இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் வாகன இறக்குமதி தடைகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 196 கார்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் இந்த வாகனங்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் வேகன் ஆர், ஆல்டோ, டொயோட்டா யாரிஸ், வெசல் உள்ளிட்ட பல பிரபலமான கார்கள் அடங்குகின்றன. வாகனங்களின் விற்பனை விலைகள் பல்வேறு காரணிகளை பொறுத்து மாறுபடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலை கணிப்புகளின்படி, வேகன் ஆர் கார்கள் ரூபா 6.5 முதல் 7.5 மில்லியன் வரையிலும், ஆர்எஸ் மாடல்கள் ரூபா 8 முதல் 10 மில்லியன் வரையிலும், வெசல் வகை கார்கள் ரூபா 16 முதல் 20 மில்லியன் வரையிலும் விற்பனை செய்யப்படலாம்.
வாகன சந்தையின் தற்போதைய நிலை, இறக்குமதி செலவுகள், வரிகள் மற்றும் மக்களிடையேயான தேவை போன்றவை விலைகளை நிர்ணயிக்க முக்கிய காரணிகளாக இருப்பதால், விற்பனை தொடங்கிய பிறகு விலைகள் மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு இறுதி வரை கூடுதல் வாகனங்கள் நாட்டிற்கு வருவதால், விலை நிலவரம் தொடர்பில் சரிவை எதிர்பார்க்கலாம் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு வாகனங்களை வாங்கும் முன், சந்தை நிலவரம் மற்றும் விலைகளை பூரணமாக ஆராய்ந்து முடிவெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.