இன்று (18) நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், தேனீரின் விலை 5 ரூபாவாலும், பால் தேனீரின் விலை 10 ரூபாவாலும் உயர்ந்துள்ளது. அதேபோல், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும், சிற்றூண்டி வகைகளின் விலை 10 ரூபாய் வரை உயரும் எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்றும், சமீபத்தில் பால், அரிசி, காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்திருப்பதால் உணவகங்கள் இந்த மாற்றத்தை செய்யத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சங்கம் விளக்கியுள்ளது.
இந்த விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் உணவக உரிமையாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். இருப்பினும், தற்போதைய சந்தை நிலைமையினால் உணவகங்கள் பாதிக்கப்பட்டு வருவதால், இந்த கட்டாயமான விலை திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் சங்கம் கூறியுள்ளது.




