யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் மீண்டும் ஒரு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தயார்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
வைத்தியசாலைக்குள் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஏற்கெனவே தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் எதனையும், பணிப்பாளர் அமுல்ப்படுத்தாமல் அசமந்தமாக இருக்கிறார் என குற்றம்சாட்டியே மீண்டும் தொழிற்சங்க போராட்டத்துக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.சக்கர நாற்காலி நோயாளிகளுக்கு மருத்துவமனை ஊழியர்கள் உரிய சேவையினை வழங்கல்.
2. சேவைத் தேவைகளின் அடிப்படையில் பிற மருத்துவ பிரிவுகளிலிருந்து அவசர மற்றும், அவசர சத்திர சிகிச்சை சேவைகளுக்கு ஊழியர்களை நகர்த்துதல்.
3. மருத்துவ நிபுணர்கள் அளித்த புகார்கள் மீது உண்மை கண்டறியும் செயல்முறையைத் தொடங்குதல் – நோயாளர் பராமரிப்பு / மருத்துவ விடுதி நோயாளர் பார்வையடுகளின் மருத்துவ துணை ஊழியர்கள் வருகை தராதது.
4 மருத்துவ அதிகாரிகளின் பணிநிலை வெற்றிடங்கள் தொடர்பான திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
வரும் 14 ஆம் திகதி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழுவால் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, தலைமை அலுவலகத்துடனும் கலந்தாலோசித்து, பங்குனி 17 ஆம் திகதி முதல் தொழில் சங்க நடவடிக்கை தொடங்கப்படும் என த.சத்தியமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல மருத்துவ பிரிவுகளுக்கு மருத்துவ துணைநிலை ஊழியர்கள் தொடர்ந்தும் வருகை தருவதில்லை என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாக அலுவலகத்தகர்களால் மேற்பார்வை செய்யப்படவில்லை என்றும் எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் நோயாளிகளுக்கான சேவையை திறம்பட வழங்க முடியாத நிலைமை ஏற்படுகின்றது.
இது குறித்து நிர்வாகத்திற்குப் பல முறை முன்பே தெரிவித்துள்ளோம். இருப்பினும் நடைமுறை சாத்தியமான முடிவுகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.




