யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில், மாமுனை பிரதான வீதியில் மூன்று வீதிகள் இணைக்கும் பகுதியிலுள்ள மின் கம்பம் ஒன்று முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மின் கம்பம் கடந்த பல மாதங்களாக விழும் அபாயத்தில் உள்ளதென குறிப்பிட்டுள்ள பகுதி மக்கள், இதற்கு தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தபோதும், கிராம உத்தியோகத்தர் மின்சார சபைக்கு அறிவிப்பதாக கூறி, புகைப்படம் எடுத்து சென்று இரண்டு கிழமைகள் கடந்து இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதியில் உள்ள மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
மேலும், இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் அப்பகுதியில் பல சொத்துகளும் உயிர் சேதங்களும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கிராம மக்களின் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.