27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

சம்பந்தன் அவர்கள் என்னை வடமாகாண முதலமைச்சராக வர கட்சிக்கு அறிமுகப்படுத்தியதால் மாவை சற்று மனவருத்தப்பட்டார். அவரின் நிலை பற்றி அறிந்த பின் எனக்கும் மனவருத்தந்தான். தனது 16 அல்லது 17வது வயதில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர் மாவை. கட்சிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் விஸ்வாசமாக நடந்து கொண்டவர். பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். நல்ல பேச்சாளர். அவர் முதலமைச்சராக வர ஆசைப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சூழல் என்னை முதலமைச்சர் ஆக்கியது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராசாவின் மறைவுக்கு அவர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அஞ்சலிக் குறிப்பில்-

நான் முதன் முதலில் மாவையுடன் அறிமுகமானது 1979ம் ஆண்டில். நான் அப்போது மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி சக மட்டக்களப்பு நீதவானாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். என் நண்பர் சட்டத்தரணி மு.சிவசிதம்பரம் ஒரு வழக்கில் ஆஜரானார். “சேர்! இவர் மாவை சேனாதிராஜர் அவர் காசி ஆனந்தன்” சந்தேக நபர்கள் மற்றவர்களையும் மன்றுக்கு அறிமுகப்படுத்தினார். “இவர்களை ஆதாரமில்லா குற்றச்சாட்டுக்களின் பேரில் ஒரு வருட காலத்திற்கு மேலாக சிறையில் அடைத்து வைத்துள்ளது அரசு” என்றார்.

“முக்கிய ஆவணங்கள் சில பெறப்பட வேண்டியதால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமாகியுள்ளது” என்றார் அரச சட்டத்தரணி.

பதியப்பட்ட ஆவணங்களை வாசித்துப் பார்த்தேன். “நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட முதல் தினத்தில் இவர்கள் தங்கள் குற்றத்தை ஏற்றிருந்தால் இன்னும் சில மாதங்களில் இவர்கள் சிறையில் இருந்து விடுதலை அடைந்து வெளிவர வேண்டுமே! நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கு ஆகக் கூடிய தண்டனை இரண்டு வருட கால சிறைத் தண்டனை. இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையே. ஏன்?” என்றேன்.

“இவர்கள் மிகவும் மோசமானவர்கள். புலிகளுடன் தொடர்புடையவர்கள்” என்று அரச சட்டத்தரணி கூறினார்.

“நீங்கள் அவர்கள் பற்றி செய்யும் விமர்சனம் இருக்கட்டும். இன்னும் ஒரு மாத காலம் தருகின்றேன். அன்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அவர்களுக்குப் பிணை அளிக்கப்படும்” என்றேன்.

அடுத்த தவணை வழக்கு அழைக்கப்பட்ட போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மதிய உணவின் பின்னர் குறித்த வழக்கில் எனது தீர்மானம் தரப்படும் என்று கூறி உரிய நேரத்தில் மதிய போசனத்திற்கு நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளையின் போது சிரேஸ்ட சட்டத்தரணியும் அப்போதிருந்த நீதிஅமைச்சர் K.W.தேவநாயகம் அவர்களின் சகோதரருமான திரு.நவரட்ணராஜா அவர்கள் 10,12 சட்டத்தரணிகளுடன் என்னை வந்து என் தனியறையில் சந்தித்தார்.

“சேர்! இன்று மாவை சேனாதிராஜா வழக்கில் உங்கள் தீர்மானத்தைத் தர இருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு இளம் நீதிபதி. முதன் முதலாக இங்கு மட்டக்களப்புக்கே நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள். வந்து சில மாதங்களே ஆகின்றன. மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன் போன்றவர்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைக்கும் பயங்கரவாதப் பேர் வழிகள். அவர்களுக்கு தயவு, தாட்சண்யம் காட்டக் கூடாது. உங்கள் வருங்கால நீதிபதி வாழ்க்கை நல்லாய் இருக்க வேண்டும் என்று தான் உங்களுக்கு அன்புடன் எங்கள் இந்தக் கருத்தைக் கூற வந்துள்ளோம். எந்த வகையிலும் அவர்களுக்கு பிணை அளிக்கப்படக் கூடாது. அளித்தால் விளைவுகள் நன்றாக இருக்கா” என்றார்.

