– கருணாகரன்
தமிழ்க் கட்சிகளின் புதிய கூட்டு ஒன்று உருவாகுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான சந்திப்புகளும் பேச்சுகளும் தொடருகிறது. ஆரம்பத்தில் பேச்சுகளில் பங்கேற்ற ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் இந்தக் கூட்டில் இணைவதற்குப் பின்வாங்குவதாகச் செய்திகள் வந்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்குள்ளும் குழப்பங்கள் நீடிப்பதால்தான் அவற்றினால் தீர்மானத்தை எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு அணிகளின் குழப்பத்துக்கும் புலம்பெயர் தமிழ்த்தரப்புகளின் அழுத்தப் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இதேவேளை தமிழரசுக் கட்சியிலிருந்து அண்மையில் பிரிந்த சரவணபவன் + தவராஜா அணியும் தடுமாறுகிறது. அந்த அணியிலுள்ள சரவணபவன், ‘ஒட்டுக்குழுக்களுடன் கூட்டு வைக்க முடியாது‘ என்று இந்த அணியைப் பார்த்துச் சொல்கிறார். என்னவொரு ஞானோதயம்! மகிந்த ராஜபக்ஸவுக்கு மாம்பழம், மைத்திரிபால சிறிசேனவுக்க கேக், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அல்வா என்று கொடுத்துக் கொடுத்துக் குளிராபிஷேகம் செய்கின்ற சரவணபவனுக்குத் தமிழ்த்தேசியம், தலைவர் பிரபாகரன் போன்ற சொற்களெல்லாம், தன்னுடைய கொழும்பு அரசியல் உறவையும் அதில் பரிமாறப்படும் ரகசிய முத்தங்களையும் மறைத்துக் கொள்வதற்கான ஒரு அழகிய திரைதான்.
விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி, அப்படித் தூய்மைவாதம் பேசுகின்ற இந்தத் தரப்புகள் அனைத்தும் ஏன் புலிகளுடைய கனவுகளுக்காகவும் நம்பிக்கைக்காகவும் ஒன்றிணைய முடியாமலிருக்கிறது? ஆபத்தின் விளிம்பிலிருக்கும் தமிழ்த்தேசியத்தை ஒன்றிணைந்து பாதுகாக்க முடியாமலிருப்பது ஏன்?
காரணம், வெறொன்றுமில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள ஒன்றிரண்டு வட்டாரங்களுக்கு அப்பால், இவற்றுக்கு அரசியற் களமுமில்லை. அடையாளமுமில்லை. கூட்டுக்குள் நிற்பதானால் ஒரு சமதள வலுவிருக்க வேண்டும். இல்லையென்றால், தங்களுடைய கோரிக்கைகளும் தமக்கான இடமும் குறைவாக இருக்கும் என இவை பதட்டமடைகின்றன. இதனால்தான் இந்தத் தடுமாற்றங்கள். அதை மறைத்துக் கொள்வதற்காகவே இந்தக் கூட்டணியைப் பற்றிய சில குறை கூறுதல்களும் தம்மைப்பற்றிய நியாயப்படுத்தல்களும். இவையெல்லாம் காலம் கடந்தவை. தற்போதைய அரசியல் நிலவரமும் மக்களின் உளநிலையும் மாற்றமடைந்து எங்கேயோ போய்விட்டது. இதைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகின்றன இந்த மூன்று அணிகளும்.
இந்த மூன்று அணிகளையும் தவிர்த்துப் பார்த்தால் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகள், ஆகியவை பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் சில அணிகள் இந்தக் கூட்டில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த அணியில் உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் கிழக்கில் உள்ள அரசியற் தரப்புகளும் உள்ளடங்குமா? என்று தெரியவில்லை. கிழக்கைத் தவிர்த்து, வடக்குக்கு மட்டும்தானா இந்தக் கூட்டணி என்றால், அதைக் குறித்து நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.
ஏனென்றால், வடக்கின் சூழல், நிலைமைகளுக்கு ஏற்ப, வடக்கிலுள்ள தரப்புகள் சிந்திப்பதைப்போல, செயற்படுகின்ற மாதிரி, கிழக்கை மையப்படுத்திச் செயற்படுகின்ற அமைப்புகளும் உண்டு. அவை கிழக்குப் பிரதேசவாதத்தை விட்டுத் தமிழ்ச் சமூகம், தமிழ் பேசும் தரப்புகள் என்று சிந்திக்கக் கூடியவையாக இருந்தால், நிச்சயமாக அவற்றையும் இணைத்துச் செயற்படுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அது அவசியமானது. அப்பொழுதுதான் இந்தக் கூட்டு, இந்த அணி பலமுடையதாகவும் அர்த்தமுடையதாகவும் இருக்கும்.
