காலி மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பலாங்கொடை, குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மாணவி கைது செய்யப்பட்டதாக காலி பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவி அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் 11ம் வகுப்பு மாணவியாகும். அவரின் சகோதரன் முந்தைய காலங்களில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளாகி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சகோதரன் சிறையில் இருக்கும் காலத்தில், அவரது மனைவி, கைது செய்யப்பட்ட மாணவியின் உதவியுடன் ஹெரோயின் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். மாணவி தனது சகோதரியின் உறவுக்காரருடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்கின்றாரா என்பதை பொலிஸார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மாணவியின் குடும்பத்தினரும் பொலிஸாரின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் விற்பனைக்கு ஈடுபடுவது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.