தலைமைப் பொறுப்புகளில் இவர்கள் இருந்தாலும் களத்தில் இவர்களால் தலைமைத்துவத்தை வழங்க முடியாத நிலைக்குள்ளாகி விட்டனர்.

ஆனால், ரணில் இன்னும் முன்னரங்கில், துடிப்புடன்தானிருக்கிறார். இன்னும் வெளிநாட்டுப் பயணங்களைச் செய்கிறார். உள் நாட்டிலும் வெளிப்பரப்பிலும் அரசியல் உறவுகளையும் தொடர்புகளையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஊடகங்களுக்குப் பேட்டிகள் கொடுக்கிறார். அரசாங்கத்தைப் பற்றிப் பேசுகிறார், விமர்சனங்கள் செய்கிறார். அதாவது சுறுசுறுப்பாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தோற்றப்பாட்டை ரணில் காட்டிக் கொண்டேயிருக்கிறார்.

இதனால்தான் (இந்தத் திமிரில்தான்) தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தை L board government என்று ஏளனம் செய்தார் ரணில். மிஞ்சிப்போனால், இந்த அரசாங்கத்தினால் ஆறு மாதம் தாக்குப் பிடிப்பது கடினம் என்று கூறினார். அதற்குப் பிறகு அவர்கள் (NPP) தன்னிடமே உதவி கேட்டு வரவேண்டியிருக்கும் என்றும் சொன்னார்.

அவருடைய பார்வையில் இது (NPP அரசாங்கம்) பெடியளின் சிறுபிள்ளை விளையாட்டுப் போன்றதே. (இத்தகைய பார்வையே ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் விடுதலை இயக்கங்களைப் பற்றி தமிழ் அரசியற் தலைவர்களிடத்திலும் இருந்தது).

ரணில் இப்படிக் கருதுவதற்கொரு காரணமும் இருந்தது.

ஏற்கனவே நீண்ட அரசியல் பின்புலத்தையும் ஆட்சி அனுபவத்தையும் கொண்டிருந்த மகிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன போன்றோரே தன்னிடம் சரணாகதியாகியிருந்தனர். அல்லது ரகசிய உடன்பாட்டுக்கு வரவேண்டியிருந்தது. அல்லது அவர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன்.

சர்வதேச சமூகம், இந்தியா போன்ற வெளித்தரப்புகளைக் காட்டி அச்சமூட்டிக் கொண்டிருந்த சம்மந்தனையே பெட்டிப் பாம்பாக்கிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.

அப்படியிருக்கும்போது, எந்த முன்னனுபவங்களும் இல்லாத பெடியள் (NPP ஆட்கள் – இப்படித்தான் ரணில் சொல்வதுண்டு) வந்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் நாட்டை நிர்வகிப்பது – ஆட்சியை நடத்துவது – இயலாது என்றே அவர் கருதினார். இதனால்தான் NPP அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் துணிவு வந்தது ரணிலுக்கு.

ஆனால், இப்போது நிலைமை வேறு விதமாக மாறியுள்ளது. ரணில் போட்ட கணக்குப் பிழைத்து விட்டது.

ஆறுமாதங்களைக் கடந்து வெற்றிகரமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளது NPP அரசாங்கம். எதிர்பார்க்கப்பட்டதையும் விட விவேகமாகச் செயற்படுகிறார்கள் NPP ஆட்கள் (பெடியள்). இந்தியாவையே வளைத்துப் போட்டுவிட்டார்கள். கூடவே சீனாவுக்கும் அதே (ஒரே) செம்பில் தண்ணீர் கொடுக்கிறார்கள். IMF உடன் நிச்சயமாக NPP அரசாங்கம் மோதும் என்றே ரணில் மதிப்பிட்டார். அதையும் NPP – அநுர – மாற்றி IMF உடன் நல்லுறவு நீடிக்கத் தொடங்கியுள்ளது. NPP க்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள பேராதரவு இன்னும் இறங்கவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் நடந்துள்ளது. அது ரணில் சொன்னதைப்போல, NPP அரசாங்கம் ரணிலிடம்செல்ல முயற்சிக்கிறது. ரணில் சொன்னதைப்போல, அவரிடம் உதவியை எதிர்பார்த்தல்ல, அவரை விசாரணைக் கூண்டில் ஏற்றுவதற்கு. அவருடைய கைகளில் விலங்கை மாட்டுவதற்கு. அவருடைய அரசியற் கணக்குகளை முடித்துக் கொள்வதற்கு. அவருடைய புகழின் வெளிச்சத்தைக் குறைப்பதற்கு. அவருடைய அரசியல் வரலாற்றின் கறைகளை மேலே கொண்டுவருவதற்கு. வரலாற்றிலிருந்து ரணிலை தூர விலக்கி வைப்பதற்கு.