ஒரு புதிய அரசியற் கூட்டானது ஏற்கனவே உள்ள அரசியல் கூட்டுகள் அல்லது தரப்புகளையும் விட புதிய ஒன்றாக இருக்க வேண்டும். அரசியல் உள்ளடக்கம் (Political Content), புதிய அரசியலை வடிவமாக்கும் செயற்பாட்டு முறைமை (The operating system that shapes the new politics) ஜனநாயகப்பண்பு (Democracy) போன்றவற்றில் அது முன்னகர்ந்திருப்பது அவசியம். ஏற்கனவே உள்ள அரசியற் கூட்டுகள் அல்லது தரப்புகளின் போதாமையினால் – குறைபாட்டினால் – தானே புதிய கூட்டு – புதிய அணி – உருவாகிறது என்றால், அதற்குரிய பண்பும் பாங்கும் வீரியமும் வினைத்திறனும் இலட்சியமும் அதை அடைவதற்கான வழிமுறையும் அர்ப்பணிப்பும் அதற்கிருக்க வேண்டும்.
ஆகவே இந்தக் கூட்டணி தனியே தேர்தலை மையப்படுத்திய கூட்டு என்றில்லாமல், சமகால – எதிர்கால அரசியலை முன்னெடுப்பதற்கான கூட்டாக மாற்றமடைவது – வளர்ச்சியடைவது – அவசியமாகும். இல்லையென்றால், இந்தக் கூட்டினால் பயனில்லை? எதற்காக இந்தக் கூட்டு?
அரசியற் கூட்டு தேர்தலையும் எதிர்கொள்கிறது. தேர்தலுக்கு அப்பாலும் அதனுடைய பணிகள் உள்ளன. அது உலகளாவிய அளவில் தமிழ்ப் புலம்பெயர்ந்தோரையும் உள்ளடக்கி விரிவு கொள்ள வேண்டும். இதற்குரிய அடித்தளத்தை அமைப்பது அவசியம். அந்த அடித்தளத்தில் ஒரு ஆறு மாதகாலம் அர்ப்பணிப்போடு வேலை செய்தால், மக்களுக்கு நம்பிக்கை உருவாகும். அதற்கு முன்பு, அடுத்த மாதங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வந்து காலடியில் நிற்கிறதே என்றால், ஆம், அதையும் எதிர்கொள்ளுங்கள். தொடர்ந்து அரசியல் சமூகப் பணிகளையும் முன்னெடுங்கள் என்றே இங்கே வலியுறுத்தப்படுகிறது. இதை மக்கள் உணரவும் ஏற்கவும் வைக்க வேண்டும்.
இந்தக் கூட்டில் இருக்கும் தரப்புகள் ஒரு காலத்தில் ஆயுதரப்போராட்டத்தில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவை. அதாவது செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தை உடையவை. இவற்றின் தலைவர்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வரலாறும் பங்களிப்பும் உண்டு. அதேவேளை இவர்களின் மீது விமர்சனங்களும் தாராளமாக உண்டு. இதே தன்மையும் இதையொத்த வரலாற்றையும் கொண்டதே ஜே.வி.பியும். அது தன்னை NPP யாக மாற்றியதால், அதற்கொரு புதிய முகமாக அநுரவை முன்னிறுத்தியதால் இன்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. இதை இந்த அணி பாடமாக – முன்மாதிரியாகக் கொள்வது நல்லது.
இதற்கிடையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் அதிரடியாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றின் தலைவர்களிடம் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள இயங்க வைக்க வேண்டும்” என்று கடிதம் எழுதியிருக்கிறார். “அதுதான் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பானது‘ என்று வேறு விளக்கமும் அளித்திருக்கிறார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என ஏனைய கட்சிகள் வெளியேறக் காரணமாக இருந்தது தமிழரசுக் கட்சியே. அதனுடைய பிடிவாதங்களும் மேலாதிக்கச் செயற்பாடுகளும் கூட்டமைப்பின் உடைவுக்குக் காரணமாகின.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கொடுத்தபோது கூட தான் தனித்தே போட்டியிடப்போவதாக அறிவித்தது தமிழரசுக் கட்சி. “அப்படிக் கடுமையானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டாம். அது தமிழ்த்தேசிய அரசியலைப் பலவீனப்படுத்தும்” என்று பங்காளிக் கட்சிகள் கெஞ்சிக் கேட்டன. ஆனாலும் அதைத் தமிழரசுக் கட்சி கேட்கவில்லை. தனித்தே தன்னுடைய வேட்புமனுக்களைக் கொடுத்தது.
