வறுமை ஒழிப்பு மற்றும் சமூக வலுவூட்டலுக்காக ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக “பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக, அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 06 பேரில் ஒருவர் பல்பரிமாண வறுமைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 95.3% வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்கள் கிராமப்புற மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமையொழிப்பு வேலைத்திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த பல தசாப்தங்களாக வறுமையொழிப்பு வேலைத்திட்டங்களின் கீழ் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் செலவழிக்கப்பட்ட நிதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2000ம் ஆண்டில் 1.10 மில்லியன் பயனாளிகளாக இருந்தது, 2010ம் ஆண்டில் 1.57 மில்லியனாக அதிகரித்தது. தற்போதைய கணக்கீட்டின்படி, 2024ம் ஆண்டில் 1.79 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உற்பத்தி செயற்பாடுகளுக்கும் தடையாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, உண்மையான இடர்களுக்கு உள்ளாகக்கூடிய குடும்பங்களை மட்டும் முறைசார்ந்த சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் சேர்ப்பதோடு, மற்ற பயனாளிகளை பொருளாதார ரீதியாக முனைப்பான பங்காளர்களாக உருவாக்குவதற்கான திட்டமிடல் அவசியம் என அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