இதை ரணில் எதிர்பார்த்திருக்கவே இல்லை.

ரணில் மீதான இந்த நடவடிக்கையை (operation ranil) எடுத்திருப்பதன் மூலம் ஏனைய அரசியற் தலைவர்களுடைய தலைக்குள்ளே அமிலத்தை ஊற்றியிருக்கிறது NPP அரசாங்கம். அடுத்ததாக தங்களுடைய தலைகள் உருட்டப்படும் என்ற கலவரம் ஏனைய தலைவர்களுக்கு உண்டாகியுள்ளது.

இந்த தொடர் நடவடிக்கையில் (Continuous action) முதல் தலை ரணிலுடையதாகியிருக்கிறது. ரணிலுக்குப் பதிலாக மகிந்த ராஜபக்ஸவின் மீது இந்த மாதிரியான நடவடிக்கையை NPP எடுத்திருந்தால், அது சிலவேளை எதிர்விளைவுகளை உண்டாக்கியிருக்கக் கூடும்.

ஏனென்றால் ரணிலை விட மகிந்த ராஜபக்ஸ இன்னும் ஜனவசியமிக்க தலைவராகவே உள்ளார். அவருக்கு இன்னும் குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவும் கட்சிப் பலமும் உண்டு. மகிந்தவில் NPP கை வைத்தால் ஒரு தொகுதி மக்களேனும் வீதிக்கு இறங்கக் கூடிய நிலை உண்டு. ரணிலுக்கு இது கிடையாது. அவருடைய ஐ.தே.க மிகப் பலவீனப்பட்டுப் போயுள்ளது. பாராளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக ஒன்றிரண்டு குரல்கள் எழலாம். அதற்கு மேல் வேறு எதிர்ப்புகள் எதுவுமே நிகழப்போவதில்லை. அவருக்கு ஆதரவாக யாரும் வீதியில் இறங்கப்போவதில்லை.

சிலவேளை ரணிலுக்கு நெருக்கமான வெளிநாட்டுத் தலைவர்கள் சிலர் குரல் கொடுக்க முற்படலாம். அது கூட அபூர்வமே. ஏனென்றால், ஆட்சியிலிருக்கும் தரப்போடுதான் உறவைக் கொள்வதற்கு பலரும் – பல நாடுகளும் முயற்சிப்பதுண்டு. என்பதால் NPP அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு ரணிலுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கு யாரும் முன்வரக் கூடிய சாத்தியங்கள் மிகக் குறைவு.

மட்டுமல்ல, ரணில் மீதான நடவடிக்கை மட்டுமல்ல, இந்த மாதிரியான அனைத்து நடவடிக்கைகளையும் சட்டபூர்வமாக – ஜனநாயக முறைப்படியே தான் மேற்கொள்வதாகக் காட்டுகிறது NPP அரசாங்கம். அதாவது இவை ஒன்றும் அரசியல் பழிவாங்கல்களில்லை. பழைய கணக்குகளைத் தீர்த்தலும் அல்ல. ஒரு வகையில் நாட்டைக் கிளீன் செய்வதற்கான (கிளீன் ஸ்ரீலங்கா – Clean Sri lanka) நடவடிக்கைகள் என்பதாக.

இதற்கெல்லாம் ரணில் எப்படி முகம் கொடுக்கப்போகிறார் என்பதே அரசியல் வட்டாரங்களில் உள்ள கேள்வியாகும். ரணிலுக்கு என்ன நடக்கும் என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள். அதாவது NPP யின் வெற்றி தோல்விகளும் எதிரணிகளின் வெற்றி தோல்விகளும்.

00

இதையும் படியுங்கள்

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வீட்டிற்குள் நுழைந்த திருடனை கண்ட மூதாட்டி; திருடன் எடுத்த கொடூர முடிவு: யாழில் நடந்த பயங்கரம்!

Pagetamil

வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் இடம்கொடுக்க கூடாது – சி.வி.கே.சிவஞானம்

Pagetamil

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றதே – முன்னாள் எம்பி சந்திரகுமார்

Pagetamil

Leave a Comment