‘ஆயிரம் பிரச்சினைகளின் மத்தியிலும் கூட்டமைப்பைச் சிதைய விடக்கூடாது‘ என்று இறுதி மூச்சுவரையில் தாக்குப் பிடித்த பங்காளிக் கட்சிகள், வேறு வழியின்றி ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகத் தம்மைப் பிரகடனப்படுத்தின. இந்தப் பெயரிலேயே அவை ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டன. இதனால் அவற்றுக்குச் சேதமும் ஏற்பட்டது.
இருந்தும் பின்வாங்காமல், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னைப் பலப்படுத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கூடவே தமிழ் அரசியற் பரப்பில் ஏற்பட்டிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்குமாக ஏனைய தரப்புகளோடு பேசி வருகிறது. இதில் முதற்கட்ட உடன்பாட்டுக்கு அது வந்துள்ள நிலையில்தான் சிவஞானத்தின் அவசர கடிதம் வந்துள்ளது.
சிவஞானத்தின் கடிதத்திற்கு நல்லதொரு பதிலை சித்தார்த்தன் அளித்திருக்கிறார். அதில் அவர் மேற்சொன்ன விடயங்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். மட்டுமல்ல, தமிழரசுக்கட்சி இதையெல்லாம் புரிந்து கொண்டு பேச வந்தால், சேர்ந்து செயற்பட வந்தால், இணைந்து கொள்வதில் பிரச்சினை இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
சிவஞானத்தின் இந்த அவசரத்துக்கு என்ன காரணம்?
1. தன்னை விட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பலமடைந்து விடும் என்ற தமிழரசுக் கட்சியினுடைய அச்சத்தின் வெளிப்பாடா?
இருக்கலாம். ஏனென்றால், வரவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை எப்படியோ NPP கொண்டுபோகத்தான் போகிறது. மிஞ்சும் வாக்குகளைத்தான் தமிழ்த்தரப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் இப்போதுள்ள நிலையில் வடக்கில் மூன்று தரப்புகளும் கிழக்கில் இரண்டு தரப்பும் உள்ளன. வடக்கில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அணி ஆகிய மூன்றும் உள்ளன. கிழக்கில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அணியும். இதை விட இப்போதுள்ள நிலையில் கிழக்கை மையப்படுத்தி கட்சிகளும் தனியாக உள்ளன.
இதில் தமிழரசுக் கட்சிக்கான இடம் எப்படி இருக்கும்? என்ற கேள்வி அதற்குள் எழுந்திருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு வெற்றி கிட்டியிருந்தாலும் அதற்குப் பிறகான களச் சூழல் சற்று மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில்தான் தமிழரசுக் கட்சியைத் தனித்து விட்டு விட்டு ஏனைய கட்சிகளை உள்ளீர்த்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. அதன்படி தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை விட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அணிக்குச் சில இடங்களில் வெற்றி வாய்ப்புக் கிட்டினால், அது மாகாணசபைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் அவசர அவசரமாக ஒரு மாற்று உபாயத்தை வகுத்து, தனக்குச் சாதகமாக்குவதற்கு தமிழரசுக் கட்சி முயற்சிக்கிறது. இந்த முயற்சிக்கு சுமந்திரனோ, சிறிதரனோ முன்னிலைப் பாத்திரத்தை வகிக்க முடியாது. அவர்கள் இருவரையும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு திரும்பியும் பாராது. ஆகவேதான் சிவஞானத்தின் மூலமாக அது இந்தக் காயை நகர்த்தப் பார்க்கிறது.
2. சிவஞானம் சொல்வதைப்போலத் தமிழ் மக்களின் அரசியலை முன்னிட்ட தீர்மானத்தின் உந்துதலா?
இல்லை. அப்படியாயின் அது ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைய விட்டிருக்காது. அப்படித்தான் உடைய விட்டிருந்தாலும் அதற்குப் பிறகான சந்தர்ப்பங்களில் எல்லாம் அதை மீள்நிலைப்படுத்துவதற்கு முயற்சித்திருக்கும். அப்படி நடக்கவேயில்லை. பாராளுமன்றத் தேர்தலின்போது கூட கூட்டமைப்பாக நிற்போம் என்று ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கேட்டிருந்தனர். அதற்குத் தமிழரசுக் கட்சி சம்மதிக்கவே இல்லை.
