மட்டக்களப்பில் மின்சார கம்பிகளை திருட முற்பட்ட இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மட்டக்களப்பு திருப்பெரும்துறை வீதியில் அமைந்துள்ள கொத்துக்குளம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மின்சார கட்டுப்பாட்டு கட்டிடப்பகுதியில், குறித்த இளைஞன் நேற்று (06-02-2025) காலை திருட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது, மின்சார சபை அதிகாரிகள் அந்த பகுதியில் பணியாற்ற சென்றபோது, மின்சாரம் தாக்கி படுகாயங்களுடன் ஒரு இளைஞன் கிடந்ததை கண்டுபிடித்து, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, படுகாயமடைந்த இளைஞனை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து வெட்டப்பட்ட மின்சார கம்பிகள், வெட்டுவதற்கான உபகரணங்கள் மற்றும் ஒரு துவிச்சக்கரவண்டி மீட்கப்பட்டுள்ளன.
இளைஞனின் நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.