திருகோணமலையில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதிகளில் மாபெரும் சுத்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் தேசிய முயற்சி இன்று (16) திருகோணமலை மாவட்டத்தில் மான் பூங்கா கடற்கரை (சங்கமித்தா அருகில்) பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை உறுப்பினர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த வேலைத்திட்டம் “அழகிய கடற்கரை மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், கடற்கரையை குப்பைகளிலிருந்து பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணம் முழுவதும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், வெருகல், மூதூர், கிண்ணியா, குச்சவெளி ஆகிய 53 முக்கிய கடற்கரைப் பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள “2025ல் தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையின் முக்கிய சுற்றுலாத்தளங்கள், கடற்கரை பகுதிகள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் அவதானத்தை அதிகரிப்பதுடன், கடற்கரை குப்பைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இம் முயற்சிகள் இலங்கை நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், கடற்கரை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சிரமதானம் செய்யப்பட்ட பகுதி தொடர்ச்சியாக முன்னாள் மூன்று ஆளுநர்களாலும் சுத்தம் செய்யப்பட்ட ஒரு பகுதியாக காணப்படுவதுடன், இதற்கான நிரந்தர தீர்வானது எட்டப்படவேண்டியது அவசியம் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்