மட்டுமல்ல, பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகும் கூட கடந்த நான்கு மாதங்களாக தமிழரசுக் கட்சி தனித்தே செயற்பட்டது; செயற்பட விளைந்தது. இப்போது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளியே உள்ள சக்திகளை உள்ளீர்த்து தன்னைப் பலப்படுத்த முற்படும்போதுதான் அது கூட்டமைப்பை மீள்நிலைப்படுத்துவதைப் பற்றிச் சிந்திக்கிறது.
சிவஞானம் சொல்வதைப்போல, தமிழ் அரசியலின் எதிர்காலம், பாதுகாப்பு போன்றவற்றைக் குறித்துத் தமிழரசுக் கட்சி சிந்திப்பதாக இருந்தால், அது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சிந்திப்பதைப்போல, தனக்கு வெளியே உள்ள அனைத்துத் தரப்புகளையும் உள்ளீர்க்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்த்தரப்பு ஒரு பலமான கூட்டாக, அணியாக மாறும் – நிற்கும். அதற்குப் பின்னர் அதனுடைய அரசியல் உள்ளடக்கத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
ஆனால், இதற்குத் தமிழரசுக் கட்சி தயாராக இல்லை. இதையே சிவஞானத்தின் குறுகிய கடிதம் காட்டுகிறது. அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவற்றுக்குத்தான் அழைப்பை விடுத்துள்ளார். ஆகவே, இங்கே ஒரு தெளிவான சூதே நடக்கிறது.
உருவாகி வரும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அணியைச் சிதைப்பதே இதனுடைய நோக்கமாகும். அதாவது வரலாற்றில் மீண்டும் செயற்பாட்டு அரசியல் தரப்பு பலமடைவதை தமிழரசுக் கட்சி விரும்பவில்லை. (தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஏனைய தமிழ் மிதவாதத் தரப்புகளும்தான்). மறுவளமாக நாம் ஒற்றுமைக்கு அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள் நிலைப்படுத்துவதற்கு முயற்சித்தோம். அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை என்று காட்டியும் விடலாம்.
ஆகவே ஒற்றுமைக்குத் தாம் எதிரானவர்களில்லை. அதற்காகக் கதவுகளைத் திறந்தோம். அவர்கள்தான் வரவில்லை. என்பதால் அவர்களை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அணியை – மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை சொல்லாமற் சொல்வதாகும். இதன்மூலமும் தமிழரசுக் கட்சி தன்னைச் சுத்தப்படுத்தி – நியாயப்படுத்தி முன்னிலைப்படுத்துவதற்கு முயற்சிக்கிறது. பதிலாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அணியைப் பலவீனப்படுத்துவதற்கு – கூட்டமைப்பை மீள உருவாக்குவதற்கு மறுக்கிறது என்று காட்டுவதற்கு – விளைகிறது.
3. இது சிவஞானம் தனித்து எடுத்துள்ள தீர்மானமா?
அதாவது சம்பந்தன், மாவை சேனாதிராஜாவைப் போல ஏனைய தரப்புகளை மதிக்காமல் நடக்கும் தலைமை தன்னுடையதல்ல. சம்பந்தனையும் மாவையையும் நீங்கள் தேடிச் சென்று சந்திக்க வேண்டும். அப்படிச் சந்தித்தாலும் உங்களுடைய எந்தக் கோரிக்கைகளையும் (கதைகளையும்) அவர்கள் கேட்பதேயில்லை. ஆனால், தான் அவ்வாறவரில்லை. உங்களைத் தேடி மன்னாருக்கும் வருவேன். உடுவிலுக்கும் வருவேன். இருபாலைக்கும் வருவேன். ஏன் அரசியலில் சிறுபராயத்தைக் கொண்ட ஐங்கரநேசனிடமும் தேடிச் செல்வேன் என்று காட்ட விளைகிறார் சிவஞானம். இதன் மூலம் தானொரு மாற்றுத் தலைவர் என்றுணர்த்த முற்படுகிறார். இதன்வழியாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மட்டுமல்ல, தமிழ்த்தரப்பின் தலைவராகவும் தன்னை அடையாளப்படுத்துவதற்கு விளைகிறார் சிவஞானம்.
இந்தச் சூழலில், இவற்றுக்குப் பின்னால் உள்ள விடயங்களைப் பார்க்க வேண்டும்.
