கோவையில் என்னை சுட்டு பிடிப்பதாக தகவல் பரவுகிறது. தற்போது எந்த வம்புக்கும் போவதில்லை. பேரன், பேத்திகளுடன் இருக்கிறேன் என, மதுரையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கூறினார்.
கோவையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க, காவல்துறை உத்தரவிட்டதாக சில தகவல்கள் வெளியான நிலையில், மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘தற்போது நான் எங்கும் செல்வதில்லை போலீசுக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக எனது பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்கிறேன். தவறான செய்தி வருகிறது. திருந்தி கல்யாணம், கச்சேரிக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நான் கோவைக்கு சென்று 13 ஆண்டுகளாகிவிட்டது. எனது நண்பர் செல்லையா என்பவர் உள்ளார். அவரிடம் செல்போனில் பேசுவேன். அமைதியாக இருந்தாலும் என் மீது அவதூறு பரப்புகின்றனர்.
சேட்டை செய்தால் காவல்துறை சுடும். கொலை செய்வேன் என, கூறிகொண்டே ரவுடியிசம் செய்தால் காவல்துறையினர் சுட்டு தான் பிடிப்பர். காவல்துறையினர் நடத்தும் என்கவுன்ட்டர்களை ஆதரித்து ஆகவேண்டும். 10 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் காவல் துறையினர் உள்ளனர். ரவுடிகள் செய்யும் சேட்டைக்கு என்ன செய்ய முடியும். தற்போது நான் எங்கு சென்றாலும் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு தான் போகிறேன்.
எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. சொந்த பந்தத்திற்குள்ளான பிரச்னை தான் என் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக எனக்கு 2018-ல் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் மதுரையில் ஒரு வழக்கு பதியப்பட்டது. நான் இப்படி இருப்பது சிலருக்கு பொறாமையாக இருக்கிறது. என் மீது 7 ஆண்டுக்கு முந்தைய வழக்குகள் மட்டுமே உள்ளன. இதில் 2 கொலை வழக்கு, மற்றவை அடிதடி வழக்குகள். தற்போது எந்த வழக்கும் இல்லை. கோவையில் இருந்து காவல்துறையினரும் என்னிடம் பேசவில்லை. மதுரையிலுள்ள காவல்துறையினரிடம் நான் தான் இது போன்ற செய்தி வருவதாக கூறினேன்.
விஜய் கட்சியில் நான் இணையபோவதாக கூறுவது பொய். எனக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை. படம் பார்ப்பேன். ஜாலியாக இருப்பேன். இதுவே என்னுடைய பொழுதுபோக்கு. மதுரை விமான நிலையத்தில் ஒருமுறை நடிகர் விஜயை நேரில் சந்தித்து சிறையில் வில்லன்களை அதிகமாக அடிக்க வேண்டாம் என, அவரிடம் கோரிக்கை விடுத்தேன். மனிதராக இருந்தால் சரி. மிருகமாக இருந்தால் என்கவுன்ட்டர் செய்துதான் ஆகவேண்டும்.
காவல்துறையினர் என் மீது பொய் வழக்கு ஒன்றும் போடவில்லை. போதை மாத்திரை, கஞ்சா அதிக அளவில் விற்கப்படுகிறது. தென்மண்டல ஐஜியாக இருந்த அஸ்ராகார்க் கஞ்சாவை கட்டுப்படுத்தினார். தற்போது ஆந்திரா, ஒடிசா பகுதியில் இருந்துதான் மதுரைக்கு கஞ்சா வருவதாக தெரிகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் ரவுடிகள் உருவாகினால் ஜெயிலுக்குள் தான் இருக்கவேண்டும்.
என்னை சுட்டுப்பிடிக்கும் உத்தரவை உறுதி செய்துவிட்டு போடுங்கள். மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தற்போது எந்த வம்புக்கும் போவதில்லை. என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை காவல்துறையினர் என் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்கின்றனர். இதற்கு மேல் நகை போட்டால் என்னால் பாதுகாக்க முடியாது. வரிச்சியூர் செல்வம் என்ற அடையாளத்துடன் இருந்து விடுகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.