பாடசாலையில் 9ம் வகுப்பில் கல்விகற்கும் மாணவி கழுத்தில் தாலியுடன் பாடசாலை சென்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த 14 வயதான, 9ம் வகுப்பு மாணவிக்குத், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த 25 வயது கார்பென்டருடன் பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குந்தாரப்பள்ளி அருகிலுள்ள முருகர் கோவிலில் கடந்த 10ம் திகதி (நேற்று முன்தினம்) பெற்றோர் உடன் இருக்க, சிறுமி மற்றும் இளைஞர் திருமணம் செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் குடும்பத்தினர், வீட்டில் விசேஷம் என கூறி, பள்ளிக்கு செல்லாமல் இருக்க ஏற்பாடு செய்திருந்ததுடன், அனைவருக்கும் ஆடைகள் வாங்க செல்கிறோம் என குறித்த மாணவியிடமும், உறவினர்களிடம் தகவல் கூறியதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு, மாணவி மறுநாள் (11.02.2025) பள்ளிக்கு தாலியுடன் வந்ததை பார்த்த ஆசிரியர்கள் சந்தேகத்துடன், அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பில், உடனடியாக குழந்தைகள் நல ஆணையத்திற்கும், சமூகநலத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த அதிகாரிகள், சிறுமியை விசாரிக்க, திருமண நடந்தேறிய விவரம் உறுதியாகியது. இதையடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், சிறுமியின் பெற்றோர், திருமணம் செய்த இளைஞர் மற்றும் அவருடைய பெற்றோர் உட்பட 5 பேருக்கு எதிராக குழந்தைகள் திருமண தடை சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.