தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இடையே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சை அரசியலமைப்பு பேரவை வரை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரத்தை தனக்கே வழங்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும், இந்தக் கோரிக்கையை தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் உள் நிர்வாக நடவடிக்கைகளில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிடுவதாகக் கூறி, பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் தொடர்பான அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் கோரியிருந்தார். மேலும், இதற்கான சட்ட அனுமதி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபரின் பரிந்துரையின்படி, புதிய நியமனங்கள் அல்லாது, ஏற்கனவே பதவியிலிருக்கும் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனினும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது நடைமுறையிலிருந்து விலக முடியாது என்றும், உரிய நடைமுறைகளுக்கு அமையவே செயற்படப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க தலைமையில் செயற்படும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், ஓய்வுபெற்ற அமைச்சக செயலாளர் ரேணுகா ஏக்கநாயக்க, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், சட்டத்தரணி தில்சான் கபில ஜெயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம். இலியாஸ் மற்றும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த ஜெயசிங்க ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது அரசியலமைப்பு பேரவையின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபருக்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையிலான இந்த கருத்து முரண்பாடு எந்த முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.




