பதுளை – பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்தார்.
பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த லொறியுடன் மோதியதில், சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியது. அதனைத் தொடர்ந்து, கம்பம் சரிந்து விழுந்ததாகவும், விபத்து மிகவும் கடுமையானதாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஹங்குரன்கெத்த, மாலியத்த, கோனகன்தென பகுதியைச் சேர்ந்த லொறியின் சாரதி யான 30 வயதுடைய டி.எம். இமாஷா மாதவ என்பவரை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் தெமோதர வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்த எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.