தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கம் எந்தவித முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல் வழங்கியுள்ளார்.
அவர், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். “ஒரு நபரின் கலாசார அடையாளத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தும் விதிமுறைகள் விதிக்க வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட உடைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என கூறினால் மட்டுமே, அந்த உடைகள் தொடர்பான முடிவுகள் பரிசீலிக்கப்படும் என அவர் விளக்கினார்.
தற்போது, பொலிஸ் உட்பட பாதுகாப்பு அமைப்புகள் எந்த உடையையும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதவில்லை எனத் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தற்போதைய பரிசீலனையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினை பற்றிய எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.