இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரி மாத இறுதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது கடந்த 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.9% வீழ்ச்சியைக் காட்டுகிறது. 2024 டிசம்பரில் 6.12 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இந்த மொத்தம், தற்போதைய சர்வதேச மற்றும் உள்ளூர் பொருளாதார சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இலங்கை வெளிநாட்டு நாணய கையிருப்பு நிலை கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக, நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனாவால் வழங்கப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களும் இந்த கையிருப்பு சொத்துகளில் உள்ளடங்குவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் சர்வதேச கடன் செலுத்தும் திறனை உறுதிப்படுத்தும் நோக்கில் சர்வதேச நிதி நிறுவனங்களுடனான இணக்கப்பாடு மற்றும் பங்களிப்பு முறைமைகள் முக்கியத்துவம் பெறும் என பொருளாதார வல்லுநர்கள் மதிப்பீடு செய்கின்றனர். முன்னதாக முடங்கியிருந்த கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் ஏற்றுமதி வருவாய் ஆகியவை நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகளை பாதிக்கக்கூடிய முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன.




