இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று (5) சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பில் இன்று மாலை 5.30 மணி தொடக்கம் 6.15 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சந்திப்புக்கு அழைக்கப்பட்டனர்.
கட்சிகள் சார்பில் ஒவ்வொருவர் மட்டுமே பேசலாம் என இந்திய தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தமிழ் அரசு கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரனும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் த.சித்தார்த்தனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தரப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த மோடி- பெருந்தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனதிராசா தலைமையில் தமிழ் கட்சிகளை பலமுறை சந்தித்து பேசியுள்ளேன். அப்போது வந்தவர்கள் பலரும் இப்போதும் வந்துள்ளீர்கள். புதியவர்களும் வந்துள்ளீர்கள். இரு தலைவர்களுக்கும் எனது அஞ்சலிகள். சம்பந்தன் தலைமையில் முன்னர் ஒன்றாக வந்தவர்கள் இப்போது பிரிந்து மூன்றாக வந்துள்ளீர்கள் என்றார்.
தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் பல்வேறு பிரச்சினைகளை வெளிப்படுத்தினர்.
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி, மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.
அனுரகுமார இந்தியா வந்த போதும், தற்போதும் இந்த விடயத்தை அவருக்கு தெரியப்படுத்தியதாகவும், விரைவில் மாகாணசபை தேர்தலை நடத்துவதாக அரசு உறுதியளித்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
13வது திருத்தத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகவும், அது தொடர்பில் டில்லி வந்து, மத்திய அரசுடன் கலந்துரையாட விரும்புவதாகவும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஒற்றையாட்சி ஆட்சிமுறையில் 13வது திருத்தம் பலவீனமான குறைகளை கொண்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் டில்லியின் பேச வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தெரிவித்தார்.
இதன் போது, நரேந்திர மோடி சாதுரியமாக பதிலளித்தார். தமிழ் கட்சிகளை டில்லிக்கு அழைப்பு விடுக்காமலும், மறுக்காமலும் பதிலளித்தார்.
“நீங்கள் டில்லிக்கு தாராளமாக வாருங்கள். அங்குள்ள அதிகாரிகளுடன் இது பற்றி பேசுங்கள். அவர்கள் அது பற்றி கவனத்தில் கொண்ட பின்னர் அடுத்த கட்டத்தை ஆராயலாம்“ என தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் சைவர்களின் வழிபாட்டிடங்களில் பௌத்த ஆக்கிரமிப்பு விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த விடயத்தை தாம் இதுவரை பாரதூரமானதாக கருதாமல் விட்டு விட்டதாகவும், தமிழ் பிரதிநிதிகள் விபரித்த பின்னரே இதன் பாரதூர தன்மையை உணர்வதாகவும், இந்த விடயத்தை ஆராய்ந்த பின்னர், அரசுடன் உரிய இடத்தில் பேசுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர் விவகாரம் பற்றி பேசப்பட்ட போது, “இது இரு அரசுகளுக்கிடையிலான பிரச்சினையோ, சிங்களவர்- தமிழருக்கிடையிலான பிரச்சினையோ இல்ல. தமிழர்களுக்கிடையிலான பிரச்சினை. இதை இரு நாட்டு தமிழர்களுமே பேசி தீர்க்க வேண்டும். நீங்கள் ஒரு தரப்பினர் தமிழகம் சென்று அங்குள்ள மீனவர் பிரதிநிதிகளுடன் பேசுங்கள். எப்படி தீர்வு காணலாமென ஒரு வழிமுறையை கண்டுபிடியுங்கள். நாங்கள் அதற்கு உதவுவோம்“ என மோடி பதிலளித்துள்ளார்.