திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளன்பத்தை கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி. கலாதேவி அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்டு வருவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டு இன்றைய தினம் (10) திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தனர்.
திருகோணமலை கள்ளன்பத்தை கிராமத்தின் கிராம விருத்தி சங்க தலைவராக செயல்பட்டு வருகின்ற திருமதி. கலாதேவி என்பவரை கடந்த வாரம் குறித்த கிராமத்துக்கு சென்ற கிழக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆன பிரிந்த என்பவர் தங்களுடைய கட்சிக்காரர்களுக்கு குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஒத்துழைப்புகள் வழங்குவதில்லை என குறிப்பிட்டு அவரை மிரட்டி உள்ளனர்.
இதன் அடிப்படையில் குச்சவெளி போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் போலீசார் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத நிலையில் குறித்த பெண் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் திருகோணமலை நகரில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்தனர். மேலும் தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுகின்றனர்.
இது தொடர்பில் போலீசார் குறிப்பிடுகையில், குறித்த நபர் கிழக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆன பிரிந்த என்பதை உறுதி செய்துள்ளனர். அத்துடன் பொலிஸாரின் விசாரணையில் குறித்த நபர் மன்னிப்பு கோரி உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளால் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் பதவிகளை தாங்கள் ராஜினாமா செய்வதாகவும், குறித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை வந்து கிராமத்து சங்கத்தை நடத்துமாறு குறிப்பிடுகின்றனர்.