சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கான வழக்கு விசாரணைகளை விரைவாக முடிக்க புதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இவரது கூற்றுப்படி, துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 5 வருடங்கள் வரை தாமதமாகின்றது.
இந்த நேரத்தாழ்வு காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சாட்சி வழங்கும் போது சம்பவங்களை முழுமையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போகின்றனர். இதன் காரணமாக குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன என்றும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை சட்டமா அதிபரே தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், அவரது பணிக்குழாத்தில் ஆளணிப் பற்றாக்குறை உள்ளதால் இந்த தாமதம் ஏற்படுகிறது எனவும் அவர் விளக்கினார். இதை சமாளிக்க, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியான பிரிவு நிறுவப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் விசாரணைகள் விரைவாக முடிக்க முடியும் எனவும் நீதியமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.