சிவஞானம் தனித்துத் தீர்மானம் எடுப்பதற்கு தமிழரசுக் கட்சி இடமளிக்காது. ஏனென்றால், ஏற்கனவே கட்சியின் கூட்டுத் தீர்மானத்துக்கு மாறாக முடிவுகளை எடுத்தவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது கட்சி. மட்டுமல்ல, இவ்வாறான அரசியல் விடயங்களைக் கையாள்வதற்கு அரசியற் குழுவொன்றை அது உருவாக்கியுள்ளது. அதனுடைய தீர்மானமில்லாமல், தன்னிச்கையாக சிவஞானம் தீர்மானத்தை எடுக்க முடியாது. ஆகவே தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – விருப்பமே இது என்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
பல்வேறு விதமான அரசியல் நிலைப்பாடுகளையும் வெவ்வேறு விதமான குணாம்சங்களையும் கொண்ட தரப்புகள் ஒருங்கிணைவதில் (ஒருங்கிணைப்பதிலும்தான்) சிக்கல்களிருப்பது வழமை. கூடவே ஒவ்வொன்றினது செயற்பாட்டுப் பரப்புகளும் வேறுபட்டவையும் கூட. இதுவும் ஒருங்கிணைவில் சில தயக்கங்களையும் இடர்ப்பாடுகளையும் உண்டாக்கும்.
ஆனால், இதையெல்லாம் கடந்து நிற்கக் கூடிய அரசியல் உணர்வும் அரசியற் புரிதலும் ஏற்படுமாக இருந்தால் அது, குறித்த கூட்டின் முதலாவது வெற்றியாகும்.
அரசியற் கூட்டுகள் அல்லது கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைவுகள் பொதுவாக சில அடிப்படைகளில் அமைவதுண்டு.
1. கொள்கையின் அடிப்படையில் (Based on principle or policy base).
2. பிரச்சினைகளின் அடிப்படையில் (Based on the issues or issues base).
3. சூழ்நிலைகளின் நிமித்தமாக (Due to circumstances).
4. புறச் சக்திகளின் அழுத்தத்தினால் Due to the pressure of external forces).
இவ்வாறான நிலைகளில் அமைகின்ற கூட்டுகள் அல்லது ஒருங்கிணைவுகளில் அந்தத் தன்மை – இயல்பு – வெளிப்படும். குறிப்பாக புறச் சக்திகளின் அழுத்தத்தினால் ஏற்படுகின்ற அல்லது ஏற்படுத்தப்படுகின்ற கூட்டு என்பது, ஒட்டாத மண் போலவே காணப்படும். வெளி அழுத்தத்தின் காரணமாக நிகழும் விரும்பாத திருமணத்தைப்போலிருக்கும் அந்தக் கூட்டு – ஒருங்கிணைவு.
ஆனால், கொள்கையின் அடிப்படையில் (Based on principle or policy base) அமைகின்ற ஒருங்கிணைவோ அல்லது கூட்டோ அப்படியிருக்காது. அது கட்டிறுக்கமான ஒருங்கிணைவாக அல்லது கூட்டாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகமாகக் கொண்டிருக்கும். காரணம், எதற்காக இந்தக் கூட்டு, எந்த இலக்கை அடைவதற்காக இந்த ஒருங்கிணைவு என்ற நோக்கமும் புரிதலும் அதற்கிருக்கும். அது கொள்கை சார்ந்ததாக இருப்பதால், இனவிடுதலை அல்லது சமூக விடுதலை அல்லது வர்க்க விடுதலை என ஏதோ ஒன்றின் பிரதிபலிப்பு அதிலிருக்கும்.
இது இப்போது தமிழ் அரசியற் தரப்பின் மீதான நெருக்கடியை எதிர்கொள்வதற்கான கூட்டாகவே பெரிதும் காணப்படுகிறது. கூடவே, பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான கூட்டாகவும் உள்ளது. இந்த இரண்டையும் எதிர்கொள்வதற்கு ஒரு பலமான அரசியல் கூட்டே அவசியமாகும். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே நேரத்தில் சிங்களத் தரப்பையும் அரசையும் தமிழ் தரப்பையும் எதிர்கொண்டு நிமிர வேண்டியுள்ளது. வரலாற்றுச் சக்திகள் வரலாற்றில் நிமிர்வது வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுச் செயற்படுவதன் ஊடாகவே. அப்படி நிகழ்ந்தால் தமிழரின் அரசியல் சில படிகள் முன் நகரும்.
00