நான் உடனே எழுந்து அவர்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கி “நீங்கள் யாவரும் எனது வருங்காலத்தை உத்தேசித்து எனக்கு அறிவுரை வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி! நன்றி!” என்று கூறிவிட்டு வழியனுப்பினேன்.

மதிய இடைவேளைக்குப் பின் மன்று கூடிய போது அரச சட்டத்தரணியிடம் “குற்றப் பத்திரிகை இன்று தாக்கல் செய்கின்றீர்களா?” என்று கேட்டேன். “இல்லை” என்றார். “நான் சென்ற தடவையே கூறியிருந்தேன். இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்;டால் பிணை அளிப்பதாகக் கூறியிருந்தேன். நீங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ஆகவே சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் பிணை அளிக்கின்றேன். அரசானது குற்றப்பத்திரிகை பதிய ஆயத்தமானதும் சந்தேக நபர்களை மன்றுக்கு அழைக்கலாம்” என்று கூறி பிணை விபரங்களை மன்றுக்குத் தெரியப்படுத்தினேன்.

குறித்த குற்றப் பத்திரிகை என்றுமே அதன் பின்னர் தாக்கல் செய்யப்படவில்லை. காரணம், கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை. ஐந்து வருடங்கள் மட்டக்களப்பில் தரித்து நிற்க வேண்டிய நான் ஓரிரு வாரங்களில் சாவகச்சேரிக்கு வேண்டுமென்றே மாற்றப்பட்டேன்.

அதன் பின்னர் பல இடங்களில் மாவையைச் சந்தித்துள்ளேன். என்றுமே அவர் என்னுடன் அன்புடனேயே பேசுவார். அவர் வெறும் தமிழ் இனவாதி அல்லாமல் தமிழ்த் தேசியத்தின் தூணாகவே எனக்குப் புலப்பட்டார். அரசியலுக்கு வந்த பின்னர் அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. எப்பொழுதும் ஒரு சகோதர வாஞ்சையுடனேயே அவர் என்னுடன் பழகினார். எந்தக் காரணத்தினாலும் எமக்குள் மனக் கசப்பு ஏற்பட்டதில்லை.

அவருக்குப் பதிலாக என்னைத் திரு.சம்பந்தன் அவர்கள் வடமாகாண முதலமைச்சராக வர கட்சிக்கு அறிமுகப்படுத்தியதால் மாவை சற்று மனவருத்தப்பட்டார். அவரின் நிலை பற்றி அறிந்த பின் எனக்கும் மனவருத்தந்தான். தனது 16 அல்லது 17வது வயதில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர் மாவை. கட்சிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் விஸ்வாசமாக நடந்து கொண்டவர். பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். நல்ல பேச்சாளர். அவர் முதலமைச்சராக வர ஆசைப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சூழல் என்னை முதலமைச்சர் ஆக்கியது.

