புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (28) கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் (28, வெள்ளிக்கிழமை) மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து, ஹிஜ்ரி 1446ம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் பல உலமாக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாட்டின் எந்தப் பகுதிகளிலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டால், அதனை தகுந்த ஆதாரங்களுடன் 011-2432110, 011-2451245, 077-7316415 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிறை தென்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால், ரமழான் மாதம் நாளை தொடங்கும். இது முஸ்லிம் மக்களுக்கு நோன்பு ஆரம்பிக்கும் நாளாகும், மேலும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது, தொழுகைகள், தானங்கள் மற்றும் பிற மதச்சடங்குகள் நடைபெறும் என தெவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்புகள், பிறை தென்பட்டதைக் கண்காணிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை, நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து, ரமழான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிப்பிடுகின்றன.
முஸ்லிம் மக்கள், ரமழான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்ற பிறைக்குழு மாநாட்டின் முடிவுகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்குப் பிறகே நோன்பு தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.