சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக இறை வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனுஷா சந்திரசேகரனின் வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்களில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களும் பங்கெடுத்திருந்தனர்.
இறைவழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன்-
இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் எங்களுடைய தனித்துவத்தை நிரூபிப்பதற்காக சனநாயக தேசிய கூட்டணி எனும் கட்சியினூடாக களமிறங்கியிருக்கிறோம்.
எந்த தேசிய கட்சிகளுடனும் இணையாமல் எங்களுடைய தனித்துவத்தை நிரூபிப்பதே எங்களுடைய ஒரு இலட்சியமாக இருக்கிறது.
எத்தனையோ கட்சிகளில் பழைய ஆரம்பகால உறுப்பினர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும், 30 வருடம் 40 வருடம் கட்சிகளில் இருப்பவர்களுக்குத்தான் இடம் கொடுக்க வேண்டும் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று இருக்கும் தருவாயில் புதிய இளைஞர்கள் ,புதிய வேட்பாளர்கள் , புதிய பிரதேச சபை உறுப்பினர்களாக அவர்கள் ஆகும்போது நமது மக்களுக்கான சேவைகளை சரியான முறையில் செய்வார்கள் என எண்ணி நாம் புதிய வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறோம்.
ஆகவே இம்முறை எங்களுடைய தனிதுவத்தை நிரூபித்து பெரும் புரட்சியை படைக்க தயாராக இருக்கிறோம்.
இன்றைய நாள் நாங்கள் எங்களது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக கடவுளின் அனுக்கிரகதை வேண்டி தலவாக்கலையிலிருந்து எங்களுடைய பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம்.
இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் நாங்கள் களமிறங்கியிருக்கிறோம். எங்களுடைய வெற்றி தபால் பெட்டி சின்னத்திற்கு இருக்கும் என நம்புகிறோம்.
என தெரிவித்தார்.
தலவாக்கலை கதிரேசன் ஆலயத்தில் இன்றைய தினம் பூஜை வழிபாடுகளுடன் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.