ஒரு கட்சி அன்பர் என்னிடம் “ஐயா! நீங்கள் மாவையின் இடத்தைப் பறித்துவிட்டீர்களே!” என்றார். “தயவு செய்து இது பற்றி என்னுடன் பேசாதீர்கள். திரு.சம்பந்தனிடம் இது பற்றிக் கேளுங்கள்” என்றேன். “நான் ஆறு மாதங்களுக்கு மேலாக அரசியல் எனக்கு வேண்டாம் என்று தவிர்த்துக் கொண்டு வந்திருந்தேன். திரு.சம்பந்தன், திரு.ஆனந்தசங்கரி, திரு.ஸ்ரீதரன், திரு.சித்தார்த்தன், திரு.பிரேமசந்திரன், திரு.செல்வம் அடைக்கலநாதன், திரு.சுமந்திரன், திரு.மனோகணேசன் போன்ற பலர் என் இல்லம் தேடி வந்து வற்புறுத்தியதாலேயே நான் தேர்தலில் நிற்க ஒப்புக் கொண்டேன். மாவைக்கு முதலமைச்சராக வர ஆசை இருந்தது என்பது பற்றி உண்மையில் எனக்கொன்றும் அப்போது தெரியாது. திரு.சம்பந்தன் அவர்கள் தன் உறவினரான திரு.வித்தியாதரனையே முதலமைச்சராக்க நினைத்திருந்தார் என்று தான் எனக்குக் கூறப்பட்டது. எனினும் குறித்த அன்பர் சம்பந்தனிடம் போய் “ஏன் மாவையைத் தவிர்த்து விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கினார்கள் என்று கேட்டிருக்கின்றார். நான் அறிந்த வரையில் திரு.சம்பந்தன் அவர்கள் பின்வருமாறு அவருக்குப் பதில் அளித்திருந்தார்.” நாம் யாவரும் சமமானவர்களே என்று நாங்கள் தவறாக நினைக்கின்றோம். சட்டத்தின் முன் நாம் யாவரும் சமமே. ஆனால் அதன் அர்த்தம் சட்டம் யாவருக்கும் சம உரிமைகளைக் கொடுக்கின்றது. அதற்காக யாவரும் சமம் என்று கொள்ள முடியாது. ஒரு வைத்தியரும் ஒரு கமக்காரனும் சட்டத்தின் முன் சமமே என்பதால் வைத்தியரை விவசாயம் செய்யச் சொல்லியோ, கமக்காரரை மருத்துவம் செய்யச் சொல்லியோ கேட்க முடியாது; கேட்கக் கூடாது. மாவை ஒரு பேரணியின் முன்னின்று அதனை வழிநடத்திச் செல்லக்கூடியவர். கட்சிக்கு விஸ்வாசமானவர். ஆனால் முதலமைச்சர் பதவிக்கென்று பல கடமைகள் உண்டு. அவற்றைச் செய்யக் கூடியவர் இவர் என்று தான் நாங்கள் திரு.விக்னேஸ்வரனை அழைத்திருந்தோம்” என்று கூறியதாகக் கேள்வி.

இதன் காரணத்தால் எனக்கும் மாவைக்கும் இடையில் போட்டி பொறாமை என்று பத்திரிகைகள் கூறத் தலைப்பட்டிருந்தாலும் சகல விதங்களிலும் மாவை என்னுடன் மிகவும் அன்புடனும் பண்புடனுந்தான் நடந்து கொண்டார். என்னைப் பொறுத்த வரையில், நான் அறிந்த வகையில் மாவை சமரசத்தையும் சமாதானத்தையுமே விரும்பினார். எமது கட்சியின் தேசியப் பெருவிழாவிற்கு சென்ற ஆண்டு அழைத்த போது அவர் பார்வையாளர்களில் ஒருவராக வந்து முன் வரிசையில் இருந்து நிகழ்ச்சிகளை கடைசி வரையில் இருந்து கேட்டு இரசித்துச் சென்றார்.

எல்லா விதங்களிலும் எனக்கு உறுதுணையாகவே அவர் இருந்தார். அவரின் பிரிவு மனதில் ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. பழம் பெரும் தமிழ் அரசியல்வாதி ஒருவரை இழந்து நிற்கின்றோம்.

ஒரு நல்ல நண்பரை நான் இழந்துள்ளேன்! மாவையின் ஆத்மா இறைவனடி சேர்வதாக!- என குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

1947ஆம் ஆண்டு உறுதி…80களில் போராளிகள் இடித்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரையாக முளைத்த கதை: முழுமையான பின்னணி

Pagetamil

ஹிஸ்புல்லா, லெபனானை வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல்

east tamil

மின்தடைக்கான காரணத்தை நாளை சொல்வார்களாம்!

Pagetamil

டிரம்பின் தடைக்கு ஐசிசி எதிர்ப்பு

Pagetamil

மாவையின் இறுதிக்கிரியையில் சர்ச்சை பதாகை: பொலிசில் முறைப்பாடு!

Pagetamil

Leave a Comment