நாமல் ராஜபக்ஷ மீது சட்டக் கல்வி தொடர்பில் விசாரணை செய்ய CID க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சட்ட இளமாணி பட்டத்தை எவ்வாறு பெற்றார் என்பதைக் குறித்து விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில்பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ சட்டப் பட்டப் படிப்பை மேற்கொண்டதில் முறைகேடுகள் இடம்பெற்றதாக பல புகார்கள் வந்துள்ள நிலையில், அந்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதுவரை, நாமல் ராஜபக்ஷ கல்வி தகுதிகள் தொடர்பாக முன்னதாகவே பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, அவர் பட்டம் பெற்ற விதம், அதற்கு தேவையான கல்விசார் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டனவா என்பதைக்கண்காணிக்க சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ, சட்டத் துறையில் பட்டம் பெற்றுள்ளதோடு, அரசியல் மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் செயல்பட்டு வருகிறார். எனினும், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் நிதி மோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்