அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கான உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதன்மூலம், அந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த அமெரிக்காவின் நிதியுதவி முற்றிலும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்காக ஐ.நா.வுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த அமைப்பின் சில துணை அமைப்புகள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு, யூத விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன. இதன் காரணமாக, அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதாக டிரம்ப் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்வி, அறிவியல், கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவான யுனெஸ்கோ, பலஸ்தீன அகதிகள் நலனுக்கான யுஎன்ஆர்டபிள்யுஏ ஆகிய அமைப்புகளுக்கும் வழங்கப்படும் உதவிகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். குறிப்பாக, யுஎன்ஆர்டபிள்யுஏ-வுக்கு இனிமேலும் நிதியுதவி அளிக்க முடியாது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து யூத விரோத மற்றும் இஸ்ரேல் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் நிகழ்ந்த தாக்குதலில் அதன் பணியாளர்கள் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஹமாஸ் குழுவின் ஆயுதக் கிடங்குகளாக யுஎன்ஆர்டபிள்யுஏ நிலைகள் பயன்படுத்தப்படுவதாகவும், அந்த அமைப்பில் ஹமாஸ் உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தரப்புகளை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பாதுகாக்கிறது எனவும், யுனெஸ்கோ தொடர்ந்தும் யூத விரோத செயல்பாடுகளில் ஈடுபடுகிறது எனவும் குறித்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்தும், யூத வரலாற்றை அழிக்கிறது என்ற காரணத்தினால் யுனெஸ்கோவிலிருந்தும் விலகின. அந்த நேரத்தில் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இருந்தார். பின்னர், 2021ம் ஆண்டு ஜோ பைடன் தலைமையிலான அரசு அமெரிக்காவை மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இணைத்தது.
இந்த சூழலில், 2024 நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தனது கடுமையான கொள்கைகளை மீண்டும் செயல்படுத்தி வருகிறார். சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாடு கடத்துவது, அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் விதியை நீக்குவது, கனடா மற்றும் மெக்ஸிகோவின் இறக்குமதிப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பது போன்ற பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து மீண்டும் விலகும் உத்தரவையும் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.