வாகரை, புச்சாக்கேணி பகுதியில் வனவளத் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதியில் சேனைப் பயிர்செய்கையில் ஈடுபட்டுவரும் மக்கள் குடியிருந்த குடிசைகளை வனவளத் திணைக்கள அதிகாரிகள் தீ வைத்து எரித்து அழித்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நான்காம் கட்டை, மூன்றாங்கட்டை மற்றும் வெருகல் கல்லரிப்பு போன்ற பகுதிகளில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
சுமார் 13 குடிசைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு, பயிர்ச் செய்கைக்காக வைத்திருந்த கச்சான், சோள விதைகளையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பரம்பரைச் சொத்தாக இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள், யுத்தத்திற்குப் பிறகு மீண்டும் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது வனவளத்திணைக்கள அதிகாரிகள் தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை 26) பிற்பகல் அப்பகுதிக்குள்நுழைந்த வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கிருந்தவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்தமையுடன், மக்கள் சொந்தத் தேவைக்கு வெளியேபோயிருந்த பகுதியில் உள்ள குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாகரை பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பு, மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு மக்கள் முறையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளிதரன் இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், வாகரை பிரதேச செயலாளரிடம் முறையாக விசாரணை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதிகளில் வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களினால் காடுகள் அழிக்கப்பட்டு, காணிகள் அபகரிக்கப்படும்போது அவர்களுக்கு உதவும் வனவளத் திணைக்களத்தினர், நமது மக்கள் தமது சொந்த மண்ணில் பயிர்ச்செய்கைகள் முன்னெடுக்கும் போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதையும், அச்சுறுத்துவதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது என வலியடுறுத்தியுள்ள்ளனர்.
இது தொடர்பில் அரசாங்கம் வன வளத்திணைக்களம் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அணி திரட்டி போராடவேண்டிய நிலையேற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.