வயதான தாயை பூட்டிவிட்டு கும்பமேளாவிற்கு மகன் சென்றதனால் குறித்த தாய் பசியில் பிளாஸ்டிக் கவரை உண்ட அவலச் சம்பவம் பதிவாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக, தனது வயதான தாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகன் பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகா சிவராத்திரி நாளான வருகிற 26ம் திகதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில், உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதன் பாதுகாப்பிற்காக 45,000க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் தேசிய மீட்பு படையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 68 வயதான தாயை, வீட்டிற்குள் பூட்டிவிட்டு மகன் தனது குடும்பத்துடன் கும்பமேளா சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இரண்டுநாட்களாக பசியால் வாடிய மூதாட்டி, பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முயன்ற நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டுள்ளார்..
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.