சீனாவில் ஒரு பெண் தனது வீட்டை புதிய உரிமையாளருக்கு விற்ற பின்னர், புதிய உரிமையாளருக்கு தெரியாமல் அதே வீட்டில் 7 ஆண்டுகள் வாழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவின் ஜிங்சு மாகாணத்தில் நடந்தது.
ஜாங் எனும் பெண்மணி 2016ம் ஆண்டு தனது வீட்டை விற்பனைக்கு வைத்தார். பலர் வீட்டை வாங்க ஆர்வம் காட்டினாலும், சரியான விலை கிடைக்காததால் ஜாங் காத்திருந்தார். இறுதியாக 2019ம் ஆண்டில் லீ என்பவர் ரூ.2.24 கோடி கொடுத்து வீட்டை வாங்கினார். வீடு ஒரு பங்களா போன்ற அமைப்புடன், தோட்டம் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் வசதிகளுடன் இருந்தது. பத்திரப்பதிவு செய்யப்பட்டு வீடு லீக்கு மாற்றப்பட்டது.
லீ ஒரு பரபரப்பான வணிகர், எனவே அவர் வீட்டில் அதிக நேரம் கழிப்பதில்லை. பெரும்பாலும் விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டில் தங்குவார். இப்படியே 7 ஆண்டுகள் கடந்தன. ஆனால் இந்த காலகட்டத்தில் லீக்கு வீட்டில் தனியாக இல்லை என்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டது. வித்தியாசமான சத்தங்கள், திடீர் வெளிச்சம் போன்ற அமானுஷ்ய நிகழ்வுகள் அவரை பயமுறுத்தின.
பேய் பிரச்சினை என்று நினைத்த லீ, அதை ஓட்டுவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே பிரச்சினை தொடர்ந்தது. இறுதியாக, ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்ய முடிவு செய்தார். வீட்டின் ஒவ்வொரு அறையையும் சுத்தம் செய்த பிறகு, தோட்டத்தில் இருந்த ஒரு கழிவறையை சுத்தம் செய்ய முனைந்தார். அங்கு ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது.
கழிவறை கதவை திறந்தபோது, அதற்கு பின்னால் ஒரு படிக்கட்டு இருப்பது தெரிந்தது. பயத்துடன் அந்த படிக்கட்டில் இறங்கிய லீ, ஒரு பெரிய அறையை கண்டறிந்தார். அந்த அறையில் மினி பார் மற்றும் உயர்தர சரக்குகள் இருந்தன. அறையின் ஒரு மூலையில், வீட்டின் முந்தைய உரிமையாளர் ஜாங் இருப்பது தெரிந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். லீ உடனடியாக ஜாங்கை வெளியேற சொன்னார். ஆனால் ஜாங், வீட்டை விற்ற பத்திரத்தில் இந்த பேஸ்மென்ட் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே அது தனக்கு சொந்தமானது என்றும் வாதிட்டார். இதன் விளைவாக விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது.
நீதிமன்றம் லீக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, ஜாங் உடனடியாக அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், இத்தனை நாள் தங்கியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த சம்பவம் சீனா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.