உள்ளூராட்சி தேர்தலில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் தமத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (7) மனுத்தாக்கல் செய்துள்ளது.
பிறப்பு அத்தாட்சி பத்திரம் நகல் சமர்ப்பித்ததன் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் சில சபைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மேலும் சில சபைகளுக்கு சரியான முறையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
என்றாலும், ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ பிரமுகர்கள் தயாரித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் வேட்புமனுவை சமர்ப்பிக்க மாவட்ட செயலகத்துக்கு சென்ற போது, ஆவணத்தை முதலில் பார்த்த உத்தியோகத்தர் ஒருவர் தவறை சுட்டிக்காட்ட முயன்ற போது, ஆவணத்தை கொண்டு சென்ற பிரமுகர்கள் எகத்தாளமாக நடந்து, தமக்கு எல்லாம் தெரியும் என்ற பாணியில் நடந்து கொண்டனர்.
இறுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின்னர், இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கலாமென்ற சாரப்பட ஊடகங்களில் அறிக்கை விட்டிருந்தனர்.
வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தரப்புக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இன்னும் சில தரப்புக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவர்களில், 37 சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. பிறப்பு அத்தாட்சிப்பத்திர நகல் சமர்ப்பிக்கப்பட்ட விவகாரங்களே இவை.
இதேவேளை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும், இந்த தரப்புக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அணுக முடியுமென உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
இதனடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.